அர்த்தமுள்ள இந்துமதம் - மரணத்தை வெல்லும் யோகம்
அவன் செத்துவிட்டான் என்று சொன்னால், `அவன் உடம்பு தான் செத்துவிட்டது, ஆன்மா சாகவில்லை’ என்பது பொருள்.
`என்னையே எனக்குக் கொடு’ என்னும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.
துயரங்கள் தோன்றாமல் சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது, அவன் உடம்பு அழிந்து விடுகிறது.
இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள்.
இமய மலையில் குடி புகுந்தவன், மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா?
ஆன்மாவை உணர்ந்து கொண்டவன், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?
இப்போது நான் சொல்லப் போவது, மரணத்தை வெல்லும் யோகம் பற்றிய `கடோப நிஷதம்’ ஆகும்.
கவுதமரின் குமாரர் வசிஸ்ரவர்; அவரது குமாரன் நசிகேதன்.
அவர் தன்னிடம் இருந்த எல்லாப் பொருள் களையும் தானம் செய்தார்.
அவரது குமாரன் நசிகேதனுக்கும், `தன்னை, தந்தை யாருக்குத் தானம் செய்வார்?’ என்ற கேள்வி எழுந்தது.
`தனக்கு வயதான பின் தானம் செய்வதில் பொருளிருக்க முடியாது. கடைசி முறையாகத் தண்ணீர் குடித்துப் புல்லைத் தின்று மலடாகி விட்ட கிழட்டுப் பசுக்களைத் தானம் செய்வதில் என்ன யோகம் இருக்க முடியும்? இந்த ஒன்பது வயதிலேயே, தானும் தானம் செய்யப்பட வேண்டும்!’ என்று நசிகேதன் கருதுகிறான்.
`தந்தையே! என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்?’ – தந்தையைக் கேட்கிறான்.
அவர் பேசாமல் இருக்கிறார்.
அவன் மீண்டும், மீண்டும் கேட்கிறான்.
அவர் கோபத்தோடு, `உன்னை யமனுக்குத் தானம் செய்யப் போகிறேன்’ என்கிறார்.
நசிகேதன் யோசிக்கிறான்:
`தன்னைப் பெற்றுக் கொள்வதால் யமனுக்கு என்ன லாபம்? நான் யமனிடம் போவதென்றால், பலருக்கு முன்னால் போகப் போகிறேன். அல்லது சிலருக்கு நடுவில் செல்லப் போகிறேன். என்னை அடைவதன் மூலம் யமன் செய்யப் போவது என்ன இருக்கிறது?’
அவன் ஏதேதோ யோசிக்கிறான்.
`தந்தையே! நம் முன்னோர்கள் நடந்து வந்த விதத்தைக் கவனியுங்கள். தானியங்களைப் போல மனிதன் அழிகிறான்; தானியங்களைப் போலவே மீண்டும் பிறக்கிறான். நானும் போய் வருகிறேன்’ என்று கூறிப் புறப்படுகிறான்.
நசிகேதன் ஸ்தூலத்துடனேயே யம தர்மனைப் பார்க்கப் புறப்படுகிறான்.
தானியங்களை உதாரணம் காட்டியதில், அவன் ஒரு அர்த்தத்தைக் குறிப்பிடுகிறான்.
`ஒரு தானியத்தின் ஆயுள் காலம் எவ்வளவோ, அவ்வளவுதான் மனிதனின் ஆயுட்காலம்’ என்பது அவனது நம்பிக்கை.
வாழ்வு இவ்வளவு சிறியதாக இருக்கும் போது, அதில் ஆசை வைப்பானேன்?
காம, குரோத, லோபங்களில் சிக்குவானேன்?
தந்தையிடம் சொல்லுகிறான், தன் புறப்பாட்டை.
தந்தையும், அவன் யமனைப் பார்க்கப் போவதை அனுமதிக்கிறார்.
யமனைத் தேடி நசிகேதன் சென்ற போது, யம தர்மன் வீட்டில் இல்லை. அதனால் மூன்று நாட்கள் அவன் அங்கே தங்க நேரிடுகிறது.
மூன்று நாளும் நசிகேதன் உண்ணாவிரதம் இருக்கிறான்.
மூன்றாவது நாள், யம தர்மன் வருகிறான்.
