அகநானூறு - பாயிரம்
நின்ற நீதி, வென்ற நேமி, பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண், அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ, அருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை, |
5 |
ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள், நெடிய வாகி யடிநிமிர்ந் தொழுகிய இன்பப் பகுதி யின்பொருட் பாடல், நானூ றெடுத்து நூல்னவில் புலவர், களித்த மும்மதக் களிற்றியா னைநிரை, |
10 |
மணியடு மிடைந்த அணிகிளர் பவளம், மேவிய நித்திலக் கோவை, யென்றாங்கு, அத்தகு பண்பின் முத்திற மாக முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக் கருததெனப் பண்பினோ ருரைத்தவை நாடின், |
15 |
அவ்வகைக் கவைதாம் செவ்விய வன்றி, அரியவை யாகிய பொருண்மை நோக்கிக், கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடையாற், கருததினி தியற்றி யோனே பரித்தேர் |
20 |
வளவர் காக்கும் வளநாட் டுள்ளும் நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற், கெடலருஞ் சிறப்பின், இடையள நாட்டுத் தீதில் கொள்கை மூதூ ருள்ளும், ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் |
25 |
செம்மை சான்ற தேவன் தொன்மை சான்ற நன்மை யோனே. |
இத் தொகைக்குக் கருத்து அகவலால் பாடினான் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - பாயிரம், இலக்கியங்கள், சிறந்த, அகநானூறு, பாயிரம், யோனே, இடையள, சான்ற, கொள்கை, எட்டுத்தொகை, சங்க, தொகைக்குக்