சத்ய சோதனை - பக்கம் 208
நான் இந்தியாவுக்கு வந்தபோது, விக்டோரியா மகாராணியின் வைர விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராஜ்கோட்டில் இதற்காக அமைக்கப்பட்டிருந்த கமிட்டியில் சேருமாறு என்னை அழைத்தார்கள். அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால், கொண்டாட்டம் பெரும்பாலும் பகட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. வெளி வேஷமாகவே காரியங்கள் நடந்ததைக் கண்டு, மனவருத்தம் அடைந்தேன். ‘கமிட்டியில் நான் இருக்க வேண்டுமா?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், முடிவாக, நான் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டுபோவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.
விழாவை ஒட்டிச் செய்யப்பட்ட யோசனைகளில் ஒன்று, மரம் நடுவது என்பது, அநேகர் இதைப் பகட்டுக்காகவும் அதிகாரிகளைத் திருப்தி செய்யவேண்டும் என்பதற்காகவும் செய்ததைக் கண்டேன். மரம் நடுவது, கட்டாயமானது அல்ல என்றும், அது ஒரு யோசனையே என்றும் அவர்களிடம் நான் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். செய்வதானால் சரியாகச் செய்யவேண்டும்; இல்லா விட்டால் சும்மா இருந்துவிட வேண்டும். என் கருத்தைக் கேட்டு அவர்கள் நகைத்தார்கள் என்றே எனக்கு ஞாபகம். என் பங்குக்கு ஏற்பட்ட மரத்தை நான் உண்மையான சிரத்தையுடனேயே நட்டு, ஜாக்கிரதையாகத் தண்ணீர் ஊற்றியும் வளர்த்தேன் என்பது எனக்கு நினைவு இருக்கிறது.
அதேபோல என் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜவாழ்த்துக் கீதம் பாடக்கற்றுக் கொடுத்தேன். உள்ளூர்ப் போதனாமுறைக் கல்லூரி மாணவர்களுக்கும் அதை நான் சொல்லிக் கொடுத்தது நினைவிருக்கிறது. ஆனால் அப்படி நான் சொல்லிக் கொடுத்தது ஜு பிளி சமயத்திலா அல்லது இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஏழாம் எட்வர்டுக்கு முடி சூட்டு விழா நடந்தபோதா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. பிற்காலத்தில் அப் பாடலின் அடிகள் எனக்கு அருவருப்பை உண்டாக்கின. அகிம்சையைப் பற்றிய என் எண்ணங்கள் வளர்ச்சியடையவே, நான் எண்ணுவதிலும் பேசுவதிலும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்தேன்.
‘அவள் விரோதிகளைச் சிதறடித்து அவர்கள் வீழ்ச்சியடையச் செய்யும்; அவர்களது ராஜ்யம் குழப்பமடைந்து வஞ்சகமான அவர்கள் தந்திரங்கள் நிறைவேறாது செய்யும்’ |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 208, நான், எனக்கு, புத்தகங்கள், சோதனை, பக்கம், சத்ய, என்பது, என்றும், செய்யவேண்டும், சொல்லிக், கொடுத்தது, ஞாபகம், இருக்க, சிறந்த, என்னை, ஆரம்பித்தேன், மரம், நடுவது