ராம நாடகம் - நாடகக் கலைக் கட்டுரைகள்
ராம நாடகம்
கு. அழகிரிசாமி
நடிப்பதற்காக எழுதவதைத்தான் நாடகம் என்று சொல்வது வழக்கம். ஆனால் படிப்பதற்காக மட்டும் என்றும் பலர் நாடகங்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த இருவகை நாடகங்களுடன், பாடுவதற்கென்றே எழுதப்பட்ட நாடகங்களும் உண்டு. அவற்றில் ஒன்றே சீர்காழி-அருணாசலக் கவிராயர் இயற்றிய ராம நாடகம். அவர் தமது நூலின் அவையடக்கத்தில், ".....இதைப் பாகவதர் படிக்கும் கீர்த்தனையாய்ச் சொன்னேன்" என்றும் நூலின் முடிவில் வாழ்த்துப் பாடும்போது, "அருணாசலக்கவி! வாழி!!" என்றும், நூலின் கடைசிப் பாடலில், "ராமன் நாடகம் இசையால் சொல்லும்கான பாகவதர் உள்ளம் களித்திட இதனைக் கேட்போர்" என்றும் கூறியிருப்பதற்கும் இயற்றப்பட்ட ஒரு நூலே என்பது உறுதியாகிறது. ஆனாலும் நூலுக்கு "ராமாயணக் கீர்த்தனைகள்" என்று பெயரிடாமல், "ராம நாடகம்" என்று அவர் பெயர் சூட்டியிருக்கிறார். அதனால் இதை வெறும் கீர்த்தனைத் தொகுதியாகக் கருதிவிடக் கூடாது என்றும் ஒரு நாடக நூலாகவே கருதவேண்டும் என்றும் ஆகிறது. மேலும் நூலின் முதல் பாடலில்.
"கம்பரா மாயணப்பாற்
கடலை உண்டு
நம்ப வரும்ராம
நாடகமாம் மாமழையை
அம்புவியில் காழி
அருணா சலமேகம்
கும்பும் உயிர்ப்பயிர்க்குப்
பெய்துவினை கொய்ததுவே"
என்று அவர் கூறுகிறார். அடுத்த பாட்டில் "ராம நாடகத்தைச் சொல்லுவேன் நான்" என்றும், அதற்கு அடுத்த பாட்டில் "ராம நாடகத்துக்கு அனுக்கிரகிப்பாயே" என்றும் சொல்கிறார். வேறு பல இடங்களில் இது ஒரு நாடகமே என்பதை உறுதிப்படுத்துகிறார்.
"பாடுவதற்காக இயற்றப்பட்டதை நாடகம் என்று சொல்வது எப்படி? ராம நாடகத்தில் வசனங்கள் இல்லையே! பாத்திரங்களைப் பேச வைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆசிரியரும் விரிவாகப் பேசுகிறாரே! அங்கம், காட்சி என்ற பிரிவினைகளும் செய்யப்படவில்லையே! இது எப்படி நாடகம் ஆகும்?" என்று பலரும் கேட்கலாம். நடிப்பதற்காக எழுதப்படும் நாடகங்களை மனத்தில் வைத்துக் கொண்டு கேட்கும் கேள்விகள் இவை. பாடுவதற்காக எழுதப்படும் நாடகங்களில் வசனங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நாடகங்களில் கதைத் தொடர்பைக் காட்ட ஆசிரியர் கூற்று இடம் பெறுவதில் தவறு எதுவும் கிடையாது. அத்துடன் காட்சிப் பிரிவினைகள் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் தோன்றிய ராம நாடகத்தில் காட்சிப் பிரிவினை செய்யப்படாததைப் போல், இன்று நம் காலத்தில் வாழ்ந்த ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்ட்டோல்டு பிரெஷ்ட் என்பவரும் காட்சிப் பிரிவினைகள் செய்யாமலே ஒரு பெரிய நாடகத்தை எழுதியிருக்கிறார். அதை ஒரு நவீன உத்தி என்று கருதும்படியும் செய்திருக்கிறார். ஆனால், நமக்கு அது பழைய உத்தியே. ராம நாடகத்திற்கு முன்பு தோன்றிய பள்ளு, குறவஞ்சி நாடகங்களிலும், ராம நாடகம் இயற்றப்பட்ட காலத்தில் தோன்றிய நொண்டி நாடகங்களிலும் காட்சிப் பிரிவினைகள் கிடையாது. வசனங்களும் கிடையாது, அந்த நாடகங்களைப் பாடியும் அனுபவித்திருக்கிறார்கள்; நடித்தும் அனுபவித்திருக்கிறார்கள். அதேபோல் ராம நாடகத்திலும் சிற்சில கட்டங்களை-சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம் போன்ற கட்டங்களை-அந்தக் காலத்தில் பலர் நடித்திருக்கவும் கூடும்.
அப்படி யாருமே நடித்திராவிட்டாலும், நடிக்க முடியாவிட்டாலும், ராம நாடகம் ஒரு நாடக நூலே என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால், ராம கதையை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நாடக ரூபத்தில் ஆசிரியர் பாடியிருக்கிறார். அதை இன்று பாகவதர்கள் பாடும் போது, நாம் கதை கேட்பது போல் இல்லை. ஒரு நாடகத்தையே கேட்டு அனுபவிக்கிறோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராம நாடகம் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகம், ", என்றும், காட்சிப், நாடக, நூலின், பிரிவினைகள், கிடையாது, இல்லை, ஆசிரியர், தோன்றிய, அவர், நாடகக், கலைக், கட்டுரைகள், காலத்தில், எழுதப்படும், நாடகங்களில், வேண்டிய, கட்டங்களை, போல், இன்று, நாடகங்களிலும், அனுபவித்திருக்கிறார்கள், வசனங்கள், அடுத்த, சொல்வது, பலர், உண்டு, நடிப்பதற்காக, கலைகள், drama, arts, பாகவதர், பாடலில், பாடுவதற்காக, எப்படி, என்பதை, பாட்டில், இயற்றப்பட்ட, நூலே, நாடகத்தில்