தாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
ஆனால் தாய்லாந்தில் இடைக்காலத்திலும் இடைக்காலத்திற்கு முன்பும் குடியேறியத் தமிழ்
மக்கள் தமிழ் மொழியை மறந்து விட்டனர். ஏன், தமிழ் இனத்தையே மறந்து விட்டனர்.
இப்பொழுது அவர்கள் தாங்கள் தமிழர்களின் சந்ததிகள் என்றோ இந்தியர்களின் சந்ததிகள்
என்றோ அறியார்கள். தாய்லாந்து பண்பாட்டுடன் ஒருசேரக் கலந்து விட்ட இப்பண்டைய,
இடைக்காலத் தமிழர்களை தாய் இனத் தமிழர்கள் என்றழைப்பதை விட தாய் இன மக்கள் என்றே
அழைப்பதுதான் சரி. அதுவே வரலாறு நமக்களிக்கும் சான்று.
தற்போது தாய்லாந்து தென்பகுதிகளில் வாழும் மக்களின் தோல் நிறம், நெற்றி, புருவம், கண்ணிமை அமைப்புகள், கண்கள், மூக்கு, காதுகள் முதலிய அங்கங்களின் அமைப்பு ஆண்களானாலும் பெண்களானாலும் திராவிட முகத் தோற்றங்களை ஒத்திருக்கின்றன. வடகிழக்குத் தாய்லாந்தில் கம்போடியா எல்லை அருகே உள்ள சில தாய் பிரிவினரும் இம்மாதிரி அங்க அமைப்புகளுடன் இருப்பதை காணலாம். ஆகையால் பண்டைய காலத்திலும் இடைக்காலத்திலும் குடியேறிய தமிழர்கள் தாய்லாந்து நாட்டினரோடு, குறிப்பாகத் தென் தாய்லாந்து நாட்டினரோடு ஒருசேரக் கலந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம்.
தாய் பிராமணர்கள் :
பண்டைக்காலத்தில் தாய்லாந்து சென்ற தமிழர்களுள் தமிழ்ப் பிராமணர்கள் ஓரளவு தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றி வந்ததாய் ஜான்கிராபோர்டு (1822) என்பாரின் வரலாற்றுக் குறிப்பேட்டிலிருந்து அறிகிறோம். இத்தாய் பிராமணர்களின் முன்னோர்கள் தமிழ் நாட்டிலுள்ள இராமேசுவரத்திலிருந்தும், வடஇந்தியாவில் உள்ள காசியிலிருந்தும் வந்து தாய்லாந்தில் குடியேறியவர்கள். இவர்கள் தாய்லாந்து அரச குடும்பத்தினரின் புரோகிதர்களாகவும் விளங்கினர். பட்டராகர் என்ற பட்டத்தை இவர்கள் பெற்றனர். இவர்கள் தாய்லாந்திலிருந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். இன்று எல்லோரும் சாமியராக மாறிவிட்டனர். இப்பிராமணக் குழுவினரின் தலைவர் ஒருவர் "தாங்கள் தாய்லாந்தில் குடியேறிய இந்தியர்களின் கால்வழியில் இருபத்து ஐந்தாவது தலைமுறையாகத் தோன்றியவர்கள் என்றும், தங்கள் முன்னோர் இராமேசுவரத்தி லிருந்து தாய்லாந்திற்கு (சியாமிற்கு) வந்தவர்கள்" என்றும் கூறியதாக தொ.பொ. மீனாட்சி சுந்தரனார்(சியாமில் திருப்பாவை திருவெம்பாவை, பக் 36) கூறுகிறார்.
தாய் பிராமணர்கள் சோதிடம், நாள்கோள் பார்த்துக் கூறுதல் முதலியவற்றில் வல்லவர்களாக விளங்குகின்றனர். அரசனுடைய அவைக்களத்தில் நடக்கும் முடிசூட்டு விழா போன்ற பலவகை விழாக்களைச் சிறப்பாக நடத்திவைப்பதில் இவர்கள் பெரும்பங்கு கொண்டுள்ளனர். தாய்பிராமணர்கள் பிராமணராக ஆவதற்கு உபநயனம் போன்ற சடங்கு ஒன்று நிகழும். அதில் மூன்று இழை பூனூலை அணிந்து கொள்வார்கள். பின்னர் ஒரு சடங்கு நிகழும். அப்போது ஆறிழைப் பூணூல் பூணுவார்கள். இவர்களுடைய நீண்ட குடுமியைக் கொண்டே இவர்களைப் பிரித்தறியலாம். பாங்காக் தாய் பிராமணர் மூன்று கோயில்களைச் சுற்றியே வாழ்கின்றனர். முன்னோர் காலத்திலிருந்து இன்றளவும் அவர்களிடம் இருக்கும் சமஸ்கிருத நூல்கள், தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் முதலியவற்றை மனப்பாடமாக ஓதுவதற்குச் சிறுவயதிலேயே அவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. தாய்லாந்து பிராமணவழித் தோன்றல்கள் மட்டும் தாம் தாய்பிராமணர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டு பிராமணர்கள் போலல்லாமல் தாய் பிராமணர்கள் அசைவம் உண்கின்றனர். ஆண்டிற்குகொருமுறை பதினைந்து நாள் விழாவான திருவெம்பாவை-திருப்பாவைத் திருவிழா காலத்தில் மட்டும்தான் இவர்கள் புலால் உண்ணாதவர்களாக இருக்கின்றனர்.
