சத்ய சோதனை - பக்கம் 19
என்றாலும், சமஸ்கிருத பாடம் அதிகக் கஷ்டமாகத்தான் இருந்தது. க்ஷேத்திர கணிதத்தில் மனப்பாடம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால், சமஸ்கிருதத்திலோ ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இந்தப் பாடமும் நான்காம் வகுப்பிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால் வகுப்புக்குப் போனதும் மனச்சோர்வு அடைந்து விட்டேன். அந்த ஆசிரியரோ கடுமையாக வேலை வாங்குகிறவர். பையன்களை நிர்ப்பந்தப் படுத்துவதில் அவருக்கு ஒரே ஆசை என்றும் நினைத்தேன். சமஸ்கிருத ஆசிரியருக்கும் பர்ஸிய ஆசிரியருக்கும் ஒருவகைப் போட்டியே இருந்து வந்தது. பர்ஸிய பாஷை போதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அப்படிக் கண்டிப்பில்லாதவர் ; பர்ஸிய பாஷை இலகுவானது; அந்த ஆசிரியரும் நல்லவர்; மாணவர்களை வருத்துவதில்லை என்று பையன்கள் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்ளுவார்கள். சுலபம் என்பதில் மயங்கிவிட்டேன்; ஒருநாள் பர்ஸிய வகுப்பிலேயே போய் உட்கார்ந்து கொண்டேன். நான் இவ்விதம் செய்ததற்காகச் சமஸ்கிருத ஆசிரியர் வருத்தப்பட்டார். என்னை அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பின்வருமாறு சொன்னார்: ‘நீ ஒரு வைஷ்ணவரின் மகன் என்பதை எப்படி மறந்து போனாய்? உன் மதத்தின் மொழியை நீ கற்க வேண்டாமா? இதில் உனக்கு ஏதேனும் கஷ்டமிருந்தால் என்னிடம் வந்து சொல்லுவதற்கென்ன? என்னால் ஆன வரையில் சிரமப்பட்டு மாணவர்களான உங்களுக்குச் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலே போகப் போக மனத்தைக் கவரும் விஷயங்கள் இம்மொழியில் இருப்பதை நீ அறிவாய். நீ மனம் தளர்ந்து விடக்கூடாது. வா. திரும்பவும் சமஸ்கிருத வகுப்பிலேயே வந்து உட்கார்.’
அவர் காட்டிய அன்பினால் வெட்கிப் போனேன். ஆசிரியரின் அன்பை அலட்சியம் செய்துவிட என்னால் முடியவில்லை. இந்த ஆசிரியரான கிருஷ்ண சங்கர பாண்டியாவை இன்று நான் நன்றியுடனேயே நினைக்கிறேன். ஏனெனில், அப்பொழுது நான் கற்றுக் கொண்ட கொஞ்ச சமஸ்கிருத ஞானமாவது எனக்கு இல்லாதிருக்குமாயின், நமது சமய நூல்களில் எனக்கு எந்த விதமான சிரத்தையும் இருந்திருப்பதற்கில்லை. அம்மொழியில் இன்னும் அதிக ஞானத்தை நான் அடையாது போனேனே என்பதற்காக இப்பொழுது மிகவும் வருந்துகிறேன். ஏனெனில், ஒவ்வொரு ஹிந்துப் பையனும் பெண்ணும், சமஸ்கிருதத்தை நன்றாகப் படித்திருப்பது அவசியம் என்பதை இப்பொழுது உணருகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 19, சமஸ்கிருத, புத்தகங்கள், நான், பர்ஸிய, பக்கம், சத்ய, சோதனை, வகுப்பிலேயே, என்பதை, ஏனெனில், இப்பொழுது, எனக்கு, ஆசிரியர், என்னால், வந்து, அந்த, மனப்பாடம், க்ஷேத்திர, சிறந்த, செய்ய, வேண்டும், ஆசிரியருக்கும், சொல்லிக், பாஷை