நல்வழி - அவ்வையார் நூல்கள்
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம். |
26 |
மானம் = தன்மான உணர்வு, குலம் = குலப்பெருமை பற்றிய சிந்தனை, கல்வி = கற்ற கல்வியின் திறமை, வண்மை = உடல் வளம், அறிவுடைமை = எண்ணிப் பார்க்கும் அறிவு, தானம் = கொடை வழங்கும் வள்ளல் தன்மை, தவம் = தவம் செய்யும் அறநெறி, உயர்ச்சி = உயர்வு பற்றிய எண்ணம், தாளாண்மை = செயலாற்ற முயலுதல், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் = தேனைப் போல் பேசும் பெண்மீது ஆசைப்படுதல் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போம்.
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். |
27 |
ஒன்றைப் பெறவேண்டும் என்று நினைத்துச் செயல்படும்போது, அது வந்து சேராமல் மற்றொன்று நம்மிடம் வந்து சேர்வதும் உண்டு. அதுவன்றி, நினைத்த செயலே கைகூடி வருதலும் உண்டு. ஒன்று கைகூடி வரவேண்டும் என்று நினையாதபோதே தானே அதுவாகவே முன்வந்து நிற்றலும் உண்டு. அனைத்தும் எனை ஆளும் ஈசன் செயல். என்னால் ஒன்றும் இல்லை.
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான். |
28 |
உண்பது நாள் ஒன்றுக்கு ஒரு நாழி அளவு தானியத்தால் சமைத்த உணவு. இடையில் அற்றம் மறைக்க ஒருவர் உடுத்திக் கொள்வது நான்குமுழத் துணி. என்னுவன எண்பது கோடி நினைவுகள். கண் புதைந்துபோயிருக்கும் மாந்தர்கள் நாம். நாம் குடும்பம் நடத்துகிறோமே அந்தக் குடிவாழ்க்கையானது, மண்ணால் செய்த பாண்டம் போன்றது. (நம் உடம்பும் மண்ணால் செய்த பாண்டம் போன்றது. எப்போது கீழே விழுந்து உடையுமோ தெரியாது). இந்த உண்கலம் போலச் சாம் துணையும் நம் உடம்புக்கும், வாழ்க்கைக்கும் கவலைகள்தாம். சஞ்சலம் = கவலை, கலம் = பாண்டம், பாத்திரம்.
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர். |
29 |
மரம் பழுத்தவுடன் வௌவாலை “வா” என்று கெஞ்சிக் கேட்டு அழைப்பார் யாரும் அந்த மரத்தடியில் இருப்பதில்லை. (வௌவால் தானே தேடிக்கொண்டு வந்துவிடும்). கன்றை உடைய பசு தன் கன்றுக்கும் கறப்பவர்க்கும் பால் அமுதத்தைச் சுரந்து வழங்கும். அதுபோல ஒருவர் தன்னிடம் உள்ள பொருளை தனக்கென்று ஒளித்து வைத்துக்கொள்ளாமல் வழங்குவாரேயானால் உலகத்தில் உள்ளவர்களெல்லாம் அவருக்கு உறவினர் ஆகிவிடுவர்.
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி. |
30 |
அவரவர் முன் செய்த வினையை அவரவரே பின்னர் அனுபவிப்பர். இது தலைவிதி. தலைவிதி என்பது தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமன் அவரவர் தலையில் பொறித்து வைத்திருக்கும் விதி. வேந்தே! உன்னை ஒருவன் தண்டித்தால் அதற்காக அவனை என்ன செய்வது? உன் தலைவிதி அப்படி இருக்கிறதே. ஒருவனுக்கு இது நேரக்கூடாது என்று ஊரெல்லாம் கூடி வெறுத்தாலும் அவன் தலையில் எழுதியது போய்விடுமா? (எல்லால் தல்லைவிதிப்படி நடக்கும்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்வழி - அவ்வையார் நூல்கள், நூல்கள், உண்டு, நல்வழி, செய்த, பாண்டம், தலைவிதி, தவம், வந்து, அவ்வையார், கல்வி, நாம், மண்ணால், இலக்கியங்கள், ஒருவர், கோடி, உண்பது, நாழி, எண்பது, போன்றது, மரம், அவரவர், தலையில், | , விதி, வெறுத்தாலும், வௌவாலை, வேந்தே, ஊரெல்லாம், தானே, கைகூடி, கசிவந்த, மேல், காமுறுதல், பத்தும், தேனின், தாளாண்மை, தானம், வண்மை, உயர்ச்சி, வந்திடப், பறந்து, குலம், ஈசன், செயல், மானம், முன், ஒன்றை, போம், பற்றிய, வழங்கும், அறிவுடைமை