நற்றிணை - சங்க காலம்
நற்றிணையில் உள்ள பாடல்களை இயற்றிய புலவர்கள் நூற்று எழுபத்தைவர். 56 பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. இதனைத் தொகுத்த புலவர் பெயரும் தெரியவில்லை. தொகுத்தவன் பாண்டியன் பன்னாடு தந்த மாறன் வழுதி.
உண்மைக்காதல் பிறவிதொறும் தொடரும் என்பதனை,
| சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில் பிறப்புப் பிறிதாகுவ தாயின் மறக்குவென் கொல்என் காதலன் எனவே (397) |
என்னும் அடிகள் காட்டுகின்றன.
செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின் உதவியை எதிர்பாராமல், எளிய உணவை வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.
| கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110) |
ஒருவனுக்கு உண்மையான செல்வம் என்பது, தன்னை நம்பியோரின் துன்பம் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களின் துயர்துடைக்கும் கருணை உள்ளமே என்கின்றார் இன்னொரு புலவர்.
| சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (210) |
பெரியோர் நன்கு ஆராய்ந்து ஒருவரோடு நட்புக் கொள்வர் என்றும், மாறாக நட்டபின்னர் அதன் பொருத்தத்தை ஆராயார் என்றும் ஒருவர் கூறுகின்றார். (32)
| முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் (355) |
என்ற நற்றிணைப் பகுதி 'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' என்ற திருக்குறளை நினைவூட்டக் காணலாம்.
ஏனைய சங்க நூல்கள் போன்றே இந்நூலும் தமிழர் பண்பாட்டின் விளக்கமாகவும், உவமைகள் நிரம்பிய உயர்ந்த இலக்கியச் செல்வமாகவும் விளங்குகின்றது.
நற்றிணை - Narrinai - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சங்க, நற்றிணை, நூல்கள், காலம், செல்வம், தமிழ்நாட்டுத், அடிகள், தகவல்கள், இலக்கிய, தமிழ், தலைவி, புலவர், | , பகுதி, narrinai, என்பது, தெரியவில்லை, என்றும், sangam, list, literatures, tamil, period, tamilnadu, போல், information, பாடல்களை