இரீயூனியனில் தமிழர்கள் - தமிழர் வாழும் நாடுகள்
அறிமுகம்
பிரெஞ்சுத் தமிழ்க் குடியேற்ற நாடுகளான 27 தீவுகளில் ஒன்று ரீயூனியன். இத்தீவைத் தமிழில் ரீயூனியோன் என்றும் அழைக்கிறார் கள். இந்துமாக்கடலில் புவி மையக் கோட்டிற்குத் தெற்கே மடகாஸ்கர் தீவுக்கும் மொரீசியஸ் தீவுக்குமிடையில் உள்ள தீவே ரீயூனியன் (Reunion) ஆகும். மடகாஸ்கர் தீவிற்கு வடக்கே 480 கி.மீ தொலைவிலும் மொரீசியஸ் தீவிற்குத் தென் மேற்கே 200 கி.மீ தொலைவிலும் ரீயூனியன் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 2510 ச.கி.மீ ஆகும். இத்தீவு மொரீசியஸை விடச் சற்றுப் பெரியது. இதன் தலைநகரம் செயிண்ட் டெனிஸ். இத்தீவு முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலில் வெடித்து உண்டான ஒரு பெரிய எரிமலை கக்கிய குழம்பால் உருவானது. எங்குப் பார்த்தாலும் மலைகளும் ஆறுகளும் பல்வகைத் தாவர இனங்களுமாய் இத்தீவு நெஞ்சையள்ளும் அழகுடன் திகழ்கிறது. ரீயூனியன் தீவு தற்சமயம் பிரான்ஸ் நாட்டில் கடல்கடந்த ஓர் அங்க நாடாக (French Overseas Department) விளங்குகிறது.
ரீயூனியனில் 18 ஆம் நூற்றாண்டில் 1797 ஆம் ஆண்டளவில் இருந்த மொத்த மக்கள்தொகை 56,800. வெள்ளையர்கள் 10,400; உரிமை பெற்ற மனிதர்கள் 1,600; அடிமைகள் 44,800 ஆகும். 1850 ஆம் ஆண்டளவில் ரீயூனியனில் இருந்த மொத்த மக்கள் தொகை 1,10,891 ஆகும். தமிழர்களும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே குடியேறி யிருந்தார்கள். இன்று ரீயூனியனின் மொத்த மக்கள் தொகை சுமார் ஐந்தரை இலட்சம். இதில் இரண்டு லட்சம் பேர் தமிழர்கள். இத்தீவு மண்வளமும் மழைவளமும் மிக்கது. இங்கே கோடையும் குளிருமாகிய இரண்டு பருவங்களே உண்டு. அதிகக் குளிரும் அதிக வெப்பமும் இல்லாத மிதமான தட்ப வெப்ப நிலையே என்றும் நிலவுவதாலும் சுற்றிலும் கடல் சூழ்ந்திருப்பதாலும் மலைகளிலிருந்து பல்வகை மூலிகைகளின் மணம் எப்போதும் வீசுவதாலும், ஆங்காங்கே தாதுப்பொருட்கள் கலந்த நீரூற்றுகள் சுரந்து பாய்வதாலும் இந்தத் தீவானது மக்களின் நல்வாழ்வுக்கு இயற்கைத் தாய் அமைத்துக் கொடுத்த சுகாதார நிலையம் என்று போற்றப்படுகிறது.
இத்தீவு கி.பி. 1520 இல் போர்த்துக்கீசிய மாலுமியால் கண்டுபிடிக்கப் பட்டதாக நம்பப்படுகின்றது. பிறகு ஆங்கிலேயர் கையிலும் பிரெஞ்சுக்காரர் கையிலும் சிற்சில காலம் மாறிமாறியிருந்து கடைசியாக 1816 இலிருந்து பிரெஞ்சுக்காரர் கையில் நிரந்தரமாகத் தங்கி விட்டது. பண்டைத் தமிழர்கள் இந்துமாக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய நாடுகளுக்கும் சென்ற போது இத்தீவைப் பார்த்திருக்கலாம். ஆனால் தமிழர்களோ பிற இந்தியர்களோ 17 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுக்குச் சென்று குடியேறியதாகச் சான்றுகள் கிடையாது.
