சத்ய சோதனை - பக்கம் 535
சென்ற இடங்களிலெல்லாம் கூட்டங்களை நடத்தினோம். அவற்றிற்கு மக்கள் வந்தார்கள். ஆனால், ஒருவர் இருவர்கூட ராணுவத்தில் சேர முன்வரவில்லை. “நீங்கள் அகிம்சையை அனுசரிக்கிறவர்கள். அப்படியிருக்க ஆயுதங்களை ஏந்துமாறு எங்களை நீங்கள் எப்படிக் கேட்கலாம்?” “எங்கள் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அரசாங்கம் இந்தியாவுக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டது?” இவைபோன்ற கேள்விகளையெல்லாம் எங்களைக் கேட்டார்கள் என்றாலும், நிதானமாக நாங்கள் வேலை செய்துகொண்டு போனது பயன் தர ஆரம்பித்தது. பலர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர். முதல் கோஷ்டி அனுப்பப்பட்டதுமே தொடர்ந்து ஆட்களை அனுப்பிக் கொண்டிருப்பது சாத்தியமாகும் என்று நம்பினோம். படைக்குச் சேரும் ஆட்களை எங்கே தங்கச் செய்வது என்பதைப் பற்றிக் கமிஷனருடன் ஆலோசிக்கவும் தொடங்கினேன். டில்லியில் நடந்த மகாநாட்டை அனுசரித்து, ஒவ்வொரு டிவிஷனிலும் கமிஷனர்கள் மகாநாடுகளை நடத்தினார்கள். அத்தகைய மகாநாடு ஒன்று குஜராத்தில் நடந்தது. என் சக ஊழியர்களையும் என்னையும் அதற்கு அழைத்திருந்தார்கள். நாங்கள் போயிருந்தோம். ஆனால், டில்லி மகாநாட்டில் எனக்கு இருந்த இடம்கூட இதில் எனக்கு இல்லை என்பதை உணர்ந்தேன். அடிமை உணர்ச்சியே நிலவியிருந்த அச்சூழ்நிலை எனக்குச் சங்கடமாக இருந்தது. அங்கே கொஞ்சம் விரிவாகவே பேசினேன். நான் சொன்னதில் அதிகாரிகளுக்குக் கஷ்டமாக இருக்கக்கூடிய இரண்டொரு விஷயங்கள் நிச்சயமாக இருந்தனவேயன்றி அவர்களுக்குத் திருப்தியளிக்கும்படி நான் எதுவும் சொல்ல முடியவில்லை. படையில் சேரும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு நான் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு வந்தேன். அவற்றில் நான் உபயோகித்த வாதங்களில் ஒன்று கமிஷனருக்குப் பிடிக்கவில்லை. அந்த வாதம் இதுதான்: “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி செய்திருக்கும் தவறான பல செய்கைகளில், தேச மக்கள் எல்லோருக்குமே ஆயுதப் பயிற்சி இல்லாது போகும்படி செய்திருக்கும் சட்டமே மிகவும் மோசமானது என்று சரித்திரம் கூறும். ஆயுதச் சட்டம் ரத்தாக வேண்டும் என்று நாம் விரும்பினால், ஆயுதங்களை உபயோகிப்பதை நாம் கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்குப் பொன்னான வாய்ப்பு இதோ இருக்கிறது. அரசாங்கத்திற்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில், மத்தியதர வகுப்பினர் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுவதற்கு இருக்கும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 535, புத்தகங்கள், நான், பக்கம், சோதனை, சத்ய, எனக்கு, நாம், விரும்பினால், அதற்கு, செய்திருக்கும், நாங்கள், சிறந்த, மக்கள், ஆயுதங்களை, ஆட்களை, ஒன்று