இரீயூனியனில் தமிழர்கள் - தமிழர் வாழும் நாடுகள்
இங்கு பிரெஞ்சு மொழியே பயிற்று மொழி. இதையடுத்து ஆங்கிலமும், ஏதாவதொரு ஐரோப்பிய மொழியும் (ஜெர்மன், ஸ்பானிஷ்) கட்டாயமாகப் படிக்கப்பட வேண்டிய மொழிகளாகும். அண்மை காலமாகத் தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் செயின்ட் ஆண்டிரி (Saint Andre) யிலுள்ள மூன்று உயர்நிலைப் பள்ளிகளிலும், அவற்றுடன் இணைந்து செயல்படும் செயின்ட் பனுவா (Saint Benoit) விலுள்ள ஒரு கல்லூரியிலும் விருப்பப் பாடமாகத் தமிழ் கற்பிக்கப்
படுகிறது. இதுவன்றி, பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாகிய Institute of Linguistics and Anthropology இல் பதினெட்டுவயது மேற்பட்டோருக்குத் தமிழ் போதிக்கப்படுகிறது. இதனால் ரீயூனியனில் தமிழின் நிலை மேம்பட்டு வருகிறது. பிரெஞ்சு மொழியில் பேராசிரியராக வளர்ந்துள்ள திரு.வி.தேவக்குமாரன் பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் பிரெஞ்சுப் பாடநூல் எழுதிப் படிப்பிக்கச் செய்தார். அவர் எழுதிய நூலின் பெயர் IJ 'appreds le tamoul ஆகும். அவர் ஓர் தமிழாசிரியர். ரீயூனியனில் தமிழ் கற்பித்த முதல் தமிழாசிரியர் மொரீசியஸைச் சேர்ந்த திரு. சங்கிலி (Sangeelee) என்பவர் ஆவார். பிரெஞ்சு மூலம் தமிழ் படிக்க, பாலர் பாடநூல் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.
பாலர் பயிற்சிக் கூடம் முதல் மேல்நிலைக் கல்லூரி வரையில் கல்வி இலவசமே. மாணவர்க்கு மதிய உணவும், போக்குவரத்து வசதியும் இலவசம். ஊக்கத் தொகையும் குடும்ப வருமானத்திற் கேற்ப அளிக்கப்படுகிறது. அனைத்து வித பட்டப்படிப்பும், மேல்நிலை பட்டப்படிப்பும், தொழில் நுட்பக் கல்வியும் பெறுவதற்குரிய கல்வி நிலையங்கள் இங்கேயே உள்ளன. இவற்றிற்கு மேல்பட்ட கலைத் திறக்கல்விக்கும், அறிவியல் மற்றும் பொறியியல் உயர்நுட்பக் கல்விக்கும், மருத்துவப் படிப்பிற்கும், மேல்நிலைச் சட்டக் கலைத் திறக் கல்விக்கும்தான் பிரான்சுக்குச் செல்ல வேண்டும். பட்டப்படிப்பு வரை ஆண்டுதோறும் வடிகட்டும் தேர்வுமுறை இங்கில்லை. மாணவர் தம் தரத்திற்கேற்ப தொழில் கற்க அவர்களுக்குக் கல்வி நிலையத்தால் வழிகாட்டப்படுகின்றது.
பிறவியிலேயே உடல் ஊனமுற்றவர்களுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் உரிய பயிற்சியளிக்கும் கூடங்கள் ஆங்காங்கே உள்ளன. ஒரு வகுப்பில் எந்த நிலையிலும் இருபத்து நான்கு மாணவர்களுக்கு மேல் சேர்க்கப்படுவதில்லை. பயிற்று முறையில் ஒலி, ஒளிப் பொறிகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. மற்றும் தொலைக்காட்சி, ஒலி, ஒளிப் பதிவு நாடாக்கள், பஜனைப் பாராயணம், கோயில் ஆகியவற்றிலும் தமிழைப் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
மறந்த தமிழை மீண்டும் மலரச் செய்யும் வாய்ப்புகளும் எண்ணமும் ரீயூனியன் தமிழரிடையே வேரூன்றத் தொடங்கி இருக்கிறது. தமிழ் மொழி மீதான ஆர்வம் இதன் மூலம், குறிப்பாக இளம்பரம்பரை யினரிடையே மேலும் வளர்ச்சியடைய சூழ்நிலை உருவாகி யிருக்கின்றது. தமிழ்ப் பண்பாட்டையும் ரீயூனியன் தமிழர்கள் முற்றிலும் இழக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் போது தமிழ் இந்துப் பெயர்களையே வைக்கிறார்கள். அரங்கசாமி, இராமாசாமி, கிருட்டிணன், இராமன், முருகன், கணேசன் என்றப் பெயர்களை எங்கும் கேட்கலாம். காத்தாயி, முருவாய், இராமாய், மீனாட்சி, மீனா, மைனாவதி, காமாட்சி போன்ற பெயர்களும் அதிகமாக உள்ளன. பெரும்பாலோருக்கு தமிழ்ப் பெயர்களோடு கிறித்துவப் பெயர்களும் (First Name) உண்டு. உதாரணமாக பிலிப் இராமன் (Philip Raman).
