சத்ய சோதனை - பக்கம் 444
நான் கூறிய இந்தப் புத்திமதி முழுவதையும் பார்ஸி ருஸ்தம்ஜி சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார் என்று நான் சொல்லுவதற்கில்லை. அவர் மிகுந்த தைரியசாலியே. ஆனால், அந்தச் சமயத்தில் அவருக்குத் தைரியமே இல்லை. அவருடைய நற்பெயருக்கும் கீர்த்திக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது. எவ்வளவோ கவனமாகவும் சிரமப்பட்டும் அவர் கட்டியிருந்த அக்கட்டிடம் சுக்குச்சுக்காகச் சிதறிவிடுவதென்றால் பிறகு அவர் கதி என்ன? “சரி, என்னை உங்களிடம் முற்றும் ஒப்படைத்துவிட்டேன் என்று உங்களிடம் சொல்லிவிட்டேன். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்” என்றார்.
பிறரிடம் விவாதித்து என் பக்கம் திருப்புவதற்கு எனக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவையும் நான் இந்த வழக்கில் உபயோகித்தேன். சுங்க அதிகாரியைப் போய்ப் பார்த்தேன். அவரிடம் முழுவதையும் தைரியமாக எடுத்துக் கூறினேன். கணக்குப் புத்தகங்கள் முழுவதையும் அவரிடமே ஒப்படைத்து விடுவதாகவும் வாக்களித்தேன். தாம் செய்து விட்ட தவறுக்காகப் பார்ஸி ருஸ்தம்ஜி எவ்வளவு வருத்தப்படுகிறார் என்பதையும் எடுத்துக்கூறினேன். சுங்க அதிகாரி கூறியதாவது: “அந்தப் பார்ஸியிடம் எனக்குப் பிரியம் உண்டு. இவ்விதம் முட்டாள்தனமான காரியத்தை அவர் செய்துவிட்டதற்காக வருந்துகிறேன். இதில் என் கடமை இன்னது என்பது உங்களுக்கே தெரியும். அட்டர்னிஜெனரல் கூறும் வழியில் நான் நடக்க வேண்டியவன். ஆகவே, உங்கள் முயற்சியையெல்லாம் அவரிடம் செய்யும்படி உங்களுக்கு யோசனை கூறுகிறேன்.” “பார்ஸி ருஸ்தம்ஜியைக் கோர்ட்டுக்கு இழுத்து விடவேண்டும் என்று நீங்கள் பிடிவாதம் செய்யாமல் இருந்தால் நன்றியறிதல் உள்ளவனாவேன்” என்றேன். இந்த வாக்குறுதியை அவரிடம் பெற்றுக்கொண்டு பிறகு அட்டர்னி ஜெனரலுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினேன். அவரை நேரிலும் போய்ப் பார்த்தேன். நான் கபடமின்றி நடந்து கொண்டதை அவர் பாராட்டினார் என்று கூறச் சந்தோஷமடைகிறேன். நான் எதையுமே மறைக்கவில்லை என்பதை அவர் நிச்சயமாக அறிந்துகொண்டார். “இல்லை என்ற பதிலை நீங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டீர்கள் என்பதைக் காண்கிறேன்” என்று அவர் சொன்னார். என்னுடைய விடாமுயற்சியையும் கபடமின்மையையும் குறித்து அவர் இவ்விதம் கூறியது, இந்த வழக்கில்தானா அல்லது வேறு வழக்கிலா என்பது இப்பொழுது எனக்கு ஞாபகமில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 444, அவர், நான், புத்தகங்கள், பக்கம், அவரிடம், முழுவதையும், சோதனை, சத்ய, போய்ப், பார்த்தேன், நீங்கள், என்பது, இவ்விதம், சுங்க, பிறகு, பார்ஸி, சிறந்த, ருஸ்தம்ஜி, உங்களிடம், எனக்கு, உங்கள், எவ்வளவு