நாடகத் தமிழ் - நாடகக் கலைக் கட்டுரைகள்
இனித் தமிழ் நாடகமானது மிகவும் இழிந்த நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கடைத்தேறி முன்னுக்கு வந்ததைப் பற்றி எழுதுகிறேன். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக பூனாவிலிருந்து ஒரு மஹராஷ்டிர நாடகக் கம்பெனியார் தஞ்சாவூருக்கு வந்து சில நாடகங்களை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த கோவிந்தசாமி ராவ் என்ற மஹராஷ்டிரர் அந்தக் கம்பெனியாரைப்போல் தமிழில் நாடகங்கள் நடத்த வேண்டுமென்று தீர்மானித்துத் தஞ்சாவூரிலிருந்த சில மஹாராஷ்டிரர்களை ஒருங்கு சேர்த்து அவர்களுக்குத் தாம் அறிந்தபடி நாடகமாடக் கற்பித்து, "மனமோகன நாடகக் கம்பெனி" எனும் ஒரு நாடகக் கம்பெனி ஏற்படுத்தி முதலில் தஞ்சாவூரில் நடத்தினார். அங்கே இவர்கள் நாடகத்திற்குக் கொஞ்சம் ஆதரவு கிட்டவே, அந்தக் கம்பெனியைச் சென்னைக்கு அழைத்துக்கொண்டு வந்து இங்குத் தமிழில் நாடகங்களைச் செங்காங்கடைக் கொட்டகையில் நடத்தினார். ஏறக்குறைய இதே சமயத்தில் பல்லாரியில் வக்கீலாயிருந்த கிருஷ்ணமாச்சாருலு என்பவர் சில தெலுங்கு நாடகங்களை எழுதி, பல்லாரியில் முதலில் ஆடிவிட்டுப் பிறகு சென்னையில் 1891-வது வருஷம் மூன்று நாடகங்களை நடத்தினார். அவைகளில் கடைசி நாடகத்தைப் பார்த்த நான், தமிழ் நாடகங்களை எழுதி அவைகளில் நடிக்க வேண்டுமென்று ஆசை கொண்டவனாய் அவ்வருஷம் சுகுண விலாச சபை என்னும் தமிழ் நாடக சபையை எனது பால்ய நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்தேன். இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளாகச் சென்னையில் பல "அமெச்சூர்" நாடக சபைகள் (அதாவது வேடிக்கைக்காக நாடகங்களை நடத்தும் சபை) பரவலாயின. இவைகள் மூலமாகத் தமிழ் நாடகம் புத்துயிர்பெற்றது என்றே சொல்லவேண்டும். இச்சபைகள் மூலமாகத் தமிழ் நாடகமானது பலவிதங்களில் சீர்திருத்தப்பட்டது. அவைகளில் முக்கியமான சிலவற்றை இங்கு எழுதுகிறேன். இரவெல்லாம் ஆடும் நாடகங்கள் போய், இரவு 9 மணிக்கு ஆரம்பித்து நாடகங்களைச் சுமார் 4, 5 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பது வழக்கத்தில் வந்தது. ஒவ்வொரு காட்சியிலும் காட்சிக்குத் தக்கபடி திரைகளும் பக்கபடுதாக்களும் மேல் ஜாலர்களும் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு நாடகத்திலும் கதையின் காலதேச வர்த்தமானப்படி நடிகர்களும், நடிகைகளும் ஆடை ஆபரணங்களைப் பூணும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. சங்கீதமானது தக்க இடங்களில் தான் உபயோகிக்கப்படவேண்டும் என்பது விதியாயிற்று; பின்பாட்டு அடியோடு ஒழிக்கப்பட்டது. ஜாலர்கள், தாளங்கள் சங்கீதத்தினின்றும் விலக்கப்பட்டன. பக்கவாத்தியக்காரர்கள் பக்க படுதாக்களில் இருந்து மறைந்தே வாசிக்க வேண்டும் என்பது வழக்கமாயிற்று; விளக்குகளை மேடையில் எங்கே பார்த்தாலும் வைப்பதும் கூரையினின்றும் தொங்க விடுவதும் முற்றிலும் நீக்கப்பட்டது. இன்னும் இப்படிப்பட்ட பல சீர்திருத்தங்களை 'அமெச்சூர்' சபைகள் வழக்கத்தில் கொண்டுவர, அவைகளைப் பார்த்து ஜ"வனத்திற்காக நாடகங்கள் ஆடும் சபைகளும் விருத்தி அடைந்தன.
