சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சிறப்புப் பாயிரம்
நேரிசை ஆசிரியப்பா
மலர்தலை உலகின் மாயிருள் துமியப் பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த உயர்சிவ ஞான போதம் உரைத்தோன் பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன் பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் பவநனி வன்பகை கடந்த தவரடி புனைந்த தலைமை யோனே. |
நூல்
மங்கல வாழ்த்து
கல்லால் நிழன்மலை வில்லார் அருளிய பொல்லார் இணைமலர் நல்லார் புணைவரே |
அவையடக்கம்
தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை உடைமை எமை இகழார்--- தம்மை உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில் புணராமை கேளாம் புறன் |
பொதுவதிகாரம்:பிரமாணவியல்
1. பொதுவதிகாரம்
1.பிரமாணவியல்
முதல் சூத்திரம்
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் |
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரைவகை: இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க.
1. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது.
ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்
உதாரணம்:
பூதாதி ஈறும் முதலும் துணையாக பேதாய்! திதி ஆகும் பெற்றிமையின்- ஓதாரோ ஒன்று ஒன்றின் தோன்றி உளதாய் இறக்கண்டும் அன்றுஎன்றும் உண்டு என்ன ஆய்ந்து | 1 |
2. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது
ஏது: இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின்.
உதாரணம்:
இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால் இலயித்தவாறு உளதா வேண்டும்_ இலயித்தது அத்திதியில் என்னின் அழியாது அவையழிவது அத்திதியும் ஆதியுமாம் அங்கு | 2 |
வித்துண்டாம் மூலம் முளைத்தவா தாரகமாம் அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால்- வித்தகமாம் வேட்டுவனாம் அப்புழுபோல் வேண்டுருவைத் தான் கொடுத்துக் கூட்டானே மண்போல் குளிர்ந்து | 3 |
நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில் தாக்காது நின்று உளத்திற் கண்டு இறைவன் -- ஆக்காதே கண்ட நனவு உணர்விற் கண்ட கனவு உணரக் கண்டவனின் இற்று இன்றாம் கட்டு | 4 |
3. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, சங்காரமே முதல் என்றது.
ஏது: சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வு இன்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது சுதந்திரமின்றி நிற்றலான்.
உதாரணம்:
ஒன்று அலா ஒன்றில் உளது ஆகி நின்றவாறு ஒன்று அலா ஒன்றில் ஈறாதல் _-- ஒன்றலா ஈறே முதல் அதனின் ஈறு அலா ஒன்று பல வாறே தொழும்பு ஆகும் அங்கு | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், ஒன்று, சித்தாந்த, நூல்கள், சாத்திரங்கள், அதிகரணம், சிவஞானபோதம், மேற்கோள், என்றது, உதாரணம், மெய்கண்ட, உற்பத்தி, திதி, சங்காரத்தின், கண்ட, ஒன்றில், அங்கு, இன்மையின், ஆகும், பிரபஞ்சம், ஈறும், உடைத்து, தம்மை, நூல், போதம், இலக்கியங்கள், உணரார், பொதுவதிகாரம், பொழிப்பு, என்பது, சூத்திரம், பிரமாணவியல், உளதாய்