ரீயூனியன் தீவை ஆரம்பத்தில் பண்படுத்த வேலையாட்கள் தேவையாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு வெள்ளை முதலாளிகள் ஆப்பிரிக்காவின் காப்பிரி மக்களையும் மடகாஸ்கரின் பழங்குடி மக்களையும் அடிமைகளாக கொண்டு வந்து ரீயூனியனில் கரும்பு, சோளம், மணிலா முதலியவற்றைப் பயிரிட்டனர். சர்க்கரை ஆலைகளிலும் அவர்களை வேலை வாங்கினார்கள். 1848 இல் பிரெஞ்சுப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால், வெள்ளை முதலாளிகள் வேறு வழியின்றித் தங்கள் அடிமைகளை விடுதலை செய்து விட வேண்டியதாயிற்று. எதிர்பாராத இந்த விளைவினால் இத்தீவின் பொருளாதார முதுகெலும்பே ஒடிந்து போய்விட்டதாக 1850 இல் இங்குப் பிரயாணம் செய்த ஆங்கிலேயர் ஃபிரடரிக் என்பவர் தம் ரீயூனியப் பயண நூலில் குறிப்பிடுகிறார்.
கரும்புச் சாகுபடியை வெகுவாகப் பெருக்கிச் சர்க்கரை விற்பனையில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வெள்ளை முதலாளிகளை இந்த அடிமையொழிப்புச் சட்டம் திக்குமுக்காடச் செய்து விட்டது. அதனால் உடனே இந்தியாவின் பிரெஞ்சுப் பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் போன்ற நகரங்களிலிருந்தும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் தமிழர்களை பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனியாட்சி பலத்துடன் ரீயூனியனுக்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள். ஆனால் 1828க்கு முன்னமேயே சில இந்தியர்கள் கோவா பக்கத்திலிருந்து (மலையாள கரையோரம்) அடிமைகளாகவே வந்திருந்தனர் என்று தெரிகிறது. 1828 இல் ஆந்திராவிலிருந்தும் 15 பேர் வந்தனர் என்னும் குறிப்புகள் உள்ளன.
இவ்வாறாக 1848க்கு முன் இங்கிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை மொத்தம் 4200 தான். இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவ்வெல்லாரையுமே வெள்ளைத் துரைமார்கள் தமிழர்கள் என்றே பொதுவாகக் குறிப்பிட்டனர். அதற்குக் காரணம் அந்தக் காலத்தில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய இரு பிரெஞ்சிந்திய வட்டாரங்களிலிருந்து வந்த தமிழ் ஒப்பந்தக் கூலியாட்களே எண்ணிக்கையில் மிகப் பெரும்பான்மையினர். அவர்களே கரும்புத் தோட்டங்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் வேலை செய்தனர். அவர்களே முதலாளிகளின் வீடுகளில் சமையல்காரர்களாகவும், மெய்க்காவல்காரர்களாகவும் வேலைகளை மேற்பார்க்கும் மேஸ்திரிகளாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரீயூனியனில் தமிழர்கள் - Tamils in Reunion - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர்கள், இத்தீவு, ரீயூனியன், இரீயூனியனில், நாடுகள், ஆகும், வாழும், தமிழர், சர்க்கரை, வெள்ளை, மொத்த, தகவல்கள், ரீயூனியனில், reunion, தமிழ்நாட்டுத், ஆலைகளிலும், மக்களையும், tamils, முதலாளிகள், விட்டது, கையிலும், பிரெஞ்சுக்காரர், வேலை, தங்கள், ஒப்பந்தக், அவர்களே, | , காரைக்கால், புதுச்சேரி, ஆங்கிலேயர், செய்து, இந்தியாவின், பிரெஞ்சுப், பேர், தொலைவிலும், இதன், living, countries, மொரீசியஸ், information, என்றும், மடகாஸ்கர், லட்சம், முன், மக்கள், தொகை, இரண்டு, tamil, இருந்த, persons, ஆண்டளவில், tamilnadu