பதினோராம் திருமுறை - 5.7. கார் எட்டு

5.7. கார் எட்டு
492 |
அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல் விரவி எழுந்தெங்கும் மின்னி - அரவினங்கள் அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே கைச்சங்கம் போல்முழங்கும் கார். |
1 |
493 |
மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன் கையார் சிலை விலகிக் காட்டிற்றே - ஐவாய் அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக் கழலரவம் காண்புற்ற கார். |
2 |
494 |
ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும் கோலக் குழற்சடையும் கொல்லேறும் - போல இருண்டொன்று மின்தோன்றி அம்பொனவ் வானம் கருண்டொன்று கூடுதலிற் கார். |
3 |
495 |
இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக் குருள்கொண்ட செஞ்சடைமேல் மின்னிச் - சுருள்கொண்டு பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே காம்பினங்கள் தோள்ஈயக் கார். |
4 |
496 |
கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான் றாடரவம் எல்லாம் அளையடைய - நீடரவப் பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே கற்பகலம் காண்புற்ற கார். |
5 |
497 |
பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும் ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும் அரவஞ் செலவஞ்சும் அஞ்சொலார் காண்பார் கரவிந்தம் என்பார்அக் கார். |
6 |
498 |
செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி அழுந்தி அலர்போல் உயர - எழுந்தெங்கும் ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே காவிசேர் கண்ணாய்அக் கார். |
7 |
499 |
காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப் பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர் அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர் கண்டம்போல் மீதிருண்ட கார். |
8 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினோராம் திருமுறை - 5.7. கார் எட்டு , கார், திருமுறை, எட்டு, கண்டத், காண்புற்ற, மீதிருண்ட, எழுந்தெங்கும், பதினோராம், மின்னி, பூண்டான்