அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தாரின் இளமைக்காலம்
ஆறாவது மாதம், தன் நாயகனோடு இல்லறம் காண அவனது இல்லத்திலேயே குடிபுகுந்து விட்டாள்.
பெண்ணைப் பெற்றவர்களுக்கெல்லாம் நான்தான் தனி மரமாகக் காட்சி தந்து கொண்டிருந்தேன்.
மற்றவர்களைப் போலவே என் அம்மானும் தன் மகளை எனக்காக வளர்த்துக் கொண்டு வந்தார்.
ஏராளமான பெண்கள் தேடி வருகின்றனர் என்றாலே நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கக் கூடிய அறிவை இளமை இழந்து விடுகிறது. `எதுவும் கிடைக்கும்’ என்ற ஆணவம் வந்து விடுகிறது. அந்த ஆணவத்தினிடையிலேயும் எனக்குப் பேரொளியாகத் திகழ்ந்தவள், நவமாணிக்கம் செட்டியாரின் மகள் மரகதம்.
பலர் என்னைக் கவனித்தாலும் நான் கவனித்தது அவளைத் தான்; அவளை நான் கவனிக்கிறேன் என்பதிலே பிறருக்குப் பொறாமை.
மற்றவர்களுக்கு என்ன? என் மாமன் மகள் சிவகலைக்கே அதிகம் பொறாமை. யாரிடம் சொல்வாள் இதை? என் தாயிடம் சொன்னாள்.
என் தாய் ஒருநாள் என்னை அருகே அழைத்து, “என் மகனே, வயது வந்ததும் மணம் முடிக்காமல் இருப்பது, எதிர்காலத்தில் சிதறிய எண்ணங்களுக்கு வித்திட்டு விடும். ஆகவே, என் தம்பி மகளுக்கும் உனக்கும் திருமணம் முடிக்க முடிவு செய்துவிட்டேன்” என்றார்கள்.
`நான் ஒருத்தியை விரும்புகிறேன்’ என்று தாயிடம் சொல்லும் பழக்கம் இல்லையே நமக்கெல்லாம்!
நான் மவுனத்தில் ஆழ்ந்தேன்! என் மயக்கம் அன்னைக்குப் புரிந்தது.
“அதனால்தான் இந்த அவசரம்” என்றார்கள். “தம்பி மகளிருக்க அந்நியத்தில் பெண்ணெடுத்தால், அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகுமா? காரணம் கூறிக் கதை கட்டமாட்டார்களா? ஒரு பெண்ணை நீ அடைய, உறவுப் பெண் வாழ்விழப்பதா?” என்றார்கள்.
இறைவனிடம் கூட நான் எதையும் மறுத்துப் பேசுவேன்; என் தாயிடம் பேசுவதில்லை.
அன்னையின் விருப்பத்திற்குப் பணிந்தேன்; மணத்திற்குத் துணிந்தேன்.
ஆம், `துணிந்தேன்’ என்று சொல்வதே பொருந்தும். ஒருவன் திருமணம் செய்து கொள்வதென்பது எவ்வளவு துணிவான செயல்? அதிலேயும் வாய்த்துடுக்கு நிறைந்த பெண்ணல்லவா எனக்கு வாழ்க்கைப்படப் போகிறாள்!
எதிர்ப்பேச்சு, ஏடாகூடம், எகத்தாளம் எவ்வளவுக் கண்டிருக்கிறேன் அவளிடம்!
`மனைவி என்பவள் தாயின் துணைக்கு வருகிறவளே’ என்று முடிவு கட்டி, தாயின் விருப்பத்தை நிறைவேற்றினேன்.
திருமணம் நடந்தது. காவிரி நகரமே அதிர்ந்தது; விருந்தினர், உணவை உறிஞ்சி உண்ட ஓசை, கடல் ஒலியையும் மிஞ்சியது.
எங்கள் குலத்துச் சம்பிரதாயங்களில் ஒன்று விருந்தில் முக்கனி போடக் கூடாதென்பது. அது மன்னவர்கள் தரும் விருந்தில் மட்டுமே நடக்கலாம். மற்றையோர் ஏதேனும் ஒரு கனி குறைவாகவே போடவேண்டும். ஆனால் அந்தச் சம்பிரதாயத்தை மீறி மன்னர் குல விருந்து போலவே விருந்து நடத்தினேன் நான்.
எங்கள் குலத்தில் `இசை குடிமானம்’ என்று ஒன்று எழுதுவார்கள். குடும்பத்தில் பாரம்பரியமான புகழ், மானம், மரியாதை, இவற்றைக் காப்பாற்றுவதற்கான துணை அது.
எங்கள் சம்பிரதாயங்கள் முற்றும் சைவ நெறிகளுக்குக் கட்டுப்பட்டவை.
