கேள்வி எண் 0 - சட்டக்கேள்விகள் 100
இந்த மனித இனத்தை நெறிப்படுத்தவே மதங்கள் தோன்றின. ஆனால், மதங்களிலும் மனிதம் இருப்பதில்லை. எனவே, இலக்கியங்கள் இயற்றப்பட்டன. கல்வி அறிவற்றவர்கள் பெரும் பான்மையோருள்ள சமூகத்தில் ஆதிவாசிகளின் கலாச்சாரம்தான் மேலோங்கியிருக்கிறது. எழுத்துக்களின் வரிவடிவமே தெரியாத பெரும்பான்மையோர் உலவுகிற ஜனசமூகத்தில் இலக்கியங்களால் என்ன செய்துவிடமுடியும்? மனிதன் தன் இலட்சணத்தை உணரும்போதுதான் அவன் வாழும் சமுதாயத்திற்கு இலக்கணம் வந்து சேர்கிறது. அந்த மனித இலட்சணம், நீதிவழுவா நெறிமுறைகளிலிருந்து தோன்ற வேண்டும். அதை இயற்கையாக உணர்ந்தவர்கள் சொற்பமே. ஏராளமானவர்கள் சட்டத்தின் மூலமே அதை உணர்கிறார்கள். சட்டங்கள் அனைத்தும் சடங்குகளின், சம்பிரதாயங்களின் அடியற்றி வருபவை. பழக்க வழக்கங்களின் அடிச்சுவட்டிலேயே பண்பாடு பரிணமிக்கிறது.
சட்டங்களைப் புரிந்து கொண்டவர்கள் சொற்ப அளவிலேயே உள்ளனர். பிரச்னைகளின் அடிப்படையே, சட்டங்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமைதான். அரசிடமிருந்து திட்டங்களை வேண்டுபவர்கள், அரசு இயற்றும் சட்டங்களை ஏன் வேண்டுவதில்லை? இந்த நிலை மாற வேண்டும். சிறந்த விஞ்ஞானிகளை, மருத்துவர்களை, பொறியாளர்களை, கட்டிட நிபுணர்களை, கணக்காயர்களை, ஆட்சி நிர்வாகிகளை, காவல் மேலாளர்களை, வர்த்தக நெறியாளர்களை, வழக்குரைஞர்களை, நீதிபதிகளை, பத்திரிகையாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்கும் நமது கல்விமுறை, சிறந்த மனிதர்களை உருவாக்கியிருக்கிறதா என்று கேள்வி எழுப்பிப்பாருங்கள். என்ன பதில் கிடைக்கிறது? அ,ஆ தெரியாதவன் காக்கிச் சட்டையைக் கண்டு பயப்படுகிறான். A,B- தெரிந்தவன் கருப்புக்கோட்டைக் கண்டு பயப்படுகிறான். இதுதான் சமூக நடைமுறை.
எனவே, சட்டங்களை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொள்வதால் யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழமுடியும். பிரச்னைகளில் சிக்கி வேதனை அனுபவிப்பவர்கள், அந்த வேதனைகளுக்குக் காரணமானவர்களிடமிருந்து மீண்டு, நிம்மதியாக வாழ முடியும். நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும்போது, அதைப் பார்க்கின்றவர்கள், “இந்தச் செயலைச் செய்யக்கூடாது. செய்தால் தண்டனை கிடைக்கும்” என்ற முடிவிற்கு வருகிறார்கள். இதன் காரணமாக குற்றங்கள் குறையத் தொடங்குகின்றன. தரமான சமூகம் உருவாக, தகுதியுள்ள மனிதர்கள் தோன்ற வேண்டும். சட்டஅறிவால் மட்டுமே இது சாத்தியப்படும்.
“Human Beings without Human Rights are equivalent to Human Remains not Human Resources” “மனித உரிமைகள் அற்ற மனிதப் பிறவிகள் வெறும் மனித வடிவங்களேயன்றி மனித சக்திகளல்ல” மனித உரிமைகள் மேலாண்மை செய்யும் சமூகத்தை கட்டியெழுப்ப சட்டத்தின் தாக்கம் முக்கியம். எனவே, சட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள். சமூகத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன்
வெ.குணசேகரன், B.Sc., B.L
வழக்குரைஞர்&சென்னை உயர்நீதிமன்றம்
editor.lawyersline@gmail.com
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, மனித, மனிதன், human, வேண்டும், சட்டங்களை, சட்டங்களைப், சிறந்த, கண்டு, சமூகத்தை, உரிமைகள், தண்டனை, பயப்படுகிறான், சட்டத்தின், தோன்ற, modern, நிலையில், அவனுக்கு, செயலைச், இதன், என்ன, சமூகத்தில், அவன், அந்த