ஒரு பிராமணச் சீடன் தனக்காக மூன்று நாட்கள் விரதம் இருப்பதைப் பார்த்து, யமன் சொன்னான்:
`ஏ அதிதியே! பிராமணா! என் வீட்டில் நீர் மூன்று இரவுகள் உணவருந்தாமல் கழித்து விட்டீர். அதற்குப் பதிலாக மூன்று வரங்களை உங்களுக்குத் தருகிறேன். என்னென்ன தேவை என்று நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு என் வணக்கம். உமக்கு நன்மை உண்டாகட்டும்.’
உடனே நசிகேதன் மூன்று வரங்களைக் கேட்கிறான்.
முதல் இரண்டு வரங்களும், நசிகேதனின் தந்தையைப் பற்றியதும், சொர்க்கத்தைப் பற்றியதுமாகும். அதில் ஒன்று, அக்னி யாகம். அதற்காகக் கற்கள் பதித்த ஒரு தங்கச் சங்கிலியை யமன் தருகிறான்.
அது யம தர்மனின் முத்திரை.
மூன்றாவது கேள்வி தான் சிக்கலானது.
`யமதர்ம ராஜரே! ஒரு மனிதன் இறந்த பிறகு, `அவன் இருக்கிறான்’ என்று சிலர் சொல்லுகிறார்கள்; `இல்லை’ என்று சிலர் கூறுகிறார்கள். `உண்மை எது?’. அவன் இருக்கிறானா இல்லையா? இந்தச் சந்தேகம் வெகு நாட்களாக இருக்கிறது. இதை எனக்கு நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.’
இந்த இருபதாவது ஸ்லோகத்துக்கு விளக்கம் சொல்லும்போது, சுவாமி சின்மயானந்தா அவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்கள்:
`உபநிஷத ரிஷிகள் பெருமையே பெருமை! கதாநாயகனுடைய சித்திரத்தைச் சொல்லாத வார்த்தைகளிலேயே எவ்வளவு திறமையாக அமைக்கிறார்கள்! இது ஷேக்ஸ்பியரின் கற்பனைகூடச் செய்ய முடியாத ஒன்றாகும்! அந்த அமர ரிஷிகளுக்கு நம் வணக்கம் நிறைந்த வாழ்த்துக்கள் உரியனவாகுக.’
`நாம் முன்னால் பார்த்தோம்; இலட்சிய (ஆன்ம வித்தை) மாணவனாக நசிகேதன் மனவமைதியையும் இன்பத்தையும் வேண்டி, முதல் வரத்தைத் தீர்த்தான். இரண்டாவது வரத்தை மனித சமுதாயம் ஆசி பெற அர்ப்பணித்தான்; இப்பொழுது கடைசி வரம் என்ற பொழுது தான் தன் நலத்தைப் பற்றி நினைக்கிறான். தன் பெரிய சந்தேகங்கள் ஒன்றைத் தீர்த்து வைக்குமாறு கேட்கிறான்.
தியாகம் வேண்டும். தனக்குரியவர் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவருக்கு நன்மை புரிந்து, அவர்கள் நன்மையைத் தன் ஆன்ம விடுதலையை விட முதலில் எண்ணுமளவுக்குத் தன்னுள்ளே, `தயை’ வேண்டும். உண்மையான ஆன்ம முன்னேற்றம் தேடுபவன், உண்மையைத் தேடிச் செல்லும் யாத்திரையில் முழு வெற்றியையும் பெற வேண்டும் என்றால், அவனுக்கு இன்றியமையாத முக்கிய குணம் வேண்டும். இது, இன்று பக்தர்கள் வர்க்கத்தில் மெதுவாக வந்து செறிந்து நிற்கின்ற நம்பிக்கைக்கு நேர்மாறானது தான். தப்பிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அந்தத் தப்பான அர்த்தத்தில் தான் அவர்கள் சங்கடங்கள் தங்கும் குளவிக் கூடும் அமைகிறது.’
`மதத்தைப் பின்பற்றுவது நன்மைக்கமைந்த, சமுதாய அல்லது சமூக வாழ்க்கைக்கு இடையூறு அல்ல; இடையூறாக இருக்கவும் முடியாது. ஆன்மீக வாழ்வு விழைபவன் ஊமையாகவும், செவிடாகவும் இருத்தல் வேண்டும் என்பதில்லை.