திருமணத்தின்போது ஆசை உணர்வுகள் மீறிய நிலையில் தான் இருந்தேன் என்றாலும், நமது வைதிக நெறிகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது.
எங்கள் குலத்தில் தாலி கட்டுவதை `திருப்பூட்டுவது’ என்பார்கள். மாங்கல்யம் பெண்ணுக்கு நீங்காத செல்வமாகப் பூட்டப்படுகிறது.
முன்பின் அறிமுகமில்லாத ஒருத்தி அந்தத் `திருப்பூட்டப் பட்டதும்’ கணவனது பாதக் கமலங்களில் சரணடைந்து விடுவாள்.
அவன் கூன், குருடு, நொண்டியாக இருந்தால் கூட அவள் கவனம் வேறுபக்கம் திரும்புவதில்லை.
நான் அங்கம் குறைந்தவனல்ல. “தங்கமே என்று தாய் என்னைத் தாலாட்டியது முற்றும் பொருந்தும்’ என்று வேண்டாதவர்கள் கூடச் சொல்வார்கள்.
கேளுங்கள்.
இசை, குடி, மானத்தைக் காப்பாற்ற நான் சிவகலையின் கரம் பற்றி இல்லறத்தில் புகுந்தேன்.
உடல் உறவில் சற்று அதிகமாகவே ஈடுபட்டேன்.
என்ன ஆச்சரியமோ, மங்கலம் கழுத்தில் விழும் வரை வாய்த்துடுக்காக இருந்த சிவகலை, மங்கலம் விழுந்ததும் மந்திரத்தில் கட்டுண்டவள் போலானாள்.
உடம்பு திருப்தியடைந்து விட்டால், உடும்பு கூடப் பிடியை விட்டு விடுகிறது.
மஞ்சள் பூசி, திலகம் அணிந்து, கழுத்தைக் கவ்விக் கொண்டிருக்கும் அட்டிகையோடு பட்டுப்புடவை கட்டி அவள் என் எதிரில் வரும்போதெல்லாம், உடல் வெறியால் துள்ளிக் குதித்து கட்டிப்பிடிக்கின்ற நான், காலங்கள் செல்லச் செல்ல ஒரு தெய்விக உணர்ச்சியால் கட்டுண்டேன்.
உடலிலுள்ள ஜீவ அணுக்கள் சமாதானம் பெறத் தொடங்கின. அவளைப் பார்க்கும் போதெல்லாம் உயர்ந்த எண்ணங்களே உருவாயின.
ஆனால், ஆண்டுகள் ஐந்து ஆகியும் மகனுக்குப் பிள்ளைப் பேறு இல்லையே என்ற கவலை என்னைப் பெற்றவளை வாட்டி எடுத்தது.
`மூன்று தலைமுறைகளுக்கு மேல் தாழ்ந்தவர்களும் இல்லை; மூன்று தலைமுறைக்கு மேல் வாழ்ந்தவர்களும் இல்லை’ என்பார்கள்.
எங்கள் வம்சத்தின் செல்வப் பெருமைக்கு நான் மூன்றாவது தலைமுறை. என்னோடு கதை முடிய வேண்டியது தானா? அடுத்த ஒரு வாரிசு பிறப்பதற்கில்லையா?
நான் அதைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஆனால், என் தாய் எதற்காக உயிர் வாழ்ந்தார்களோ, அது நிறைவேறவில்லையே என்பது அவர்கள் கவலை.
ஒருநாள் மெதுவாக என்னைப் பார்த்து, “ஐயா! நான் சொன்னால் வருந்தாதே! ஒன்றிருக்க ஒன்று கொள்வது நம் இனத்தில் இயற்கைதான். என் தம்பி மகளை வைத்து விட்டே இன்னொரு பெண்ணை உனக்குத் திருமணம் செய்ய முடிவு கட்டி இருக்கிறேன்” என்றார்கள்.
நான் துடித்துப் போனேன்.
“ஆத்தா, பழக்க வழக்கங்கள் வேறு; மனிதனின் விருப்பங்கள் வேறு; குலப் பழக்கம் என்பதற்காக ஒரு தாசியின் உறவைக் கொள்ளவும் மாட்டேன்; இன்னொரு பெண்ணை மணக்கவும் மாட்டேன். சிவகலையிடம் அந்த சிவநாதனின் கலையை நான் கண்டு கொண்டிருக்கிறேன். சைவர்களுக்கு எப்படி சிவபெருமான் ஆதிமூலமோ அப்படியே எனக்குச் சிவகலைதான் எல்லாமும். அவளைத் தொட்ட கையால் ரம்பையர் கிடைத்தாலும் தொடமாட்டேன். ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது எப்படி நம் குலப்பழக்கமோ, அப்படியே பிள்ளை இல்லாதவர்கள் சுவிகாரம் என்று பிள்ளை கூட்டிக் கொள்வதும் வழக்கம்தான். வருகின்ற பிள்ளைக்கு தாய் தந்தையரிடம் பாசம் இல்லாமல் போனாலும், தாய் தகப்பன் தங்களுக்குள் உள்ள பாசத்தைத் தளராமல் வைத்துக் கொள்ள முடியுமல்லவா?” என்றேன் நான்.
