சத்ய சோதனை - பக்கம் 301
சாந்தா குருஸிலிருந்து சர்ச்கேட்டுக்குப் போய் வர முதல் வகுப்பு ரெயில் ‘ஸீஸன்’ டிக்கெட்டு வாங்கிக்கொண்டேன். என் வண்டியில் நான் ஒருவனே முதல் வகுப்புப் பிரயாணியாக இருப்பதைக் குறித்து நான் அடிக்கடி ஒருவகையான பெருமை கொண்டதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அடிக்கடி பாந்தராவுக்குப் போகும் வேகமான ரெயிலில் செல்வதற்காகவே நான் அங்கே போய்விடுவேன்.
வக்கீல் தொழில் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே எனக்கு வருமானம் கிடைத்து வந்தது. எனது தென்னாப்பிரிக்கக் கட்சிக்காரர்கள், அவ்வப்போது எனக்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கிடைத்த வருமானம், என் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போவதற்குப் போதுமானதாக இருந்தது.
ஹைகோர்ட்டு வழக்கு எதுவும் எனக்கு இன்னும் கிடைத்தபாடில்லை. அக் காலத்தில் பயிற்சிக்காக நடந்துவந்த சட்ட விவாதக் கூட்டங்களில் பங்கெடுத்துக்கொள்ள நான் என்றுமே துணிந்ததில்லையெனினும் அக் கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தேன். அவைகளில் ஜமியத்ராம் நானா பாய் முக்கியமாகப் பங்கெடுத்துக் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. மற்றப் புதுப் பாரிஸ்டர்களைப் போலவே நானும், ஹைக்கோர்ட்டில் நடக்கும் விசாரணைகளைக் கவனிக்கப்போவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்படி அங்கே போய்கொண்டிருந்ததன் நோக்கம்,என் அறிவை வளர்த்துக்கொள்ளுவதைவிடக் கடலிலிருந்து நேராக அங்கே அடித்துக்கொண்டிருக்கும், நித்திரையை அளிக்கும், இன்பக் காற்றை வாங்குவதற்குத்தான். இந்தச் சுகத்தை அனுபவித்து வந்தவன் நான் ஒருவன் மாத்திரம் அல்ல என்பதையும் கவனித்தேன். அது ஒரு நாகரிகச் செயலாகவே ஆகிவிட்டதால் அதைக் குறித்து வெட்கப்படவேண்டியது எதுவும் இல்லை.
என்றாலும், ஹைக்கோர்ட்டுப் புத்தகசாலையைப் பயன்படுத்திக் கொண்டேன். பலருடன் புதிதாகப் பழக்கமும் ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே எனக்கு ஹைக்கோர்ட்டிலும் வேலை இருக்கும் என்று தோன்றிற்று.
இவ்வாறு ஒரு புறத்தில் என் தொழில் சம்பந்தமான கவலையே நீங்கிவிட்டதாகக் கருதலானேன். மற்றொரு புறத்திலோ, என் மீது சதா கண் வைத்திருந்தவரான கோகலே, எனக்காகத் தமது சொந்தத் திட்டங்களைப் போடுவதில் சுறுசுறுப்பாக இருந்து வந்தார். ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று தடவைகள் என் அலுவலகத்திற்கு வருவார். நான் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கருதும் நண்பர்களுடனேயே அவர் எப்பொழுதும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 301, நான், எனக்கு, புத்தகங்கள், பக்கம், அங்கே, சத்ய, சோதனை, எதுவும், வேலை, அவர், கொண்டேன், அடிக்கடி, சிறந்த, குறித்து, தொழில், வருமானம்