வில்லியம் பெண்டிங் பிரபு
1828 ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பதவியேற்றபோது இந்தியாவின் நிதி நிலைமை திருப்திகரமாக இல்லை. கருவூலம் காலியாக இருந்தது. அரசின் நிதிநிலை அறிக்கை ஒரு மில்லியன் ரூபாய் பற்றாக்குறையுடன் காணப்பட்டது. எனவே உடனடியாக நிதிநிலைமையை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தலைமை ஆளுநருக்கு இருந்தது. அதற்காக பெண்டிங் பல நடவடிக்கைகளை எடுத்தார்.
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவந்த ஊதியம் மற்றும் படிகள் குறைக்கப்பட்டதோடு அதிகப்படியான பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இராணுவத்துறையில் நடைமுறையிலிருந்த பணிக்காலத்தின்போது வழங்கப்பட்ட இரட்டைப்படி (பேட்டா) முறையை ஒழித்தார். இத்தகைய சீர்திருத்தங்களினால் அவர் திரும்பிச் செல்லும்போது கருவூலத்தில் 1.5 மில்லியன் ரூபாய் உபரியாக இருந்தது.
ஆட்சித்துறை சீர்திருத்தங்கள்
பெண்டிங் அறிமுகப்படுத்திய ஆட்சித் துறை சீர்திருத்தங்கள் அவரது அரசியல் முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பறை சாற்றியது. நீதித்துறையில், காரன்வாலிஸ் கொண்டுவந்த மாகாண மேல் முறையிட்டு நீதிமன்றங்கள் அகற்றப்பட்டன.
பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் இருந்தமைக்கு இந்த நீதிமன்றங்களே காரணமாக இருந்தன. அரசின் செலவு குறைந்தமையால் இயக்குநர்கள் இந்த நடவடிக்கையை உடனடியாக ஒப்புக்கொண்டனர். கீழ்மட்ட நீதிமன்றங்களில் அந்தந்தப் பகுதியின் மொழிகளிலேயே வழக்குகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது பெண்டிங்கின் மற்றொரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். மேலும் உயர்மட்ட நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்லியம் பெண்டிங் பிரபு , பெண்டிங், வரலாறு, வில்லியம், இந்திய, பிரபு, சீர்திருத்தங்கள், உடனடியாக, வழக்குகள், நீதிமன்றங்களில், ரூபாய், இந்தியா, இந்தியாவின், அரசின், மில்லியன்