சிலப்பதிகாரம் - இரண்டாம் நூற்றாண்டு
தமிழிசையின் கூறுகளான பண், திறம், தூக்கு ஆகியனவும், குரல், முதலிய ஏழு சுரங்களும், ஏழு பாலைப் பாடல்களும், பாடலாசிரியன், யாழாசிரியன், குழலாசிரியன் தண்ணுமை ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்கள் ஆகியவையும் அரங்கேற்று காதையில் விளக்கப்பட்டுள்ளன.
இவ்வாறே மாதவி ஆடிய அல்லியம், கொடுகொட்டி, பாண்டரங்கம், முதலிய பதினொருவகை ஆடலையும் தேசி, மார்க்கம், வேத்தியல், பொதுவியல் என்று பாகுபாடு செய்யப்பட்ட பல்வேறு ஆடல் மரபுகளையும் ஆசிரியர் இக்காதையில் விளங்கியுள்ளார்.
நாடக மேடையின் அமைப்பு, அதில் தூணின் நிழல் புறம்படுமாறு விளக்கமைத்தல், மூன்று வகையான திரைச்சீலைகள் முதலிய கூறுகள் பலவற்றையும் ஆசிரியர் இந்நூலில் பொதிந்து வைத்துள்ளார்.
குழல்வழி நின்றது யாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே முழவொடு கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை (புகார்க்காண்டம், அரங்கேற்றுக்காதை, வரிகள்: 139 -142) |
என்ற பகுதி பல கருவிகளும் கூடி இசைக்கும் அழகைக் கூறுவது காண்க.
குடிமக்கள் காப்பியம்
உலகமொழிகள் பலவற்றிலும் காப்பியங்கள் உண்டு. அவையாவும் பெரும்பாலும் மன்னர் குடும்பத்தினரையே தலைமக்களாய்க் கொண்டவை. ஆனால் தமிழின் முதற்காப்பியமோ குடிமக்கள் காப்பியமாகத் திகழ்கின்றது. நாடாளும் மன்னன், குடிமக்களுள் ஒரு பெண்ணிடம் தோற்றுப் போகிறான். முடி மன்னர்களுக்கு வரம் கொடுக்கும் கடவுளாகக் குடிமகள் ஒருத்தி உயர்ந்து நிற்கிறாள் என்று காட்டும் சிலம்பு தனிச்சிறப்பு மிக்க காப்பியமாம்.
ஒற்றுமைக் காப்பியம்
தமிழின ஒற்றுமையையும், சமய ஒற்றுமையையும் வலியுறுத்தும் முதற்காப்பியம் சிலப்பதிகாரம்.
தமிழ் இன ஒற்றுமை
சிலப்பதிகாரமே முதலில் தமிழகத்தை ஒன்றாகக் கண்டது; தமிழன் என்ற இன உணர்ச்சிக்கு வித்திட்டது; பிறவிப் பகைவர்களாகத் தம்முள் போரிட்டழிந்தனர் தமிழ் மன்னர்கள். அடிகளோ பாண்டியன் அவல முடிவைக் கேட்டுச் சேரன் வருந்துவதனைக் காட்டியுள்ளார். தமிழரசர் வீரத்தை இகழ்ந்த ஆரிய மன்னரை அடக்க ஒன்றுபட்ட தமிழ் இனத்தின் சார்பாளனாக வடநாடு சென்றான் சேரமன்னன்.
வாழ்த்துக் காதையில் சேரநாட்டுப் பெண்கள் சோழநாட்டுப் பெண்களோடு கூடிநின்று மூவேந்தர் புகழையும் பாடி மகிழ்கின்றனர். இப்படி, தம் காப்பியத்தைக் கருவியாகக் கொண்டு ஒன்றுபட்ட தமிழகத்தை நமக்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்த இளங்கோவடிகள் பாராட்டுக்கு உரியவர்.
சமய ஒற்றுமை
சிலம்புக்குள்ள இன்னொரு சிறப்பாவது அது சமயங்களுக்கிடையே சகிப்புத் தன்மையை வற்புறுத்துவதாக அமைந்துள்ளது. அடிகள் சமணர். ஆனால் பிற சமய வெறுப்பை ஓரிடத்தும் காட்டவில்லை. சமணத் துறவி கண்ணனை வழிபடும் மாதரியிடம் மதிப்புக் கொண்டுள்ளார். மாதரியும் சமணத் துறவியைக் கண்டு காலில் வீழ்ந்து பணிகின்றாள். குன்றக் குரவையில் முருகனையும், வேட்டுவ வரியில் கொற்றவையையும், ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் அடிகள் வாழ்த்துகிறார். அவ்வக் கடவுளையும் பாடும்பொழுது சமமான பக்தி கொண்டவராக அடிகள் தோன்றுகின்றார். சாவக நோன்பியான கோவலன் வைதீக அந்தணர்களிடம் பரிவு காட்டுகிறான்; அவர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்குகின்றான். மாடல மறையோன் என்ற அந்தணன் கோவலனை உளமார வாழ்த்துகின்றான். இங்ஙனம் பல நிலையினரும் பகையின்றிக் கூடி வாழும் இனிய நிலையினை ஒரு சமரச ஞானியைத் தவிரப் பிறர் யாரும் காட்ட முடியாது.
வரலாற்றுப் பெட்டகம்
எல்லாவற்றுக்கும் மேலாக, சிலப்பதிகாரம் பண்டைத் தமிழரின் வரலாற்றையும், பண்பாட்டையும் உணர உதவும் பெட்டகமாக விளங்குகின்றது. சேர சோழ பாண்டிய மரபினர் பலருடைய போர் வெற்றியும், அவர் தம் தலைநகர்களின் அமைப்பும், வளமும், தமிழரின் வணிகச் சிறப்பும், சமய வாழ்க்கையும், கலைமரபும், நம்பிக்கையும், பழக்க வழக்கங்களும் மிக விரிவாக விளக்கப்பட்ட ஒரு தலைசிறந்த காப்பியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. தமிழர் திருமணத்தில் நான்மறை அந்தணர் சடங்கு செய்தலைச் சிலப்பதிகாரமே முதலில் கூறுகின்றது. இந்திரவிழாவைத் தமிழர் கொண்டாடியது பற்றிய விரிவான செய்தி இந்நூலில் தான் முதன்முதல் சொல்லப்படுகிறது. தமிழரின் இசை, கூத்து ஆகிய கலைகள் பற்றிய முழுமையான செய்திகளை விரிவாகத் தருவதும் இந்நூலேயாகும். சுருங்கச் சொன்னால் சிலப்பதிகாரம் தமிழர் தம் அரசியல், மற்றும் பண்பாட்டு வரலாற்றுப் பெட்டகம் ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிலப்பதிகாரம் - Silappatikaram - இரண்டாம் நூற்றாண்டு - 2nd Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சிலப்பதிகாரம், தமிழ், நூற்றாண்டு, இரண்டாம், தமிழ்நாட்டுத், முதலிய, அடிகள், நின்றது, கூடி, தமிழரின், தகவல்கள், தமிழர், நூல்கள், இலக்கிய, பற்றிய, | , ஒன்றுபட்ட, முதலில், தமிழகத்தை, சமணத், சிலப்பதிகாரமே, பெட்டகம், வரலாற்றுப், குரவையில், விளங்குகின்றது, இந்நூலில், list, tamilnadu, literatures, tamil, silappatikaram, century, information, தண்ணுமை, காப்பியம், ஒற்றுமையையும், குடிமக்கள், ஆசிரியர், காதையில், ஒற்றுமை