சத்ய சோதனை - பக்கம் 222
மூன்றாம் பாகம்
1. புயலின் குமுறல்கள்
நான் மனைவியுடனும் குழந்தைகளோடும் கப்பல் பிரயாணம் செய்வது இதுதான் முதல் தடவை. ஹிந்துக்களில் மத்திய தரவகுப்பினரிடையே பால்ய விவாகம் செய்து விடும் வழக்கம் இருப்பதால், கணவன் படித்திருப்பான், மனைவி கொஞ்சம்கூட எழுத்து வாசனையே இல்லாதிருப்பாள் என்பதை இச் சரித்திரத்தில் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். இவ்விதம் அவர்கள் இருவர் வாழ்க்கைக்கும் இடையே பெரும் அகழ் ஏற்பட்டு, அவர்கள் வாழ்வைப் பிரித்து நின்றது. கணவன்,மனைவிக்கு ஆசானாகவும் இருக்க வேண்டியிருந்தது. ஆகையால், என் மனைவியும் குழந்தைகளும் அணிய வேண்டிய உடைகள் யாவை, அவர்கள் சாப்பிட வேண்டியது என்ன, புதிய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் எந்தவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பனவற்றையெல்லாம் நானே சிந்தித்து முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த நாட்களைப் பற்றிய சில நினைவுகள் இப்பொழுது நகைப்பை ஊட்டுபவைகளாக இருக்கின்றன.
‘கணவன் சொல் தவறாமல் பணிந்து நடந்து வருவதே தனக்கு உயர்ந்த தருமம்’ என்று ஒரு ஹிந்து மனைவி கருதுகிறாள். ஒரு ஹிந்துக் கணவனோ, மனைவிக்கு எஜமானனும் எல்லாமும் தானே என்று எண்ணுகிறான்; தன் மனைவி, தான் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்ய வேண்டியது கடமை என்றும் கருதுகிறான்.
நாம் நாகரிகம் உள்ளவர்களாகத் தோன்ற வேண்டுமாயின் நடை உடை பாவனைகளெல்லாம் சாத்தியமானவரை ஐரோப்பியத்தரத்திற்குப் பொருத்தமாக இருக்கவேண்டும் என்று எந்தச் சமயத்தைப் பற்றி எழுதுகிறேனோ அந்தச் சமயத்தில், நான் நம்பி வந்தேன். ஏனெனில், அப்படிச் செய்தால் தான் நமக்குக் கொஞ்சம் செல்வாக்காவது இருக்கும். அந்தச் செல்வாக்கு இல்லாது போனால், சமூகத்திற்குச் சேவை செய்வது சாத்தியமாகாது என்றும் நான் அப்போது எண்ணினேன்.
ஆகையால், என் மனைவியும் குழந்தைகளும் எந்தவிதமான ஆடைகள் அணிவது என்பதில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். அவர்கள் கத்தியவார்ப் பனியாக்கள் என்று கண்டுகொள்ளக் கூடியவாறு அவர்கள் உடை இருப்பதை நான் எப்படி விரும்ப முடியும்? இந்தியர்களில் பார்ஸிகளே, அதிக நாகரிகம் உள்ளவர்களாக அப்பொழுது கருதப்பட்டு வந்தார்கள். ஆனாலும், ‘முழு ஐரோப்பிய உடை சரிப்படாது’ என்று தோன்றவே, பார்ஸி உடையை அவர்கள் அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 222, புத்தகங்கள், நான், மனைவி, பக்கம், சோதனை, சத்ய, வந்தேன், தான், செய்ய, வேண்டும், அந்தச், வேண்டியது, நாகரிகம், என்றும், ஆகையால், கணவன், செய்வது, சிறந்த, மனைவிக்கு, வேண்டியிருந்தது, குழந்தைகளும், மனைவியும், அணிய