சத்ய சோதனை - பக்கம் 14
காமம் மிகுந்த அன்பினால் ஏற்படும் நாசங்களிலிருந்து என்னை அநேகமாகக் காப்பாற்றிய ஒரு சந்தர்ப்பத்தை மட்டும் இங்கே சொன்னேன். குறிப்பிடத்தக்க மற்றொன்றும் உண்டு. நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருளுவார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன. ஹிந்து சமூகத்தில் குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடும் கொடிய வழக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படக்கூடிய தீமைகளை ஓரளவுக்குக் குறைக்கக் கூடிய மற்றொரு வழக்கமும் அதனிடம் இருந்தது. இளம் தம்பதிகள் நீண்ட காலம் சேர்ந்து இருக்கப் பெற்றோர்கள் விடுவதில்லை. குழந்தைப் பருவ மனைவி பாதிக்காலத்தைத் தன் பெற்றோரின் வீட்டிலேயே கழித்து விடுகிறாள். எங்கள் விஷயத்திலும் இப்படியே ஆயிற்று. அதாவது, எங்கள் மண வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளில் ( அதாவது 13-இலிருந்து 18-ஆம் வயது வரையில்) மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் சேர்ந்திருந்ததில்லை. ஆறு மாத காலத்தை ஒன்றாக இருந்து கழித்திருப்போம். அதற்குள் என் மனைவியை அவளுடைய பெற்றோர்கள் அழைத்துப் போய்விடுவார்கள்.அப்படி அழைத்துக் கொண்டு போய்விடுவது அந்தச் சமயத்தில் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காமல்தான் இருந்தது. ஆனாலும் அவ்விதம் அழைத்துச் சென்றதே எங்கள் இருவரையும் காப்பாற்றியது. பதினெட்டாவது வயதில் நான் இங்கிலாந்துக்குப் போனேன். இதனால் ஏற்பட்ட நீண்ட பிரிவு, எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது. இங்கிலாந்திலிருந்து நான் திரும்பி வந்த பிறகும் கூட ஆறு மாதங்களுக்கு மேல் நாங்கள் சேர்ந்து வாழ்ந்ததில்லை. ஏனெனில், ராஜ் கோட்டுக்கும் பம்பாய்க்கும் நான் ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. பிறகு நான் சிற்றின்ப இச்சையிலிருந்து பெரிதும் விடுபட்ட நிலையில் இருந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 14, நான், புத்தகங்கள், எங்கள், பக்கம், சிறந்த, சத்ய, சோதனை, அதாவது, நாங்கள், பெற்றோர்கள், மேல், அன்பினால், முடியும், என்பதை, நீண்ட, சேர்ந்து