சத்ய சோதனை - பக்கம் 560
32 மறக்க முடியாத அந்த வாரம்! - 2 |
கமிஷனர் ஸ்ரீ கிரிபித்தின் காரியாலயத்திற்குச் சென்றேன். அக்காரியாலயத்திற்குப் போகும் மாடிப் படிக்கட்டுகளிலெல்லாம் சிப்பாய்கள், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் முற்றும் ஆயுதபாணிகளாக இருந்ததைக் கண்டேன். ராணுவ நடவடிக்கைக்குத் தயாராக இருப்பது போல அவர்கள் இருந்தனர். தாழ்வாரத்திலும் சிப்பாய்கள் அதிகம் இருந்தார்கள். உள்ளே செல்ல என்னை அனுமதித்தனர். நான் உள்ளே சென்றபோது ஸ்ரீ கிரிபித்துடன் ஸ்ரீ பௌரிங்கும் உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். நான் நேரில் கண்ட காட்சிகளையெல்லாம் கமிஷனருக்கு விவரித்துச் சொன்னேன். அவர் பின்வருமாறு சுருக்கமாகப் பதில் கூறினார்: “ஊர்வலம் கோட்டைக்குப் போனால், அங்கே நிச்சயமாகக் கலகம் நேர்ந்திருக்குமாகையால், கோட்டையை நோக்கி ஊர்வலம் போவதை நான் விரும்பவில்லை. கேட்டுக் கொள்ளுவதற்குக் கூட்டத்தினர் செவிசாய்க்க மாட்டார்கள் என்பதைக் கண்டேன். ஆகையால், கூட்டத்திற்குள் புகுந்து தாக்கும்படி குதிரைப் படையினருக்கு நான் உத்தரவிடுவது அவசியமாயிற்று.” அதற்கு நான் “ஆனால் அதன் விளைவு என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவே வேண்டுமே. குதிரைகள் மக்களை மிதித்தே தீரும். அந்தக் குதிரைப் படையை அனுப்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன்” என்றேன். ஸ்ரீ கிரிபித் கூறியதாவது: “அதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. உங்கள் உபதேசத்தினால் மக்களிடையே என்ன பலன் ஏற்படும் என்பதை உங்களைவிடப் போலீஸ் அதிகாரிகளாகிய நாங்கள் நன்கு அறிவோம். ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லையென்றால் நிலைமை மீறிப் போய்விடும். உங்கள் கட்டுக்கும் ஜனங்கள் அடங்காதவர்களாகப் போய்விடுவது நிச்சயம் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன். சட்டத்தை மீறி நடப்பதென்பது வெகு சீக்கிரத்தில் அவர்களுக்குப் பிடித்தமான தாகிவிடும். ஆனால், அமைதியாக இருக்க வேண்டிய கடமையை அவர்களால் தெரிந்துகொள்ள முடியாது. உங்களுடைய நோக்கங்கள் நல்லவையே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் பொதுஜனங்கள் அவற்றைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய இயற்கையான சுபாவத்தை அனுசரித்துத்தான் அவர்கள் நடப்பார்கள்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 560, புத்தகங்கள், நான், ஸ்ரீ, பக்கம், கண்டேன், சோதனை, சத்ய, முடியாது, வேண்டிய, உங்கள், என்பதை, நாங்கள், குதிரைப், மாட்டார்கள், சிப்பாய்கள், கமிஷனர், உள்ளே, மோட்டாரை, சிறந்த