வால்காவிலிருந்து கங்கை வரை - இரண்டாம் பதிப்பின் முன்னுரை
இரண்டாம்
பதிப்பின் முன்னுரை
ஆறு, ஏழு மாதங்களுக்குள் முதற் பதிப்பின் பூராப் பிரதிகளும் விற்றுப் போய் விடுவது ஓர் எழுத்தாளனுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் வசவு உருவத்திலும், உளறல் உருவத்திலும் வெளிப்பட்ட பழமை விரும்பிகளின் மனப் படபடப்புத்தான். ஆனால், இப்பொழுது வசவுகள் குறைந்து விட்டதென்று கருதுகிறேன். சில கனவான்களும், இது விஷயத்தில் தன்னடக்கத்தோடிருக்க முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கிறார்கள். பண்டித முறையிலே இந்நூலைப் பற்றி விமர்சனம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆசிரியன், தங்கள் தர்க்கங்களுக்கெல்லாம் பதில் எழுதுவானென்றும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆசிரியனின் பேனா அப்படி ஒன்றும் எழுதச் சோம்பியதில்லை. ஆனால், பதில் எழுதவேண்டிய-பதில் எழுதக்கூடிய தர்க்கமாயிருந்தால்தானே! இந்தக் கதைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் அந்தந்தக் காலத்தைப் பொறுத்த பலமான ஆதாரங்கள் இருக்கின்றன. உலகத்தில் எத்தனையோ பாஷைகளில் உள்ள தர்க்கரீதியான மொழியாராய்ச்சி, மண், கல், தாமிரம், பித்தளை, இரும்பு இவைகளிலே எழுதப்பட்டும் செதுக்கப்பட்டும் உள்ள சரித்திரம், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாட்டின் பழக்கவழக்கங்கள், புதைபொருள்கள் இவைகளிலிருந்தெல்லாம் ஆதாரங்கள் தேடப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தை எழுதும் பொழுதே இந்தக் கதைகளுக்கெல்லாம் ஆதாரமாயிருந்த நூல்கள் முதலியவற்றின் பெயர்களடங்கிய ஒரு பட்டியலை அநுபந்தமாகச் சேர்க்க வேண்டுமென்று நினைத்ததுண்டு. ஆனால், அது இந்தப் புத்தகத்தின் அநுபந்தமாக இராமல், இதைவிட ஒரு பெரிய புத்தகமாக ஆகிவிடும் என்று தோன்றியதால், வேலையின் பளுவையும் காலத்தின் செலவையும் கருதி அந்த எண்ணத்தை விட்டு விட்டேன்.
இந்த இரண்டாம் பதிப்பிலே, நான் அதிக மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை. ஆங்காங்கே சில சில்லரைத் திருத்தங்கள் மட்டுமே செய்திருக்கிறேன்.
ராகுல
சாங்கிருத்தியாயன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - இரண்டாம் பதிப்பின் முன்னுரை, புத்தகங்கள், பதிப்பின், இரண்டாம், முன்னுரை, பதில், வால்காவிலிருந்து, கங்கை, ஆதாரங்கள், இந்தப், கதைகள், உள்ள, மகிழ்ச்சி, சிறந்த, தரக்கூடிய, உருவத்திலும், இந்தக்