சத்ய சோதனை - பக்கம் 401
ஆனால், உள்ளத்தின் பண்பு அல்லது சன்மார்க்கத்தை வளர்த்துக்கொள்ளுவதற்கே எப்பொழுதும் நான் முதல் இடம் கொடுத்து வந்தேன். அவர்களுடைய வயதிலும், அவர்கள் வளர்ந்த விதத்திலும் என்னதான் வித்தியாசம் இருந்தாலும், எல்லோருக்கும் ஒரே விதமான சன்மார்க்கப் பயிற்சியை அளித்து விடமுடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் அவர்களுடைய தந்தையாக அவர்களிடையே இருந்து வருவது என்றும் தீர்மானித்தேன். அவர்கள் பெறும் கல்விக்குச் சரியான அடிப்படை அவர்கள் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளுவதே என்று கருதினேன். அந்த அடிப்படையைப் பலமாகப் போட்டுவிட்டால், மற்ற விஷயங்களையெல்லாம் அவர்களாகவோ அல்லது நண்பர்களின் உதவியாலோ அவர்கள் கற்றுக்கொண்டு விடுவார்கள் என்பதும் என் கருத்து.
அதோடு இலக்கியப் பயிற்சி இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்ததால் ஸ்ரீ கால்லென்பாக், ஸ்ரீ பிரக்ஜி தேசாய் ஆகியவர்களின் உதவியுடன் சில வகுப்புக்களையும் ஆரம்பித்தேன். உடலை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நான் குறைத்து எண்ணிவிடவில்லை. அன்றாடம் வழக்கமாக அவர்கள் செய்துவந்த காரியங்களினால் இந்த உடல் வளர்ச்சியை அவர்கள் பெற்று வந்தார்கள். ஏனெனில், பண்ணையில் வேலைக்காரர்களே இல்லை. சமையலிலிருந்து தோட்டிவேலை வரையில் எல்லாவற்றையும் பண்ணைவாசிகளே செய்துவந்தனர். பழ மரங்கள் பலவற்றைக் கவனித்துக்கொள்ளவும் வேண்டியிருந்தது. தோட்ட வேலையும் அதிகமிருந்தது. தோட்டவேலையில் ஸ்ரீ கால்லென் பாக்குக்கு அதிக ஆர்வம். அரசாங்கத்தின் மாதிரித் தோட்டம் ஒன்றில் இருந்ததனால் அவருக்கு இதில் அனுபவமும் இருந்தது. சமையல் வேலையில் ஈடுபடாத மற்ற எல்லாக் குழந்தைகளும், பெரியவர்களும், கொஞ்ச நேரம் தோட்ட வேலை செய்தாக வேண்டியது அவர்களுடைய கடமையாயிற்று. இவ்வேலையில் பெரும் பகுதியைக் குழந்தைகளே செய்துவந்தனர். குழிகளைத் தோண்டுவது, மரம் வெட்டுவது, தூக்குவது போன்றவைகளை அவர்களே செய்தார்கள். இவை அவர்களுக்கு நல்ல தேகப்பயிற்சியை அளித்தன. இவ் வேலைகளை அவர்கள் சந்தோஷத்தோடு செய்துவந்தனர். ஆகையால், அவர்களுக்கு வேறு தேகப்பயிற்சியோ, விளையாட்டுக்களோ பொதுவாகத் தேவைப்படவில்லை. இக் குழந்தைகளில் சிலர் - சிற்சில சமயங்களில் எல்லாக் குழந்தைகளுமே-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 401, நான், புத்தகங்கள், பக்கம், ஸ்ரீ, செய்துவந்தனர், அவர்களுடைய, சத்ய, சோதனை, எல்லாக், அவர்களுக்கு, தோட்ட, சிறந்த, வேண்டியது, அல்லது, மற்ற