சிங்கப்பூரில் தமிழ் நாடகம்.... தற்குறிகளின் கொலு - நாடகக் கலைக் கட்டுரைகள்
சிறுபான்மையினமாக இருப்பதால் உள்ளுக்குள் இருக்கும் அளவுக்குமீறிய பயத்தையும் நம்பிக்கையின்மையையும் அரசாங்கம், அரசாங்கத் தலைவர்கள் மேல் காட்டும் பற்றாகவும் நன்றியாகவும் தங்கள் இலக்கியப் படைப்புகளிலும் நிகழ்கலைகளிலும் வெளிப்படுத்துகிறார்கள். தமிழ் கலைஞர்கள் தங்கள் உண்மையான நிலையை, சிங்கப்பூர் அடையாளத்தைத் தேடுவதற்கு மொழி, இனம், கலாசாரம், அரசியல் உரிமைகள், வரலாறு போன்ற கூறுகளின் பரிமாற்றங்கள் - மோதல்களை தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தப் பயப்படுகிறார்கள்.
ஒரு நிகழ்கலையாக நாடகத்தின் உள்ளுயிர் வடிவம் என்பது வாழ்வின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பரிமாறிக்கொள்வதாகவும் வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ஆனால் படைப்பின் தரம், படைப்பாளரின் அறிவாற்றல், கலைத்திறம், நிபுணத்துவத்தைப் பொறுத்துத்தான் இருக்கும். சிங்கப்பூர் தமிழ் கலைஞர்களிடம் விமர்சன உணர்வு குறைவாகவே இருப்பதோடு, உள்ளொளித் தேடலோ, சுய சிந்தனையோ இல்லாது இருப்பதால் அவர்களின் வெளிப்பாடு தேங்கிவிட்டது. சிங்கப்பூர் தமிழ் மேடைக்கலைஞர்கள் பாரம்பரிய அல்லது நவீன நாடக அரங்கின் குறியீடுகள், ஒளியமைப்பு, ஒலியமைப்பு, ஒப்பனை, அலங்காரங்களை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இன்றும் மேலோட்டமான சபா நாடக சிந்தனையே தமிழ் மேடையை ஆக்கிரமித்திருக்கிறது. இதனால் நாடகப் படைப்பு - நடிப்பு என்பது நீளமான அறிவுரை வசனங்களும் முகத்தில் உணர்ச்சிகளை அதீதமாக வெளிப்படுத்துவதுமாகவே அமைந்து விட்டது. இல்லாவிட்டால் தமிழ் சினிமாவை பிரதிபலிப்பதாக இருக்கிறது. நாடகப் படைப்பின் அடிப்படைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மற்ற மொழி நாடக வளர்ச்சியைக் கண்டு இரசனையை வளர்த்துக் கொள்வதுமில்லை.
சிங்கப்பூர் தமிழ் நாடகங்கள் வட்டார - தேசிய அடையாளத்தைப் பெறவேண்டுமானால், தங்கள் சுய கலாசார, பாரம்பரிய கலைவடிவங்களுடன் தொடர்ச்சியான ஊடுறுவலை ஏற்படுத்தி, மேடை வடிவங்கள், பாத்திரங்கள், உயிரோட்டம் குறித்த நவ நாடகத்தன்மைகளைப் பெற வேண்டும். புராதன கலைவடிவத் தேடலும் நவீன மேடைக்கு, ஒரு மொழி மரபைத் தேடுவதாகவும் இரண்டுக்கும் இடையிலான தனிச்சிறப்பைக் காண்பதாகவும் அமையும். ஆனால் தமிழ் நாடக திறன்களை பயிற்றுவிப்பதற்கான இலக்கியமோ பயிற்சி முறைகளோ இன்றுவரை இல்லை/வகுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் மேடைக்கலை நிபுணர்களும் மேற்கத்திய மேடைத் திறன்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். மேடை நாடகம் ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே, அமெச்சூர் கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கும் சிங்கப்பூரில், தமிழ் நாடகத்துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் எவரும் இல்லை, பெற்று முழுநேரக் கலைஞனாக ஜ“விக்கும் சூழலும் இல்லை. எனினும் நாடகத்துறையில் முறையான பயிற்சி பெற்ற இளங்கோவன், தமிழ் நாடகத்துக்கு ஒரு தரத்தை ஏற்படுத்தி வருகிறார் என்பதைக் குறிப்பிடவேண்டும்.
பொதுவாகவே சிங்கப்பூர் தமிழ் மேடைக்கலை சிங்கப்பூர் தமிழனின் நிஜங்களை பிரதிபலிப்பதாக இல்லை. வரலாறு, கலாசாரம், மொழி, கல்வி, சமயம், கலைத் திறம், சமூக-அரசியல் நிலை எதனையுமே விமர்சிப்பதே இல்லை, பிரபலமான தமிழ் சினிமா கலாசாரத்தில் மூழ்கியிருக்கும் தமிழர்களுக்கு சமூக விழிப்புணர்வைத் தூண்டுவதாகவும் இல்லை.
இப்படி, தற்குறிகளின் கொலுவுக்கு நாளையைப் பற்றிய பயங்களோடு தாலாட்டுப் பாடிக்கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ் படைப்பாளிகளும் அவர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளும் இருக்கும் வரை தென்கிழக்காசியாவில் தமிழனின் குரல் அமுக்கப்ட்டுக்கொண்டேதான் இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிங்கப்பூரில் தமிழ் நாடகம்.... தற்குறிகளின் கொலு - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், சிங்கப்பூர், இருக்கும், இல்லை, நாடகம், சிங்கப்பூரில், நாடக, தங்கள், தற்குறிகளின், மொழி, கட்டுரைகள், கொலு, நாடகக், கலைக், பயிற்சி, பிரதிபலிப்பதாக, நாடகப், ஏற்படுத்தி, மேடை, நாடகத்துறையில், சமூக, தமிழனின், பெற்ற, மேடைக்கலை, அரசியல், சினிமா, இருப்பதால், கலைகள், arts, drama, கலாசாரம், வரலாறு, பாரம்பரிய, படைப்பின், வேண்டும், என்பது, நவீன