நல்வழி - அவ்வையார் நூல்கள்
இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி. |
31 |
மொழியிலும், நெறியிலும் வழுக்கி விழும் பாட்டை அதற்குப் போடப்பட்டுள்ள இசை நல்ல பாட்டாகக் காட்டிவிடும். மிகுதியும் ஒழுக்கம் உடையவராக வாழ்தல் உயர்குலப் பிறப்பை விட மேலானது. தயங்கும் வீரத்தை விட நோய் பற்றிக்கொண்டிருக்கும் உடம்பு மேலானது. குடும்பத்துக்கு வரும் பழியைப் பற்றிக் கவலைப்படாமல் நடந்துகொள்ளும் மனைவியோடு வாழ்வதை விடத் தனிமை வாழ்க்கை மேலானது.
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து. |
32 |
ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் ஆற்றில் இருக்கும் மணல்-மேடும், நீர் தேங்கி நிற்கும் மடுவும் இடம் மாறுவது உண்டு. அதுபோல, உலக மக்களே! எண்ணிப்பாருங்கள். தரும் தருமத்தைச் செய்திருந்தால் அந்தத் தருமச் செயல் நமக்குச் சோறு போடும். தருமம் செய்யாவிட்டால் சோறு இல்லாமல் தண்ணீரைத் தான் உண்ணவேண்டி வரும். தருமம் செய்வதால் உள்ளத்து நீர்மை பெருமை கொண்டு உயரும். வீறு = பெருமிதம், தருவது தருமம் (தமிழ்ச்சொல்) தா < தரும்+அம்.
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில் பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். |
33 |
வெட்டும் கருவிகள் மெத்து மெத்து என்று இருக்கும் பொருள்களை வெட்டி வெல்ல முடியாது. மிகப் பெரிய ஆண்யானைமீது ஊடுருவிச் செல்லும் ஈட்டிக்கோல் பஞ்சில் பாயாது. நீண்ட இரும்பாலான கடப்பாரைக்கு நெக்கு விடாத கல்லுப் பாறை பச்சை மரத்து வேர் இறங்கும்போது நெக்கு விட்டுப் பிளந்துவிடும். (மென்சொல்லை வன்சொல் வெல்ல முடியாது) (மென்சொல் வன்சொல்லை வென்றுவிடும்)
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது அவன்வாயிற் சொல். |
34 |
கையிலே பொருள் வைத்திருப்பவன் ஆயின், அவன் கல்வி அறிவு இல்லாதவன் ஆனாலும், அவன் வரும்போது அவனிடம் எல்லாரும் சென்று எதிர்கொண்டு வரவேற்பர். கையில் பொருள் இல்லாத ஏழையாக வாழ்ந்தால், அவனை மனைவியும் விரும்பமாட்டாள்; பெற்றெடுத்த தாயும் விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் செல்லாக் காசுகள் ஆகிவிடும்.
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. |
35 |
பூ பூக்காமலேயே காய் காய்க்கும் மரங்களும் உள்ளன. அதுபோல பெற்றெடுத்த பிள்ளைகளுக்குள்ளேயும் தாய் தந்தையர் ஏவாமல் அவர்களின் குறிப்பினை அறிந்து நடந்துகொள்ளும் மக்களும் உள்ளனர். (பொதுவாழ்வில், பிறர் குறிப்பறிந்து நடந்துகொள்ளும் மக்களும் உள்ளனர்) தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உண்டு. அதுபோல, நன்கு எடுத்துச் சொன்னாலும் பேதைக்கு அறிவு தோன்றாது. நாறா = நாற்றாக முளைக்காத, தூவா விரைத்தல் = தூவி விதைத்தல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்வழி - அவ்வையார் நூல்கள், நூல்கள், நன்று, நெக்கு, நடந்துகொள்ளும், அதுபோல, மக்களும், வரும், நல்வழி, மேலானது, தருமம், அவன், அவ்வையார், பொருள், விரும்பமாட்டாள், அறிவு, பெற்றெடுத்த, பேதைக்கு, தூவி, முளைக்காத, | , உள்ளனர், தோன்றாது, தூவா, எல்லாரும், காய்க்கும், பாறை, ஆற்றில், இருக்கும், மேடும், ஒழுக்கம், இலக்கியங்கள், கல்வி, உண்டு, தரும், வெல்ல, முடியாது, மெத்து, பாயாது, சோறு, பஞ்சில், ஆனாலும்