பல புதிய நாடகங்கள் எழுதப்பட்டன. மேனாட்டு ஷேக்ஸ்பியர் முதலிய மகா நாடகக் கவிகளின் நாடகங்கள் தமிழ் மொழியில் பெயர்க்கப்பட்டன. சம்ஸ்கிருத நாடகங்களில் சிலவும் மொழி பெயர்க்கப்பட்டுத் தமிழ் அரங்கு ஏறின. இவ்வாறு தமிழ் நாடகங்கள் தலையெடுத்து முன்னேற்றம் அடையும் காலத்தில் திடீரென்று 'வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்தது' என்பதைப் போல் பேசும் படங்கள் நமது தேசத்தில் புகுந்து தமிழ் நாடகத்தையே அமிழ்த்திவிட்டன என்பது எல்லா நாடக அபிமானிகளும் அறிந்த விஷயமே. அமிழ்த்தின என்பதைக் கவனிக்கவும். அழித்தன என்று நான் கூறவில்லை. இதற்கு முக்கிய காரணம் சினிமாக்கள் எவ்வளவுதான் பிரபலம் அடைந்தபோதிலும் அவைகள் தமிழ் நாடகங்களை அடியுடன் அழிக்க முடியாது என்பது எனது கண்டிப்பான கருத்து. இது என்னுடைய கருத்துமட்டும் அன்று; ஐரோப்பா, அமெரிக்கா முதலிய கண்டங்களில் உள்ள கலைவாணர்களுடைய கருத்தும் ஆகும். அவர்கள் கூறுவது என்னவென்றால் நடிகர்களின் படங்களைத் திரையில் பார்ப்பதைவிட, அவர்கள் மேடையின் மீது நடிக்கும்போது நேராகப் பார்ப்பதில் 'ருசி' நாடகாபிமானிகளுக்கு எப்பொழுதும் குன்றாது என்பதாம்.
கடைசியாகத் தமிழ் நாடகத்திற்கு இப்பொழுது நல்லகாலம் வந்துவிட்டது என்றே கூறவேண்டும். வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்கள் தமிழ் முதலிய தேச மொழி நாடகங்களைச் சிறிதும் கவனிக்கவில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. அவையெல்லாம் மாறி நமது நாட்டை நாமே ஆளும் உரிமை கிடைத்த பிறகு நமது அரசியலார் தேசமொழி நாடகங்களுக்குப் பலவிதத்தில் ஊக்கமளித்துக் கைகொடுத்துத் தூக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று நான் சந்தோஷத்துடன் கூறுகிறேன். நம்மை ஆளும் ஜனநாயகத் தலைவர்கள் முக்கிய பட்டணங்களில் பொருளுதவி செய்து நாட்டு நாடகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையில் ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்; அன்றியும் சிறந்த நாடகங்களுக்குப் போட்டிப் பந்தயம் வைத்து முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகங்களுக்குப் பரிசளிக்கும் வழக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர்; மேலும் சிறந்த நடிகர்களுக்குப் பொற்பதக்கங்கள் ஆண்டுதோறும் அளித்து அவர்களை உற்சாகப்படுத்த முன்வந்திருக்கின்றனர்; இதுவரையில் தமிழ் நாடகங்களை அமிழ்த்தி வருத்திக்கொண்டிருந்த 'வினோதவரி'க் கட்டணத்தை அறவே நீக்கிவிட்டனர். இப்படிச் சொல்லிக் கொண்டு போனால் விரியும். ஆகவே, இதை நிறுத்தித் தமிழ் நாடகங்களுக்கு நற்காலம் வந்த இத்தருணத்தில் அரசாங்கத்தாரும் நாடக அபிமானிகளும் என்னென்ன விதங்களில் அவைகளை முன்னுக்குக் கொண்டு வரலாம் என்பதைப் பற்றிச் சில வாக்கியங்கள் எழுதி இச்சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.
முதலாவதாகத் தமிழ் நாடகம் இன்னும் விருத்தி அடையாததற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இப்போது நாடகம் ஆடுவதற்கு மேடைகள் போதுமானபடி இல்லாதிருப்பதேயாம். பழைய நாடக மேடைகளெல்லாம் எங்குப் பார்த்தாலும் சினிமாத் தியேட்டர்களாக மாற்றப்பட்டன. ஆகவே, முக்கியமாகப் பெரிய பட்டணங்களில் எல்லாம் நாடகம் ஆடுவதற்கு என்றே பெரிய நாடக சாலைகள் கட்டப்பட வேண்டும். தமிழ் நாட்டில் 30,000 ஜனத்தொகைக்கு மேற்பட்ட ஊர்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நாடக சாலையாவது இருக்க வேண்டும். அன்றியும் கட்டிடங்களுக்குப் பொருளுதவியும் செய்ய வேண்டும். மேலும் இந்தக் கட்டிடங்களைச் சினிமாக்களுக்கு விடக்கூடாது என்ற சட்டம் இருக்க வேண்டும் - சினிமாக்களுக்குவிட ஆரம்பித்தாலோ முடிவில் ஒட்டகத்திற்கு மூக்கு நுழைக்கக் கூடாரத்தில் இடம் கொடுத்த எஜமான் கதை போலாகும்.
