எப்பொழுதுமே என் திடமான அபிப்பிராயமாக இருந்து வந்திருக்கிறது. இதன் மூலம் நாட்டின் ஆன்மீக, சமூக பாரம்பரியச் செல்வம் குழந்தைகளுக்கு இல்லாது போகும்படி செய்து, அந்த அளவுக்கு நாட்டின் சேவைக்குத் தகுதியில்லாதவர்களாகவும், அவர்களை செய்து விடுகிறார்கள். இவ்விதத் திடமான கருத்துக்களை நான் கொண்டிருந்ததால், குழந்தைகளிடம் குஜராத்தியில் தான் பேசுவது என்று வைத்துக்கொண்டேன். இது போலக்குக்குப் பிடிப்பதே இல்லை. அவர்களுடைய எதிர்காலத்தை நான் நாசமாக்குகிறேன் என்று அவர் கருதினார். தம் முழுவலிமையுடனும், அன்புடனும் என்னோடு விவாதிப்பார். ஆங்கிலம் போன்ற உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு மொழியை, மழலைப் பருவத்திலிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளுவதாக இருந்தால், வாழ்க்கைப் போராட்டத்தில் மற்றவர்களைவிட அதிக அனுகூலங்களைச் சுலபமாக அவர்கள் பெறுவார்கள் என்பார், போலக். ஆனால், என் மனத்தை அவரால் மாற்ற முடியவில்லை. என் போக்குத்தான் சரி என்பதை அவர் அறிந்து கொள்ளும்படி செய்துவிட்டேனா, அல்லது நான் அதிகப் பிடிவாதக்காரன் என்று அவர்தான் விட்டுவிட்டாரா என்பது எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. இது, இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. என் கருத்துக்கள், அனுபவத்தினால் இப்பொழுது அதிகப் பலப்பட்டே இருக்கின்றன. முழு இலக்கியப் படிப்பும் இல்லாததனால் என் புதல்வர்கள் நஷ்டமடைந்திருந்தாலும், இயற்கையாகவே தாய் மொழியில் அவர்கள் அடைந்த அறிவு, அவர்களுக்கும் நாட்டுக்கும் நன்மையானதாகவே இருக்கிறது. இதனாலேயே, தங்கள் சொந்த நாட்டில் அந்நியரைப் போல் தோன்றியிருக்க வேண்டியவர்கள், இன்று அப்படித் தோற்றமளிக்காமல் இருக்கிறார்கள். இயற்கையாகவே அவர்கள் இரு மொழிகளை அறியலாயினர். ஏராளமான ஆங்கில நண்பர்களுடன் தினமும் தொடர்பு கொள்ளவேண்டியிருந்தாலும், முக்கியமாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகவே இருந்த நாட்டில் அவர்கள் இருந்தாலும் எளிதில் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் கூடியவர்களாக இருக்கின்றனர்.
ஜோகன்னஸ்பர்க்கில் நான் நிலைபெற்றுவிட்டேன் என்று நினைத்த பிறகும் எனக்கு நிலையான வாழ்க்கை ஏற்படவில்லை. இனிமேல் கொஞ்சம் அமைதியாக இருக்க முடியும் என்று நான் எண்ணிய சமயம், எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நேட்டாலில் ஜூலுக் ‘கலகம்’ ஆரம்பமாயிற்று என்று பத்திரிகைகளில் செய்தியைப் படித்தேன். ஜூலுக்களிடம் எனக்கு எந்த விதமான