அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தார் வரலாறு
அரைக்கே அவலக் குழியருகே அசும்பு ஆர்த்தொழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள் பொன்முகலிக்
கரைக்கே கல்லால் நிழற்கீழ் அமர்ந்தருள் காளத்தியே!
நாறும் குருதிச் சலதாரை நாள்தொறும் சீழ்வடிந்தே
ஊறும் மலக்குழி காமத் துவாரம் ஒளிந்திடும்புண்
தேறுந் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம் விட்டு
ஏறும் பதந்தரு வாய் திருக் காளத்தி ஈச்சுரனே!’
`ஓம் நமசிவாய’ என்று ஓங்கி ஒலித்தது.
`அர ஹர மகாதேவ்’ என்று கூட்டம் எதிரொலித்தது.
அந்தக் கம்பீரமான உருவம் மானங்காக்க ஒரு கோவணத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, கையிலே ஒரு கரும்பைச் சுமந்தபடி எழுந்து நின்றது. வந்திருந்த கூட்டமெல்லாம் அதன் காலடியில் விழுந்து வணங்கிற்று.
ஆலயத்தை விட்டு அது வெளியேறிப் பிரசன்னப் பந்தலுக்கு வந்தபோது, அங்கே பெருங்கூட்டம் ஒன்று காத்துக் கொண்டிருந்தது.
`திருவெண்காடர் வாழ்க’ என்று கூட்டமெல்லாம் கோஷமிட்டது.
அந்த ஞானப் பிழம்பு அரங்கிலேறி அமர்ந்தது.
அப்போது தான் கூட்டம் அவர் அருகிலே, ஞானப் பிழம்பாகவும், அழகுப் பிழம்பாகவும் நின்ற ஒருவரைக் கவனித்தது.
`பத்திரகிரியார்! பத்திரகிரியார்!’ என்று பேச்சு எழுந்தது.
`கரும்போடு நிற்கும் பெரியவர்தான் திருவெண்காடர் என்ற பட்டினத்தார்; பக்கத்தில் நிற்பவர்தான், அவரது பிரதம சீடர் பத்திரகிரி மகாராஜா!’ என்று ஒரு தந்தை மகனுக்கு விளக்கம் சொன்னார்.
பட்டினத்தார் சொல்கிறார்:
`பக்த கோடிகளே!’ என்று ஆரம்பித்தார் பட்டினத்தார்.
`என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உங்களுக்கு விவரிப்பது, என் கடமை என்று கருதுகிறேன்.
என்னைப் பார்க்கின்ற உங்களில் பலருக்கு, துறவறம் பெருமைக்குரியது என்று தோன்றும். இளமையிலே துறவு பூணலாமா என்ற எண்ணமும் சிலருக்கு எழலாம்.
இல்லறம், துறவறம் இரண்டையும் தெளிவாக விவரிப்பது, என் முதல் கடமை.
வாழ்க்கையின் சகல அனுபவங்களையும் பெற்ற பிற்பாடு துறவியாகும் ஒருவன், இல்லறத்தின் கஷ்ட நஷ்டங்களைத் தெளிவாகப் பிறருக்கு எடுத்துணர்த்த முடியும்.
புது வாழ்வில் புகுகின்ற மனிதனுக்கு அது பெரும் உதவி புரியும்.
இயலாமை மட்டுமே இளமைத் துறவை மேற்கொள்ளலாம். அல்லது இறை அருளால் ஞானம் பெற்ற இளம் பருவம், அந்தத் துறையில் அடி எடுத்து வைக்கலாம்.
ஆனால், வெயிலில் நின்றவனுக்கு நிழல் தரும் சுகத்தைப் போல, லெளகீகத்தில் இருந்து துறவறத்துக்கு வரும் ஒருவனுக்கு துறவு தரும் இன்பம், இளமைத் துறவுக்குக் கிடையாது.
எல்லோரும் லெளகீகத்தில் ஈடுபடுங்கள். அதுவே உங்களுக்குச் சுகமாக அமைந்து விட்டால், உலக இயக்கத்தை உங்கள் இல்லறத்தின் மூலம் நடத்துங்கள். அதைத் தாங்க முடியாதவர்கள் மட்டும் வெளியே வாருங்கள். அதிகம் போனால் நூற்றுக்கு ஒருவர் மட்டும் தான் அப்படி வருவீர்கள்.
அப்போது போதிப்பவர்கள் குறைவாகவும், கேட்பவர்கள் அதிகமாகவும் இருப்பீர்கள்.
எல்லோரும் பல்லக்கில் அமர்ந்தால் தூக்குவது யார்?
எல்லோரும் ஞானிகளாகி விட்டால் போதனைக்கென்ன அவசியம்?
உலக வாழ்க்கையில் நான் செல்வத்தை மட்டுமல்ல, அனுபவங்களையும் திரட்டியவன்.
காவிரிப் பட்டினக் கடற்கரையில் இருந்து புறப்பட்ட என் கப்பல்கள், கடல் கடந்த நாடுகளில் இருந்து கட்டி கட்டியாகத் தங்கத்தை ஏற்றி வந்தன.
ஆனால், கரையிலேயே நின்று கொண்டிருந்த நான் கப்பல் கப்பலாக அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தேன்.
வரவு-செலவுக் கணக்கெழுதும் வணிக மகன், தனது குறிப்பேட்டில் இன்பங்களைச் செலவு செய்து, துன்பங்களை வரவு வைத்தான்.
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும்.
சிரிப்புக்குக் காரணமும், அழுகைக்கு அர்த்தமும் எனக்குப் புரியும்.
ஏராளமான அனுபவங்களைச் சேகரித்த பிற்பாடும் ஆனந்தமான வாழ்க்கையிலே நான் தொடர்ந்து போயிருக்க முடியும். ஆனால், வேதம் அறிந்த பிராமணன் அதை நாலு பேருக்காவது சொல்லாமற் போவது எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவம் பிறர்க்குத் தனது அனுபவங்களைச் சொல்லாமல் இருப்பது.
அதனால்தான் நான் இந்தக் கோலம் கொண்டு திருக்கோயில்களுக்குச் சென்று மீளுகிறேன்.
எந்தத் திருத்தலத்தில் என்னுடைய சமாதி காத்திருக்கிறதோ எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது நான் மேற்கொண்டிருப்பது நிர்விகல்ப சமாதி.
கேளுங்கள், எனக்கு ஞானம் பிறந்த கதையைக் கேளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தார் வரலாறு, நான், புத்தகங்கள், மட்டும், கொண்டு, பட்டினத்தார் , அனுபவங்களைச், எல்லோரும், வரலாறு, இந்துமதம், பட்டினத்தார், இருந்து, அர்த்தமுள்ள, தரும், இளமைத், ஞானம், லெளகீகத்தில், தனது, சமாதி, கேளுங்கள், எனக்குத், ஆனது, வரவு, புரியும், விட்டால், துறவு, ஞானப், அப்போது, தான், கூட்டமெல்லாம், கூட்டம், சிறந்த, விட்டு, பிழம்பாகவும், வாழ்க்கையில், பெற்ற, இல்லறத்தின், அனுபவங்களையும், துறவறம், விவரிப்பது, கடமை, முடியும்