சத்ய சோதனை - பக்கம் 533
லோகமான்ய திலகர், அலி சகோதரர்கள் போன்ற தலைவர்கள் மகாநாட்டிற்கு அழைக்கப்படாமல் விலக்கப்பட்டிருந்தது குறித்து என் வருத்தத்தை அக்கடிதத்தில் தெரிவித்தேன். மக்களின் குறைந்த பட்ச ராஜீயக் கோரிக்கையைக் குறித்தும், யுத்தத்தினால் ஏற்பட்ட நிலைமையின் காரணமாக உண்டாகியிருக்கும் முஸ்லிம்களின் கோரிக்கையைப் பற்றியும் அதில் கூறினேன். அக்கடிதத்தைப் பிரசுரிக்கவும் அனுமதி கேட்டேன். வைசிராயும் மகிழ்ச்சியுடன் அனுமதியளித்தார்.
மகாநாடு முடிந்தவுடனேயே வைசிராய் சிம்லாவுக்குப் போய் விட்டதால், அக்கடிதத்தை அங்கே அனுப்ப வேண்டியிருந்தது. எனக்கோ, அக்கடிதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. தபால் மூலம் அனுப்புவதாயிருந்தால் தாமதம் ஆகிவிடவும் கூடும். சீக்கிரத்தில் கடிதம் போய்ச்சேர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அதைக் கண்டவர்களிடம் கொடுத்தனுப்பிவிடவும் எனக்கு மனமில்லை. புனிதமான ஒருவர் அதை எடுத்துச் சென்று வைசிராய் மாளிகையில் அவரிடம் நேரில் சேர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். கேம்பிரிட்ஜ் மிஷனைச் சேர்ந்த புனித பாதிரியாரான பூஜ்ய அயர்லாந்திடம் கொடுத்தனுப்பலாம் என்று தீனபந்து ஆண்டுரூஸு ம், பிரதமப் பேராசிரியர் ருத்திராவும் யோசனை கூறினர். கடிதத்தைப் படித்துப் பார்த்து, அது நல்லது என்று தமக்குத் தோன்றினால் அதைக் கொண்டு போவதாக அவர் ஒப்புக்கொண்டார். அக்கடிதம் ரகசியமானதல்லவாகையால் அதை அவர் படித்துப் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. கடிதத்தை அவர் படித்தார்; அது அவருக்குப் பிடித்திருந்தது. அதைக் கொண்டுபோய்ச் சேர்க்க ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணம் கொடுப்பதாகக் கூறினேன். ஆனால், இன்டர் வகுப்பில் பிரயாணம் செய்வதுதான் தமக்குப் பழக்கம் என்று கூறி அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 533, புத்தகங்கள், நான், எனக்கு, அதைக், பக்கம், வேண்டியிருந்தது, அவர், சத்ய, சோதனை, வேண்டும், அக்கடிதம், விரும்பினேன், படித்துப், வைசிராய், ஒப்புக்கொண்டார், மக்கள், அதிக, சிறந்த, அதில், கடிதம், அக்கடிதத்தில், என்பதை, கூறினேன்