கருவிலே குறையிருந்தால் திருத்திக் கொள்ளலாம் - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
‘‘மருத்துவத்துறை வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது. முன்பெல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருந்தால், குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இப்போது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கிறபோதே என்ன குறைபாடு என்பதைக் கண்டுபிடித்து, அதற்குரிய சிகிச்சைகளை செய்துவிட முடியும். அதற்கு அடிப்படையாக இருப்பது அல்ட்ரா ஸ்கேன் என்கிற கருவி. இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட மிக முக்கியமான சாதனம் எது என்று கேட்டால் அல்ட்ரா ஸ்கேன் என்றுதான் சொல்வேன். அதனால் ஏற்படும் நன்மைகளை நினைத்து நினைத்து தினமும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார், மகப்பேறு மருத்துவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை சௌந்தரராஜன் மகப்பேறு மருத்துவர் மட்டுமல்ல. அல்ட்ரா ஸ்கேன் சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் நிபுணர். அல்ட்ரா ஸ்கேன் சாதனத்தினால் ஏற்படும் பலன்கள் பற்றி அவர் விளக்கமாகச் சொல்கிறார்.
‘‘ஸ்கேன் செய்து கொள்வது பற்றி, அல்ட்ரா ஸ்கேன் சாதனம் பற்றி நம் மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிறக்கப் போகிற குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியத்தான் ஸ்கேன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான கருத்து. குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்வது ஸ்கேன் இயந்திரத்தின் ஒரேயரு செயல்பாடுதான். ஸ்கேனின் மற்ற செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது ஆணா, பெண்ணா என்று அறிவது மிக மிகச் சாதாரண விஷயம்தான்.
கருத்தரித்த பெண்கள் கட்டாயமாக ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்று நினைப்பதேயில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
முதலில், ஸ்கேன் செய்து பார்ப்பதையே தேவையில்லாத ஒரு விஷயமாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக, பெண்களிடம் ஸ்கேன் சாதனம் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை.
வயிற்றில் வளரும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். சில நாட்களுக்கு முன்பு பிரசவ காலத்தை நெருங்கிவிட்ட ஒரு பெண் என்னிடம் ஸ்கேன் செய்துகொள்ள வந்தார். அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி! கிட்டத்தட்ட ஒன்பது மாதத்தைத் தாண்டிவிட்ட அந்தக் குழந்தை கபாலம் இல்லாமலே வளர்ந்திருந்தது. ‘அனன்கேபாலி’ என்று அதற்குப் பெயர். மண்டையோடு இல்லாமலே வளர்ந்துவிட்ட அந்தக் குழந்தையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தலையில்லாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, தனக்கும் ஒரு அழகான குழந்தை பிறக்கப்போகிறது என்று அந்தத் தாய் எவ்வளவு கனவு கண்டிருப்பாள்? கருத்தரித்த ஒன்பது வாரங்களுக்குள் ஸ்கேன் செய்து பார்த்திருந்தாலே குழந்தையின் நிலை என்ன என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். இந்த அளவுக்கு குறைபாடுகளோடு ஒரு குழந்தை வயிற்றில் வளர்வதை விட, கருக்கலைப்புச் செய்திருக்கலாம். ஆனால் ஸ்கேன் செய்து பார்க்காமல் விட்டதன் தவறு, மண்டையோடு இல்லாமல் குழந்தை ஒன்பது மாதங்களுக்கு வளர்ந்துவிட்டது. இந்தக் குழந்தை வெகு நாட்களுக்கு வாழ முடியாது என்பதால் வயிற்றிலேயே இறந்துவிட்டது. எனவே, கஷ்டப்பட்டு சிசேரியன் செய்துதான் அந்தக் குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்தோம். இத்தனை சிரமம் நமக்குத் தேவைதானா என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இரண்டாவது காரணம், பெரியவர்களின் ஆதரவின்மை. ‘ஸ்கேனெல்லாம் எதற்கு? எங்கள் காலத்தில் நாங்கள் ஸ்கேனெல்லாம் செய்துகொண்டோமா என்ன? அஞ்சாறு குழந்தையை நாங்க பெத்துக்கலையா?’ என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் கேட்கிறார்கள்.
அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிற வாதம் இது. முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது நாம் வாழும் வாழ்க்கைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. முக்கியமாக, நம்முடைய உணவுமுறை மாறியிருக்கிறது. முன்பு இயற்கையாக விளைந்த உணவு வகைகளை நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது பல்வேறு இரசாயனப் பொடிகளைத் தூவி வளர்க்கப்பட்ட காய்கறிகளைத்தான் நாம் சாப்பிடுகிறோம். எனவே, அதன் பாதிப்பு வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நிச்சயம் ஏற்படும். இதை நம்முடைய பெரியவர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்தக் காலத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருக்கலாம். அதற்கான மருத்துவ ஆதாரங்கள் இப்போது நம்மிடம் இல்லை என்பதால் அந்தக் காலத்தில் இது போன்ற பிரச்சினை இல்லை என்று சொல்லமுடியாது.
