மொரீசியஸில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தமிழரின் இன்றைய நிலை
சமயம் :
தமிழர்கள் மொழியை மறந்து விட்டாலும் இன்றும் தங்களைத் தமிழர்கள் என்று உணர்வது சமயத்தால்தான். மொரீசியஸ் முழுவதும் சுமார் 125 கோயில்கள் இருக்கின்றன. முருகன், சிவன், விநாயகர், மாரியம்மன், கிருஷ்ணன், துர்க்கை, இராமன், வீரமாகாளி அம்மன், முனீஸ்வரர், மதுரை வீரன், கன்னியாகுமரி முதலிய தெய்வங்களுக்கு உருவங்கள் உண்டு.

'தீ மிதித்தல்' என்பது மாரியம்மன் கோயில்களில் பெருமளவில் நடத்தப்படுகிறது. திரௌபதையம்மனுக்கும் தீ மிதி நிகழ்த்துவதுண்டு. பாடி, நோன்பிருந்து விழா நடத்துவார்கள். தாலாட்டு, அரிச்சுவடி பாடி, கும்மி கோலாட்டம் அடித்து கரகாட்டம் ஆடிக்களிப்பார்களாம். அம்மன் கோயில்களில் தீமிதி, கஞ்சி, கத்தி பூசை முதலிய சடங்குகள் செய்யப்படுகின்றன. மற்றொரு முக்கிய விழா கோவிந்தன் விழாவாகும். (புரட்டாசி விரதம்) புரட்டாசித் திங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழர்கள் விரதமிருப்பதுண்டு. ஆடித்திங்களில் 18-ஆம் நாளன்று திருமணம் ஆன மகளிர் தங்கள் தாலிக்கயிற்றைப் புதுப்பித்துக் கொள்ளும் விழா நடைபெறுகிறது.
தமிழ்ப் புத்தாண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தெய்வாலயங்களுக்குத் தமிழர்கள் அனைவரும் செல்கின்றனர். சிறப்பு பூசையுடன் முத்தமிழ் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காமண்டி (காமன்பண்டிகை) கதையாட்ட மாடி, இலாவணிபாடி, பொங்கல் கொண்டாடுகின்றனர். தீபாவளி, சிவராத்திரி ஆகிய திருவிழாக்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
உணவு :
தமிழ்ச் சமையலுக்கு இத்தீவில் தனிச் சிறப்புண்டு. சமையலில் தமிழர் பயன்படுத்தும் பல பொருள்களுக்கும், தமிழ்ப் பெயர்களே இங்கு வழங்கப்படுகின்றன. இந்நாட்டில் 'விரதச் சாப்பாடு' சிறப்பானது. புலால் உணவை விரும்பும் இந்நாட்டு தமிழ் மக்கள் விரதச் சாப்பாட்டில் மிகவும் கட்டுப்பாடு உடையவர்கள். சோறுடன் சாம்பார், ரசம், பல்வகைக்காய்கறிகள், பச்சடி, அப்பளம், வடை, பாயாசம் அனைத்தும் வாழை இலையில் வைத்து சாப்பிடுகின்றனர். பெரும்பாலான விரதங்களில் இச்சாப்பாடு அல்லது சைவ பிரியாணி சமைக்கப்படும். சமையல் தொடர்பான அனைத்து சொற்களும் அதே பெயரில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.
உடை-அணிகலன்கள் :
அன்றாட வாழ்க்கையில் பெண்கள் கவுனிலும், ஆண்கள் பேண்ட், மேல்சட்டையுடன் உள்ளனர். பெண்கள் கும்மி, கோலாட்டம் ஆடும் நாட்களில் கால்பாதம் வரை பாவாடை, மேல் ஜாக்கெட், தாவணி அணிகின்றனர். கை நிறைய வளையல், காதில் தோடு, ஜிமிக்கி, மாட்டல், நெற்றிச் சுட்டி, நீண்ட பின்னல் அதில் குஞ்சம், மூக்குத்தி இவை அணிந்து தலைநிறையப் பூச்சூடுகின்றனர். ஆனால் அப்பூ காதிதப்பூ! திருமணத்தன்று ஒட்டியாணம் முதல் காசுமாலை வரை அவள் அணியாத அணிகலன்களே இல்லை. பட்டுப் புடவை கட்டுகிறாள். ஆண் பட்டுவேட்டி, சட்டை, துண்டுடன் காட்சியளிப்பான். கடவுள் வழிபாட்டில் பெண்கள் புடவையையே
கட்டியிருப்பார்கள்.
குடும்ப உறவு முறை :
தமிழர்கள் "கிரியோல் மொழி" பேசினாலும் உறவுப் பெயர்களை அழைக்கும் போது தமிழிலேயே அழைக்கின்றனர். சிற்றப்பா, அண்ணன், மாமாவை மட்டும் சற்றே மாற்றி 'மாமே' என்றும் மற்றும் அத்தான், அத்தை, அப்பாயி, அம்மாயி என்றும் கூப்பிடுகின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொரீசியஸில் தமிழர் - Tamils in Mauritius - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தமிழர்கள், நாடுகள், பெண்கள், வாழும், மொரீசியஸில், தகவல்கள், உண்டு, விழா, தமிழ்நாட்டுத், அணிகின்றனர், என்றும், | , ஆண்கள், ஆடையும், கோயில்களில், பாடி, தமிழ்ப், கும்மி, சிறப்பாகக், விரதச், கோலாட்டம், அம்மன், persons, living, tamil, mauritius, tamils, countries, tamilnadu, முதலிய, காவடி, மாரியம்மன், இன்றும், information, விரதம்