எனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள்
எனது நாடக அனுபவங்கள்
அழகுத் தெய்வத்தை வாழ்த்தி வணங்குவோம்
அழகுச் சோலையில் அன்புறக் கூடுவோம்
அழகின் இன்பத்தை ஆருயிர்க் கூட்டுவோம்
அழகை வாழ்வெனும் வீணையில் மீட்டுவோம்.
நாடகக் கலை
அழகின் விளக்கமே கலை; கலை என்பது உள்ளிருந்து மலர்வது; அது சிந்தனைச் சிற்பம்; உள்ளுணர்வின் கனவுக் காட்சி. இந்தக் கனவுக் காட்சியையே கவிஞன் காவியமாக்குகிறான்; பீலி பிடித்தவன் ஓவியமாக்குகிறான்; சிற்பி சிலை வடிக்கிறான்; நடிகன் மேடை மேல் நவரச பாவனை காட்டி நடிக்கிறான்.
கலைகளில் என்னை மிகவும் கவர்ந்தது நாடகமே. எனது நூல்களிற் பெரும்பான்மை நாடகமே. இளமையில் நாடகம் பார்க்காத நாள் இல்லை.
எங்கும் நாடகம்
எங்கள் ஊர் சிவகங்கை நாடகத்திற்குப் பேர்போனது. என் வீட்டுக்கு எதிரே சிவன் கோவில். இங்கே காளிதாசன், பவபூதி முதலியோர் எழுதிய நாடகங்கள் நடந்தன. அருகேயுள்ள திரௌபதியம்மன் கோயிலில் பாரதம் முழுதும் நாடகமாக நடந்தது; அரிச்சந்திர நாடகம், இராமாயண நாடகம் எல்லாம் தக்க புலவர் நடித்துக் காட்டினர். அரண்மனைப் புறங்களில் பெரிய நாடகக் கொட்டகையுண்டு. அங்கே புதுப்புது நாடகங்கள் நடந்தன. நான் பயின்ற கலாசாலையில் மாதா மாதம் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் அரிய நாடகங்கள் நடந்தன; இந்த நாடகங்களில் நான் அரசியாக நடித்து வந்தேன். எனக்கு மிகவும் பிரியமானவை ஷேக்ஸ்பியர், ஷெரிடன், மோலியர், காளிதாஸன் நாடகங்களே, சம்பந்த முதலியார் நாடகங்களையும் நாங்கள் நடித்துண்டு.
![]() |
சுத்தானந்த பாரதி |
அந்தக் காலம் சிவசாமி என்ற அரிய நாடகப் புலவர் இருந்தார். அவர் அரிச்சந்திர நாடகம் நடத்தினால் ஊரெல்லாம் கூடிப் பார்க்கும். அவர் சந்திரமதியாக வந்து மயான கண்டத்தில் லோகிதாசனை மடியில் வைத்துப் புலம்பிய போது. எல்லோரும் கண்ர் வடித்தனர். நான் முதலில் பங்கு கொண்டது சிவசாமி நாடக மன்றத்திலேதான். சிவசாமி ஒழுக்கமும் விழுப்பமும் உடையவர்; சாஸ்திரம் அறிந்தவர், அற்புதமான நடிகர்; நடனத்தில் இணையற்றவர். அவருடன் அரசராக நடித்தவர் சாம்பசிவம். இவர் வீர கம்பீரமாயிருந்தார். சிறு வயதில் இவர்கள் நாடகத்திற்கு நான் பாட்டெழுதி வந்தேன். அரிச்சந்திர நாடகத்தில் லோகிதாசனாக நடித்தேன்.
பாஞ்சாலி சபதம்
பரமேசையர், கலியாணராமையர் ஆகிய இருவரும் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தனர். அவர்கள் எங்கள் உரில் ஓராண்டு நாடகம் போட்டனர். கலியாணராமையர் எனக்குச் சிநேகமானார்; சில காட்சிகளக்குப் பாட்டெழுதச் சொன்னார். நடிகர் யாராவது வராதபோது என்னை அவர் மேடையேற்றுவார். ஒரு தரம் சுப்பிரமணிய பாரதியாருடன் நான் பாஞ்சாலி சபதம் பார்த்தேன். பாரதியார் அந்த நாடகத்தை மிக வியந்து திரைக்குள் ஓடிச் சென்று கலியாணராமையரைத் தட்டிக் கொடுத்து, 'சபாஷ் பாண்டியா! இந்தப் பாஞ்சாலி சபதம் அமரத்தன்மை பெறும்" என்று குதூகலித்தார். பாஞ்சாலி சபதத்திற்குப் பாரதியார் அமரத்தன்மை யளித்துக் காவியம் பொழிந்தார். பாரதியார், "நாடகத் தமிழை வளர், பாண்டியா" எப்போதோ கடல் கொண்ட கபாடபுரத்தில் நாடகம் இருந்ததென்று பழைய நூல்கள் நாலைந்து பெயர்களைச் சொல்லிக் கொண்டிருப்பதிற் பயனில்லை. நாடகம் தற்காலத்திற்கேற்றபடி விறுவிறுப்பாக அமைய வேண்டும்; எழுது நாடகம்" என்று என்னை ஊக்கினார். நானும் அன்று முதல் நாடக நூல்களை ஏராளமாகப் படித்து 100 நாடகங்களை எழுதித் தமிழன்னைக்கு அர்ப்பணித்திருக்கிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகம், நாடக, பாரதியார், நாடகக், நான், எனது, சிவசாமி, பாஞ்சாலி, அனுபவங்கள், சுத்தானந்த, நடந்தன, நாடகங்கள், அரிச்சந்திர, சபதம், அவர், மிகவும், கட்டுரைகள், என்னை, கவியோகி, கலைக், அமரத்தன்மை, அந்தக், கலியாணராமையர், நடிகர், drama, அரிய, கனவுக், எங்கள், நாடகமே, அழகின், கலைகள், arts, புலவர், வந்தேன்