மதுரைக் காஞ்சி - சங்க காலம்
பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது. இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறி, தனக்கென வரையறுத்த நாட்களை நல்ல முறையில் வாழுமாறு அறிவுறுத்தும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றிய காஞ்சித்திணைப் பாட்டாகும். மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சி - நிலையாமை).
இதில் பாண்டிய நாட்டின் ஐந்திணை வளம், அவ்வந்நிலங்களில் நடக்கும் வாழ்க்கை முறைகள், பாண்டியன் பகைவர் நாட்டை அழித்தல், பணிந்தார்க்கு நலம் செய்தல், இருபெருவேந்தரையும் ஐம்பெருவேளிரையும் வென்றமை, சாலியூரையும், முதுவென்னிலையும் கைக்கொண்டமை, பரதவர்களை வென்றமை முதலான வெற்றிச் செயல்கள் ஆகியன விரிவாகக் கூறப்படுகின்றன.
வையையாற்று வளம், மதுரையைச் சூழ்ந்த அகழி, இரவும் பகலும் நடக்கும் அல்லங்காடி, நாளங்காடியின் தன்மைகள், அந்தணர் இருக்கை, சாவகர், சமணர், பௌத்தர்களின் இருக்கைகள், பெரியோர்களின் ஒழுகலாறுகள் ஆகியவற்றை ஆசிரியர் இனிதே விளக்கியுள்ளார். மாலை முதல் விடியற்காலம் வரையில் பல்வேறு மாந்தரின் செயல்களை அழகுறக் காட்டும் புலவர், பரத்தையர் தம்மை அழகுறுத்திக் கொண்டு செல்வக்குடி இளைஞர்களை மயக்கிப் பொருள் பறித்தலையும், உளியும், நூலேணியும் கொண்டு களவாடப்போகும் கள்வர் இயல்பையும், அவர்களைப் பற்றுதற்கு மறைந்து செல்லும் காவலர் இயல்பையும் காட்டுவது இதனுள் அழகாகவுள்ளது.
அமைச்சர்கள் காவிதிப் பட்டம் பெறுதல், அறங்கூர் அவையத்தின் சிறப்பு, சங்கறுத்து வளையல் செய்தல் முதலிய தொழில் வல்லுநரின் இயல்புகள், பாணர்களின் நிலை, அவர்களின் கலைவன்மை, கட்டிடக்கலை, நெசவுக்கலை முதலியவற்றின் மேம்பாடு என்பவை இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பாகவுள்ளது.
மதுரைக் காஞ்சி கூறும் நிலையாமை உலக வாழ்க்கையை இகழ்ந்து ஒதுக்குவது அன்று. உலகம் நிலையானது. இதில் நிலைத்த புகழை நிலைநிறுத்த வேண்டும் என்பதே புலவரின் அறிவுரை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக் காஞ்சி - Maduraikanchi - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காஞ்சி, மதுரைக், காலம், சங்க, நூல்கள், தகவல்கள், இலக்கிய, தமிழ்நாட்டுத், தமிழ், நடக்கும், வளம், இதில், செய்தல், வென்றமை, | , இயல்பையும், கொண்டு, நிலையாமை, பாண்டியன், literatures, tamil, period, list, sangam, tamilnadu, maduraikanchi, information