அவனுக்குத் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் உலகின் தேவைகளும், துயர்களும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் தேடித் தன்னுள்ளே ஓர் அன்பையும், பிறர் துயருக்கு அழுது கரைகின்ற உள்ளப் பொறையையும் பெற வேண்டும். தன் உறவினர், தன் தலைமுறை மக்கள் இவர்களுடைய உள்ளங்களுடன் தன் உள்ளத்தைப் பொருத்தி அறியும் ஆற்றல் இல்லாத ஒருவனுக்கு உண்மையின் கோயிலுக்குள் தூய்மையுள் தூய்மையான அந்த நிலையை அடையத் தகுதி கிடையாது.’
`இந்தச் சுலோகத்திலிருந்து உபநிஷதம் என்பது ஆரம்பிக்கிறது. இதுவரை செய்ததெல்லாம், ஒரு பக்குவமடைந்த ஜீவனைப் பூரண தகுதி வாய்ந்த ஆசாரியரின் எதிரே கொண்டு வருவதற்கான நாடக இயல் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தைக் காட்டி அமைப்பதற்கான முயற்சிதான்.’
`அந்த பிராமணச் சிறுவன் எழுப்பிய சந்தேகம், அவன் `சாஸ்திரப் பண்பாட்டை’யும் அவனது `தன் வளர்ச்சி’யையும் காட்டித் தருகிறது. எப்பொழுதும் இந்திரியங்கங்களையே தேடித் திரியும் மிருக மனிதன், வாழ்க்கையைப் பற்றி முழுதாக எண்ணி, ஆழ்ந்த ஒரு முனைப்பட்ட இவ்விதமான சந்தேகத்தைக் கொள்ள முடியாது. அவன் அதற்காகவும் சமநிலையும், புத்தித் திறனும் கொண்டிருப்பது மிகவும் அபூர்வமே!’
`ஆகா! வாழ்க்கையில் கண்ணீர் வரவழைக்கும் இச்சம்பவம் இருக்கிறதே, சாவு என்ற ஒன்று, அதனுடைய பயங்கர அழகின் சுழலில் விழுந்து தத்தளிக்கிற சிந்தனையாளர்கள் எவ்வளவோ; இன்றும் கூடச் சாவு எல்லா நிலைகளிலும், எல்லாப் பகுதிகளிலும் உள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆசிரியர்கள், தத்துவவாதிகள் எல்லோரையுமே தன்பால் ஈர்க்கும் ஓர் அழகிய கருத்துத்தான். ஆனால் இந்தக் கம்பீரமான பிரச்னையைத் தீர்க்கும் அளவுக்கு அறிவாற்றல் உள்ளவர்கள் வருவது மிகவும் குறைவே என்றும் நாம் பார்க்கிறோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - மரணத்தை வெல்லும் யோகம், அவன், வேண்டும், நசிகேதன், தானம், மூன்று, யோகம், என்ன, தான், புத்தகங்கள், மனிதன், மரணத்தை, இருக்கிறது, கேட்கிறான், ஆன்ம, முடியாது, யமன், மீண்டும், அவர், செய்யப், வெல்லும் , இந்துமதம், அர்த்தமுள்ள, என்பது, வணக்கம், நாட்கள், மூன்றாவது, பிராமணச், நீங்கள், தர்மன், வாழ்வு, அவனது, போது, அதில், நன்மை, வீட்டில், சிலர், தேடித், மக்கள், தகுதி, மிகவும், சிந்தனையாளர்கள், சாவு, தன்னுள்ளே, புரிந்து, சொல்லுகிறார்கள், எவ்வளவோ, சந்தேகம், அந்த, பற்றி, நிறைந்த, ஒன்று, தானியங்களைப், `அவன், உடம்பு, எல்லாப், விடுகிறான், கேள்வி, யாருக்குத், குமாரன், அவரது, கொள்ள, பிறரிடம், பொருள், நான், போவது, செய்வதில், விட்ட, முன்னால், பெற்றுக், போகிறேன், அல்லது, புறப்படுகிறான், இருக்கும், யோசிக்கிறான், சிறந்த, கொண்டு, கடைசி, `தந்தையே, என்னை, உணர்ந்து, பார்க்கப்