இத்தாய் பிராமணர்கள் தமிழ்நாட்டு ஸ்மார்த்தா பிராமணர்களைப் போலவே சிவன், விஷ்ணு முதலிய இருவரையும் வில்வ இலையால் பூஜை செய்து பக்தியுடன் வழிபடுகின்றனர். இத்தாய் பிராமணர் கோயிலுக்குள் வில்வ மரம் இருக்கின்றது. தினம் கடவுள் முன் தியானம் செய்யும் பொழுது ஓம் நமச்சிவாயா, ஓம் கணேச நமோ நமஸ்தே, ஓம் லட்சுமிநாராயண போன்ற மந்திரங்களை ஜபிக்கின்றனர். இவர்கள் அன்றாட வழிபாட்டின் போது நமோத்துவ பாசுவ ஆர புத்தா போன்ற புத்த சமய மந்திரங்களையும் ஓதுகின்றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் தாய்லாந்தில் வாழும் இத்தாய் பிராமணர்கள் பௌத்தர்களாகவும் விளங்குகின்றனர். புத்த குருமார்களும் தாய் பிராமணர்கள் கோவிலுக்குச் சிலசமயம் வந்து இந்து கடவுள்களை வழிபடுகின்றனர். குடியேறிய தமிழர்கள் மூலமாக பல காலமாக தாய்லாந்தில் நிலைபெற்ற சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் புத்த வழிபாட்டுடன் இணைந்து சிவன், விஷ்ணு, புத்தர் என மூவரையும் வணங்கும் வழிபாடாக தாய் பிராமணர்களிடையே நிலவி வருகிறது.
தாய் தமிழர்கள்
தாய்லாந்திலுள்ள தமிழர்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். தமிழ்-தாய் இனக்கலப்பு மூலம் தோன்றியத் தமிழர்கள், இனக்கலப்பு இல்லாத தமிழர்கள். இனக்கலப்பு இல்லாத தமிழர்கள் மிகக் குறைவு. இன்று பாங்காங்கில் மட்டும் தமிழ்ப் படிக்கத் தெரிந்தவர் 500 பேர். புக்கட் எனுமிடத்தில் தமிழ் பேசத் தெரிந்த சிறு தமிழ் வியாபாரிகள் 100 பேர் இருக்கின்றனர். வடக்கில் பர்மா எல்லையருகே பலகாலமாக மேசாட் எனுமிடத்தில் 30 அல்லது 35 தமிழர் குடும்பங்களும், சியாங்ரெய் எனுமிடத்தில் 5 அல்லது 6 தமிழ்க் குடும்பங்களும், காஞ்சன புரியில் 10 அல்லது 15 குடும்பங்களும் இருக்கின்றன. தொடக்கத்தில் தமிழர் கால்நடை வாணிபம் செய்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தாய், தாய்லாந்தில், தமிழர், பிராமணர்கள், தமிழ், தாய்லாந்து, தமிழர்கள், இவர்கள், வாழும், இத்தாய், நாடுகள், புத்த, குடியேறிய, விஷ்ணு, இனக்கலப்பு, அல்லது, குடும்பங்களும், தகவல்கள், எனுமிடத்தில், தமிழ்நாட்டுத், நிகழும், என்றும், திருவெம்பாவை, சடங்கு, விளங்குகின்றனர், முன்னோர், சிவன், வழிபாடும், வழிபடுகின்றனர், இல்லாத, பேர், | , வில்வ, இன்று, பிராமணர், மட்டும், தமிழ்நாட்டு, இருக்கின்றனர், மூன்று, நாட்டினரோடு, information, tamilnadu, இடைக்காலத்திலும், மக்கள், மறந்து, countries, living, tamils, thailand, tamil, persons, விட்டனர், தாங்கள், உள்ள, தமிழ்ப், தங்கள், வந்து, முதலிய, தமிழர்களை, சந்ததிகள், என்றோ, இந்தியர்களின், ஒருசேரக், செய்து