ரீயூனியன் சட்ட மன்றத்தில் சில தமிழர் இருக்கின்றனர். சம உடைமைக்கட்சி, தொழிற்கட்சிகளில் பெரும்பான்மை தமிழர்கள் அங்கம் வகிக்கிறார்கள். பிரான்சின் அங்க நாட்டுக்கான நாடாளு மன்றத்தின் ரீயூனியன் பகுதிக்கு உரிய ஐந்து உறுப்பினர்களில் (Five deputies) ஒருவர் தமிழர்; இவர் பெயர் வீராப்பாபிள்ளை. இவருக்குத் தமிழ் தெரியாது. மேலும் ரீயூனியனிலிருந்து செல்லும் மூன்று சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் (Senators) இருவர் தமிழர்கள்.
தகவல் தொடர்பு சாதனங்கள்
1965 ஆம் ஆண்டு ரெனிகிசனின் (Rene Kichenin) எனும் வழக்குரைஞர் 'திரிடென்ட்' (Trident) என்ற நாளேட்டை வெளியிட்டார். இவ்வேட்டின் நோக்கம் தமிழ் மொழியை தமிழ்ப்பண்பாட்டை மேம்படுத்துவதாகும். 1968 ஆம் ஆண்டு இளைஞர்களுடன் இணைந்து தமிழ் கிளப் (Club Tamoul) ஒன்றை அமைத்தார். 1977க்கு முன் தமுல் (Tamil) என்ற பிரெஞ்சு மொழி ஏடு வெளிவந்துக் கொண்டிருந்தது. 1980 இலிருந்த பிரசென்ஸ் (Presence) என்ற பிரெஞ்சு ஏடு தமிழர்களைப் பற்றியும், தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம், சமயம், பண்டிகை போன்ற வற்றைப் பற்றி முக்கியக் கட்டுரைகளையும், முக்கியத் திருவிழாக் களின் அட்டவணைகளைப் பற்றியும் எழுதி வெளியிடுகின்றது. 1975-1982 ஆம் ஆண்டுகளிடையே இவ்விரண்டு செய்தி ஏடுகளும் வெளியிடப்பட்டன. தினந்தோறும் 'ஒளி' என்ற தமிழ் ஏடு அச்சாகி விற்கப்படுகின்றது. இந்த ஏட்டின் முகப்பில் தில்லை நடராசர் நாட்டியச் சின்னமுண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரீயூனியனில் தமிழர்கள் - Tamils in Reunion - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், தமிழர்கள், தமிழர், பிரெஞ்சு, ரீயூனியன், கல்வி, இரீயூனியனில், நாடுகள், வாழும், வகிக்கிறார்கள், மொழி, tamil, தகவல்கள், பெயர், தமிழ்நாட்டுத், பட்டப்படிப்பும், பாலர், மூலம், tamoul, பாடநூல், அவர், தொழில், தமிழாசிரியர், ஒளிப், உறுப்பினர்களில், ஆண்டு, பற்றியும், | , பெயர்களும், இராமன், உரிய, முன், மேலும், தமிழ்ப், கலைத், saint, சட்ட, பொறியியல், நிலையிலும், கல்வித், information, tamilnadu, persons, living, countries, இங்கு, செல்ல, செயின்ட், மூன்று, இணைந்து, ரீயூனியனில், அதிகமாக, tamils, வேண்டும், reunion, பயிற்று, திரு