அகநானூறு - 272. குறிஞ்சி
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
5 |
தனியன் வந்து, பனி அலை முனியான், நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி அசையா நாற்றம் அசை வளி பகர, துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
10 |
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, 'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, உருவச் செந் தினை நீரொடு தூஉய், நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
15 |
என் ஆவது கொல்தானே பொன் என மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய மணி நிற மஞ்ஞை அகவும் அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 272. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க