பொருநராற்றுப் படை - சங்க காலம்
சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு முடத்தாமக் கண்ணியார் இயற்றிய இப்பாட்டு 248 அடிகள் கொண்டது. போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.
பொருநன் கையாண்ட யாழ் பற்றிய வருணனை பாட்டின் முன் பகுதியிலேயே அமைந்துள்ளது. (4-22) கொடியவரான ஆறலை கள்வரின் (வழிப்பறிசெய்வோர்) கல்மனத்தையும் அருள் மனமாக மாற்ற வல்லது பாலை யாழ் என்கிறார் புலவர்.
யாழ் வருணனையைத் தொடர்ந்து, விறலியின் மேனியழகு பற்றிய அழகிய விளக்கம் காணப்படுகிறது (25-47). விறலியின் அழகு தகுந்த உவமைகளால் விளக்கப்படுகின்றது. அவள் குழையணிந்த காதிற்குக் கத்தரிக்கோலின் கடைப்பகுதி உவமையாகும். அடியின் மென்மைக்கு, ஓடி இளைத்த நாயின் நாக்கினை உவமை கூறியுள்ளார்.
கலைஞர்கட்கு அருள் சுரந்து பரிசளிக்கும் கரிகாலனின் வண்மையைப் புலவர் சிறப்புறப் பாராட்டியுள்ளார். கண்ணால் பருகுவது போலப் பார்த்து, எலும்பையும் குளிரச் செய்யுமாறு அன்பு செலுத்தி, ஈரும் பேனும் தங்கியுள்ள கந்தலாடையினை நீக்கி, கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய இழைகளால் நெய்யப்பட்ட பட்டாடையை உடுத்தி, உயர்ந்த அரிசியால் சமைத்த புலால் உணவினை உண்ணச் செய்து, கன்றொடு கூடிய
யானைகளைப் பரிசாக அளித்துப் பிரியாவிடை தருவான் கரிகாலன் என்கின்றார் புலவர். பால்போல் வெண்மையான நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கொடுத்து, காலில் ஏழடிகள் பின் சென்று அவர்கட்கு விடையளித்தான் என்கின்றார் புலவர். பல திணைகளும் அடுத்தடுத்து இருந்தமையால் ஒவ்வொரு திணை மாந்தரும் தம் பொருள்களை அடுத்துள்ள நில மக்களோடு பண்ட மாற்றிக் கொண்டனர் என்பதனை விளக்கியவர்,
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல் நறும்பூங் கண்ணி குறவர் சூட, கானவர் மருதம் பாட, அகவர் நீல்நிற முல்லைப் பஃறிணை நுவல |
என்று அவர்களின் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் விளக்கியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருநராற்றுப் படை - Porunaratrupadai - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புலவர், பொருநராற்றுப், காலம், சங்க, யாழ், தமிழ்நாட்டுத், தகவல்கள், நூல்கள், இலக்கிய, தமிழ், பற்றிய, | , என்கின்றார், விறலியின், அருள், பொருநன், list, sangam, porunaratrupadai, period, tamil, tamilnadu, literatures, information