அன்னை ஆறுதல் பெறவுமில்லை; என்னைக் கட்டாயப் படுத்தவும் இல்லை.
மாடத்துச் சாளரத்தில் நின்று எங்கள் பேச்சைக் கவனித்த சிவகலையின் கண்கள் நீரூற்றுப் போல் பொங்கி நின்றதையும் நான் கண்டேன்.
அன்று அவள் என்னிடம் நடந்து கொண்ட முறை, தெய்வத்தை நெருங்கிவிட்ட பக்தையின் பிரீதியைப் போல் காட்சி தந்தது.
கணவன், மனைவியின் நலனில் அக்கறை செலுத்தினால் மனைவி, கணவன் கால்களுக்கே அணியாகி விடுகிறாள்.
அன்பு, அரக்கைக் கூடத் தண்ணீரிலே கரைத்து விடுகிறது. பாசம், கல்லைக் கூட எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது. வெறுப்பு தெய்வத்தைக்கூட வெகு தூரம் விரட்டி விடுகிறது.
சிவகலையும் நானும் சிவஸ்தலங்களுக்கு யாத்திரை போனோம்.
பிள்ளை இல்லாதவர்கள் கடைப்பிடிக்கும் இரண்டாவது வழி அதுதானே?
அதிலும் பயனில்லை.
சொத்துக்கு நான் வாரிசு தேடவில்லை. இல்லாதது கூட நல்லது என்று நினைத்தவன். ஆயினும் தாய், என்னைப் பெற்றவள்; இறந்து விட்டால் என்னால் பெற முடியாதவள். அவளது ஆன்மத் துடிப்புக்காக இறைவனை இறைஞ்சினேன். பலன் இல்லை.
`எங்கே மீண்டும் ஒரு சபலம் என் தாய்க்குத் தோன்றி விடுமோ’ என்று சிவகலை அழுதாள்.
பனித்திருந்த அவளது கண்களை நான் துடைத்தேன். சரியாக அதைத் துடைக்கும் போது ஒரு குழந்தை அழும் சத்தம் என் காதுக்குக் கேட்டது.
நான் திகைத்தேன். “ஒரு குழந்தை அழுகிறதே. உனக்குக் கேட்கிறதா?” என்றேன்.
“இல்லையே” என்றாள்.
“எங்கே மீண்டும் அழு” என்றேன்.
அவள் அழுதாள்.
நான் கண்ணீரைத் துடைத்தேன்.
கண்ணீரைத் துடைக்கும் போதெல்லாம் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
“இறைவா, என்ன இது அதிசயம்!”
இது ஏதோ ஒரு சோதனை என்று கருதி, அன்று இரவு அவளை விட்டுப் பிரியாமல் அவள் அருகிலேயே படுத்திருந்தேன்.
திடீரென்று அவள், “எனக்கு பிள்ளை பேறு உண்டா?” என்று கேட்டாள்.
அப்படிக் கேட்ட உடனேயே மீண்டும் பிள்ளை அழும் சத்தம் கேட்டது.
பிறகு நான் அவளைப் பேசவும் விடவில்லை. அழவும் விடவில்லை. ஆலிங்கனத்திலேயே தூங்கினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தாரின் இளமைக்காலம், நான், தாய், அவள், திருமணம், எங்கள், விடுகிறது, பிள்ளை, புத்தகங்கள், என்றார்கள், மேல், முடிவு, என்ன, என்னைப், தம்பி, பெண்ணை, மீண்டும், கட்டி, பட்டினத்தாரின் , இல்லை, ஒன்று, என்றேன், தாயிடம், கேட்டது, சத்தம், அவளை, இந்துமதம், இளமைக்காலம், அர்த்தமுள்ள, அழும், தான், குழந்தை, கொள்வது, இன்னொரு, மாட்டேன், வாரிசு, வேறு, பேறு, கவலை, அழுதாள், கணவன், எப்படி, விடவில்லை, இல்லாதவர்கள், பாசம், துடைக்கும், துடைத்தேன், அவளது, அப்படியே, அன்று, கண்ணீரைத், போல், விருந்து, என்னைக், மகள், அவளைத், பொறாமை, ஒருநாள், அதிகம், அந்த, மகளை, கொண்ட, சிறந்த, ஆயினும், காட்சி, போலவே, பழக்கம், இல்லையே, உடல், சிவகலையின், மங்கலம், சிவகலை, அவளைப், விட்டால், என்பார்கள், முற்றும், எனக்கு, செய்து, தாயின், விருந்தில், குலத்தில், போதெல்லாம்