இரண்டாவதாக, ஆங்காங்கு நாடகக்கலை கற்பிக்கப் பள்ளிக்கூடங்கள் ஏற்பட வேண்டும். அவைகளில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் நடிப்புக் கலை கற்பிக்க நிபுணர்களான நடிகர்களை ஏற்படுத்த வேண்டும். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை அங்குப் பயில்பவர்களைச் சோதித்துத் தேர்பவர்களுக்கு நற்சாட்சிப் பத்திரங்கள் வழங்க வேண்டும்.
மூன்றாவதாகத் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த நடிகர்களை வடஇந்தியாவிற்கும் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா முதலிய தேசங்களுக்கும் அனுப்பி அங்குள்ள சிறந்த நடிகர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கற்கச் செய்ய வேண்டும். நான்காவதாக, மற்ற மொழிகளில் உள்ள சிறந்த நாடகங்களைத் தமிழில் தக்கவர்களைக் கொண்டு மொழி பெயர்த்துத் தமிழ் அரங்கு ஏற்றவேண்டும். ஐந்தாவதாக, முதிர்வயது அடைந்தபடியாலோ அல்லது வியாதியினால் பீடிக்கப்பட்டதனாலோ நடிப்பதற்கு இயலாதபடி இருக்கும் நடிகர்களுக்கு ஜ"வனாம்சமாகவோ அல்லது உபகாரச் சம்பளமாகவோ பணம் கொடுக்க அரசாங்கத்தார் ஒரு தனி நிதி ஏற்படுத்த வேண்டும். கடைசியாக, ஆடவரும் பெண்டிரும் நாடகமாடுவதை இழிதொழிலாகக் கருதாது அதையே தங்கள் ஜ"வனோபாயமான தொழிலாகக் கொள்ள வேண்டும். குடும்பப் பெண்கள் நாடக மேடையில் ஆடும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவவேண்டும். இதில் சில கஷ்டங்கள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன்; முதலில் கணவனும் மனைவியும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் ஆடலாம். சகோதரர்களும் சகோதரிகளும் அவ்வாறே செய்யலாம். நெருங்கிய பந்துக்களும் சிநேகிதர்களும் ஒன்றாய் நடிக்கலாம். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகத் திரிந்து வந்தால் இக்காலத்தில் ஐரோப்பா முதலிய கண்டங்களில் நற்குல மாதர்கள் ஆடும் வழக்கமானது நமது நாட்டிலும் பரவும் என்பதற்குச் சந்தேகமில்லை. நாடகத் தமிழ் வாழ்க!
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடகத் தமிழ் - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், வேண்டும், நாடகங்களை, நாடக, நாடகக், நாடகங்கள், என்பது, சிறந்த, முதலிய, நாடகம், அவைகளில், ஆடும், நாடகத், நமது, நான், கொஞ்சம், ஜ", தமிழில், செய்ய, கட்டுரைகள், நாடகங்களுக்குப், கலைக், என்றே, உள்ள, எழுதி, ஆரம்பித்திருக்கின்றனர், முதலில், ஏற்படுத்த, என்பதைப், நடத்தினார், நாடகங்களைச், கொண்டு, மொழி, ஐரோப்பா, காரணம், அல்லது, அறிந்த, அமெரிக்கா, அபிமானிகளும், விஷயமே, முக்கிய, நம்மை, பட்டணங்களில், பெரிய, அன்றியும், ஆடுவதற்கு, மேலும், காலத்தில், ஆளும், இருக்க, கண்டங்களில், என்னவென்றால், ஆகவே, நடிகர்களை, மேடையில், ", வேண்டுமென்று, சமயத்தில், பல்லாரியில், சென்னையில், பிறகு, drama, அந்தக், எழுதுகிறேன், நாடகமானது, சுமார், வந்து, arts, மூன்று, எனது, கலைகள், வழக்கம், பார்த்தாலும், இன்னும், அரங்கு, விருத்தி, ஒவ்வொரு, வழக்கத்தில், இரண்டு, ஆரம்பித்து, சபைகள், மூலமாகத், முக்கியமான, இவ்வாறு