அறியவே எனக்கு மன வேதனை அதிகமாயிற்று. பாஞ்சாலம், யுத்தத்தின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஏராளமான சிப்பாய்களைக் கொடுத்துதவிய மாகாணம். அப்படியிருக்க, இந்த மாகாணம் இவ்வளவு மிருகத்தனமான அட்டூழியங்களுக்கு எப்படிப் பணிந்து பொறுத்துக் கொண்டிருந்தது என்பதே எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுதுகூட அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கமிட்டியின் அறிக்கையைத் தயாரிக்கும் வேலையும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பாஞ்சால மக்களிடம் எந்தவிதமான அட்டூழியங்கள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புவோர், இக்கமிட்டியின் அறிக்கையைப் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறேன். அதைக் குறித்து இங்கே நான் சொல்ல விரும்புவதெல்லாம், அந்த அறிக்கையில் மனமார மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பது ஒன்றுமே இல்லை. அதில் கூறப்பட்டிருப்பது ஒவ்வொன்றும் சாட்சியங்களைக் கொண்டே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான். மேலும், பிரசுரமாகி இருக்கும் சாட்சியங்கள், கமிட்டியினிடமிருக்கும் சாட்சியங்களில் மிகச் சிலவேதான். எங்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களில் ஒரு சிறிது சந்தேகத்திற்கு இடமுள்ளதாக இருந்த எதுவும், அறிக்கையில் வர நாங்கள் அனுமதிக்கவில்லை. உண்மை ஒன்றையே, அசல் உண்மையை மாத்திரமே, வெளிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் பேரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆகையால், பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னுடைய ஆட்சி நிலைத்திருக்கும்படி செய்வதற்காக எந்த அளவுக்குப் போகக்கூடியதாக இருக்கிறது, எவ்வளவு ஜீவகாருண்யமற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களைச் செய்யக் கூடியது என்பதை இந்த அறிக்கையைப் படிப்பவர்கள் அறிய முடியும். எனக்குத் தெரிந்த வரையில், இந்த அறிக்கையில் கூறப்பட்ட ஒரு விஷயமாவது, தவறானது என்று இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
36 பசுப் பாதுகாப்புக்கு பதிலாகக் கிலாபத்? |
பாஞ்சாலத்தில் நடந்த அட்டூழியங்களைத் தற்சமயத்திற்கு நாம் நிறுத்திவிட்டு மற்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பாஞ்சாலத்தில் நடந்த டயர் ஆட்சிக் கொடுமைகளைக் குறித்துக் காங்கிரஷ் விசாரணையைத் தொடங்கிய அச்சமயத்தில் எனக்கு ஓர் அழைப்பு வந்தது. கிலாபத் பிரச்சனையைக் குறித்து ஆலோசிப்பதற்காக டில்லியில் நடக்கவிருந்த ஹிந்து, முஸ்லிம் கூட்டு மகாநாட்டுக்கு வருமாறு என்னை அழைத்திருந்தார்கள்.