ஸ்கேன் செய்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது. ஸ்கேன் செய்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் பணத்தை வசூல் செய்கிறார்கள். இதில் உள்ள வேறுபாடுகளை கவனிக்கும் மக்கள் ஸ்கேன் சாதனத்தின் மீதே சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். 125 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை ஸ்கேனுக்காக வசூல் செய்கிறார்கள். சிலர் அளவுக்கதிகமாக லாபம் சம்பாதிக்க நினைப்பதால் ஸ்கேன் செய்வதற்கான கட்டணம் அதிகமாகியிருக்கிறது. இதற்காக ஸ்கேன் செய்வதையே வெறுத்தால் அது சரியாக இருக்குமா? எனவே, கருத்தரித்த ஒவ்வொரு பெண்ணும் அவசியம் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தால் அதை அப்போதே சரிசெய்துவிடக்கூடிய அளவுக்கு மருத்துவமுறை முன்னேறிவிட்டது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்போதே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அப்போதே செய்துவிடலாம். அல்லது குழந்தை பிறந்த பிறகு செய்யலாம் என்கிற நிலையில் இருந்தால், பிறகு செய்துகொள்ளலாம் என்று விட்டுவிடுவோம்.
உதாரணமாக, குழந்தைகளுக்கு அன்னப்பிளவு ஏற்பட்டிருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு ஆறாவது விரல் வளரும். சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. எனவே, குழந்தை பிறந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் வயிற்றுக்குள் இருக்கிறபோதே சில குழந்தைகளுக்கு கடுமையான உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது முக்கியமான உறுப்புகள் வளராமலே போயிருக்கும். அந்தக் குறைகளை வயிற்றுக்குள்ளேயே சரிசெய்தால்தான் குழந்தை பிழைக்கும். இல்லாவிட்டால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்துவிடும்.
உதாரணமாக, சில குழந்தைகளுக்கு இருதயத்தில் ஓட்டை விழுந்திருக்கும். இந்த ஓட்டைகளைச் சரி செய்யக் கூடிய அளவுக்கு இருந்தால் உடனே ஆபரேஷன் மூலம் சரி செய்துவிடலாம். அல்ட்ரா ஸ்கேன் கருவின் உதவியோடு தாயின் வயிற்றின் மேலிருந்து கருவிகளைச் செலுத்தி குழந்தையின் இருதயத்தில் நுழைத்து ஆபரேஷன் செய்து விடலாம்.
இன்னும் சில குழந்தைகளுக்கு சிறுநீரில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். இந்தக் குறையை அந்த நிலையிலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறுநீரைச் சுற்றியுள்ள திசுக்கள் அழுகி, மொத்த சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு, குழந்தை இறக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். எனவே, ஸ்கேன் மூலம் குழந்தையின் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பைப் போக்கிவிடுவோம்.
மேற்சொன்ன இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் நம் ஊரிலேயே அடிக்கடி நடக்கும் விஷயங்களாகி விட்டன. ஆனால் வெளிநாட்டில் நடக்கும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சில குழந்தைகளுக்கு தாயின் ரத்தம் ஒரு பிரிவாகவும், குழந்தையின் ரத்தம் வேறு ஒரு பிரிவாகவும் இருக்கும். இந்தக் குளறுபடியினால் குழந்தையின் உயிர் பிரிவதற்கு வாய்ப்புண்டு. எனவே, குழந்தையின் ரத்தத்தை எடுத்து முதலில் பரிசோதனை செய்கிறார்கள். அதில் குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால் குழந்தைகளுக்கே புதிய ரத்தத்தை ஏற்றியிருக்கிறார்கள். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு ரத்தம் ஏற்றுவது என்பது வியக்கத்தக்க நிகழ்ச்சிதானே!
மனிதர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போல குழந்தைகளுக்குக்கூட குளுக்கோஸ் ஏற்றலாம். இதுபோன்று நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்களெல்லாம் இப்போது நடந்து வருகிறது.
சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் இருதயத்தையும், வயிற்றுப் பகுதியையும் பிரிக்கும் முக்கியமான ஜவ்வு இருக்காது. இதனால் குடல் பகுதி இருதயத்துக்கு அருகே சென்று அதை செயலிழக்கச் செய்யும். அல்லது இருதயம், மூளைப் பகுதியை நெருங்கி வந்து அதன் செயல்பாட்டைச் செய்ய மறந்துவிடும். இதனால் குழந்தை உயிருக்கு உடனே ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்தைத் தடுக்க குழந்தை பிறந்தவுடன் குடல் பகுதியையும், இருதயப் பகுதியையும் பிரிக்கிற மாதிரி செயற்கையாக ஒரு தடுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறது. குழந்தை வயிற்றுக்குள் இருக்கிறபோது இப்படிப்பட்ட பிரச்சினையோடு இருக்கிறது என்பது தெரிந்தால்தானே பிறந்தவுடன் ஆபிரேஷன் செய்யமுடியும்?
முன்பை விட இப்போது உடல் ஊனத்தோடு நிறைய குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, காலம் கடந்து திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு உடல் ஊனமுற்ற குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. முன்பு அதிகபட்சமாக இருபத்துநான்கு வயதிற்குள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போது பெண்கள் படித்து, வேலைக்குப் போய் செட்டிலான பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட மேலை நாட்டவர்கள் இப்போதெல்லாம் காலக்கிரமத்தில் திருமணம் செய்வதையே விரும்புகிறார்கள். தப்பித் தவறி காலம் கடந்து திருமணமாகி, பிள்ளைப்பேறு ஏற்பட்டிருந்தாலும், குழந்தை வயிற்றில் இருக்கிறபோதே ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்திருக்கிறார்கள். தொப்புள் கொடி மூலமாக ரத்தத்தை எடுத்து, அந்த ரத்தத்தில் ஏதும் குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்து அப்போதோ அல்லது குழந்தை பிறந்த உடனேயோ சரி செய்துவிடுகிறார்கள்.
நெருங்கிய உறவில் திருமணம் புரிந்து கொள்வதாலும் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, குரலில் குறைபாடுடையவர்கள் நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு.
சர்க்கரை நோய் கண்ட பெண்கள் கருத்தரித்தாலும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, சர்க்கரை நோய் கண்ட பெண்கள், குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்கு அதற்கான மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு கருத்தரிக்க வேண்டும் என்பது கட்டாயத்திலும் கட்டாயம். அதேபோல கருத்தரித்த பிறகு அவர்கள் அவசியம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.
இத்தனை வளர்ச்சிக்குக் காரணமான அல்ட்ரா ஸ்கேன் மெஷினை மிகச் சிறந்த சாதனம் என்று நான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லையே?’’ சிரித்துக் கொண்டே முடித்தார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
சந்திப்பு : ஏ.ஆர். குமார்
நன்றி குமுதம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருவிலே குறையிருந்தால் திருத்திக் கொள்ளலாம் - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், ஸ்கேன், குழந்தை, செய்து, வயிற்றில், பெண்கள், குழந்தைகளுக்கு, அல்ட்ரா, அந்தக், குழந்தையின், குறைபாடு, இப்போது, குழந்தைக்கு, வளரும், &lsquo, பற்றி, வேண்டும், திருமணம், இருக்கிறது, குழந்தையை, வாய்ப்புண்டு, கட்டுரைகள், சாதனம், ஏற்படும், முன்பு, பிறந்த, கருத்தரித்த, என்பது, வயிற்றுக்குள், &rsquo, அவசியம், தாயின், நாம், அல்லது, உதாரணமாக, கொண்டிருக்கிறார்கள், புரிந்து, உடல், பிறகு, articles, கொள்ளலாம், ஏதாவது, ஒன்பது, பார்க்க, இதனால், ரத்தம், கருவிலே, இருக்கிறதா, பகுதியையும், அளவுக்கு, ரத்தத்தை, மூலம், வயிற்றுப், செய்கிறார்கள், ஒவ்வொரு, என்பதைப், அப்போதே, சிகிச்சை, உள்ள, குழந்தைகள், உடனே, இல்லை, காலத்தில், இன்னும், இந்தக், இருக்கும், இருந்தால், காலம், முடியும், இருக்கிறபோதே, என்ன, மக்கள், ladies, குறையிருந்தால், திருத்திக், women, மருத்துவக், முக்கியமான, அதற்கான, சௌந்தரராஜன், தமிழிசை, என்பதை, காரணங்கள், பெண்ணா, section, உயிர், பகுதி, பிரிவாகவும், அந்த, கொள்வது, பகுதியில், நினைத்துக், மிகச், வயிற்றுக்குள்ளேயே, ஆபரேஷன், இருதயத்தில், நடக்கும், எடுத்து, நெருங்கிய, பிறக்க, ஊனமுற்ற, உறவில், சர்க்கரை, கண்ட, நோய், முக்கியமாக, கடந்து, குளுக்கோஸ், ஏற்றுவது, நாட்களுக்கு, முதலில், பிறந்தவுடன், குடல், மிகவும், வியக்கத்தக்க, நம்முடைய, வாழ்க்கைக்கும், பாதிப்பு, என்கிற, என்பதைக், கொள்ள, கேட்டால், அறிவியல், இத்தனை, என்பதால், மகப்பேறு, ஸ்கேனெல்லாம், பெரியவர்கள், நினைத்து, மருத்துவ, பிரச்சினை, செய்துவிடலாம், செய்ய, மண்டையோடு, பலரும், தவறாகப், டாக்டர், பிறகுதான், எந்த, வசூல், சிலர், ரூபாய், செய்வதையே, சிகிச்சைகளை, ஏற்பட்டிருக்கும்