அர்த்தமுள்ள இந்துமதம் - மதுவும் மதமும்
`எனக்கு இருபதாண்டுகளாக அந்தப் பழக்கம் உண்டு’ என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.
அந்தத் தார்மீக ஒழுக்கக் கேட்டிற்கு நான் வக்காலத்து வாங்க வரவில்லை.
ஆனால், `சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது’ என்று நான் வாதிட்டிருக்கிறேன்.
சட்டம் போட்டு ஒன்றை மறைக்க, மறைக்க அது பற்றிய ஆசைகளே கிளர்ந்து எழும்.
முழுக்க மூடிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்க்க விரும்பும் கண்ணைப்போல், முழுக்க மறைக்கப்பட்ட ஒன்றைச் சுவைக்க விரும்புவது மனித இயல்பு.
ஆகவேதான், `மதுப்பழக்கம், விலைமாதர் உறவு இரண்டையும் சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியாது’ என்று நான் வாதிடுகிறேன்.
அடுத்தவனுக்குத் தீமை பயக்கக்கூடிய சமுதாய ஒழுக்கக்கேட்டை மட்டுமே சட்டம் தடுக்க முடியும்.
தனிமனிதனின் ஒழுக்கத்திற்கு அது உத்தரவாதம் தேடமுடியாது.
காரணம் அவன் எங்கேயாவது மறைந்து நின்று கொண்டு, அந்த ஒழுக்கக் கேட்டிற்குப் பலியாவான்.
ஆகவே, மது, விலைமாதர் என்ற இரு விஷயங்களில் அழுத்தமான `நீதி’ போதனையே மனிதனின் மனத்தை மாற்ற முடியும்.
“குடித்தால் உன் உடம்பு கெடும்.
மலத்துக்கும், சோற்றுக்கும் வித்தியாசம் தெரியாது.
காரணம் இல்லாமல் வீண் பகைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.
நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது.
நீ நிதானமாகப் பேசினாலும் கூட, `இது குடிகாரன் பேச்சு’ என்று தள்ளிவிடும்.
நீ குடிக்கும் மது, உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து
விடும்.
உன் வருமானம் பாழாகும்.
செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்ய முடியாது.
மதுவினால் நீ நோயுற்றால், உனக்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.
குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்ட புல்லாக, பூச்சியாக நீ மாறிவிடுவாய்.
நற்குலப் பெண்கள் உன் அருகில் வரவே பயப்படுவார்கள்.
மொத்தத்தில் நீ மனிதனாகவே வாழ முடியாது”
இப்படி அவனுக்கு இடித்துக் காட்டினால், ஒரு கட்டத்தில் இந்த அனுபவம் அவனுக்கு வந்து, மதுவைக் கைவிட்டு விடுவான்.
ஆகவே தான், இந்தியா தோன்றிய காலத்தில் இருந்து, பின் இந்து மதம் பிறந்த காலத்தில் இருந்து, மதுவுக்கு எதிராக மதம் வாதாடிப் போதித்திருக்கிறதே தவிர, அரசர்களிடம் தன் சக்தியைப் பயன்படுத்தி, அதைத் தடைசெய்யச் சொன்னதில்லை.
“மது உள்ளே போனால், மதி வெளியே போகும்.”
“சாராயத்தை உள்ளே போட்டால், பூராயம் எல்லாம் வெளியே வந்துவிடும்”
“குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாக்கப் போச்சு”
“கள்ளுக் குடிச்சவனுக்குச் சொல்லுப் புத்தி ஏறாது.”
இவையெல்லாம் கிராமத்துப் பழமொழிகள்.
மதுவிலக்குப் பிரச்சாரம் இந்தியாவில் பல கோணங்களில், பல விதங்களில், பல கட்டங்களில் நடைபெற்று வந்திருக்கிறது.
அப்பொழுதெல்லாம், நாட்டிலே குடிகாரர்கள் குறைவாகவே இருந்தார்கள்.
என்று மதுவிலக்குச் சட்டம் வந்ததோ, அன்றிலிருந்துதான் குடிப்பவர்கள் அதிகமானார்கள்.
ஆகவே, இந்த வகையிலும் மதம் போதித்து எழுப்பும் தார்மீகச் சக்தியை சட்டம் உருவாக்க முடியாது.
இந்து மதம், மது உண்பவர்களையே `அரக்கர்கள்’ என்று அழைத்தது.
மதுவினால் மதியிழந்தோர் கதைகள் இந்துமத ஏடுகளில் ஏராளம், ஏராளம்.
எங்கள் குடும்பத்தில் நான்தான் குடிக்கப் பழகிய முதல் மனிதன்.
எனக்கு முந்திய தலைமுறையில் ஒவ்வொருவரும் குடித்து விட்டு வருவோனைக் கண்டால், காலால் உதைப்பார்கள்.
என் தந்தை ஒரு கிராம முன்சீப்பையே அப்படி உதைத்திருக்கிறார்.
அந்நாளில், அரசாங்கம் லைசென்ஸ் கொடுத்தாலும் ஊருக்குள்ளே கள்ளுக்கடையோ சாராயக் கடையோ வைக்க எந்தக் கிராமத்திலும் யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.
குடித்துவிட்டுச் சபைக்கு வரும் ஒருவனை அந்நாளில் காணவே முடியாது.
குடிப்பவனுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள்.
காரணம், இந்து மதத்தின் உணர்ச்சிகரமான போதனை அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தது.
தாங்கள் குடிப்பதற்குப் பெரும்பாலோர் சொல்லும் காரணம் `கவலைகளை மறப்பதற்கே’ என்பதாகும்.
ஒரு இடத்தில் கம்பன், இதனை சுக்ரீவன் வாய்மொழியாக மிக அழகாகச் சொல்லுகிறான்.
“நெருப்பை நெய்யால் அணைத்தேன்” என்கிறான்.
கவலைக்காகக் குடிக்க ஆரம்பித்தால், உள்ளே போய் விழுந்த மது, அந்தக் கவலையை அதிகப்படுத்துமே தவிரக் குறைக்காது.
ஒரு குடிகாரன், குடிக்க ஆரம்பிக்கும்போது எதை நினைத்துக் கொண்டு குடிக்கத் துவங்குகிறானோ, அதுதான் அவன் குடித்து முடித்துத் தூங்கும்வரை விசுவரூபம் எடுத்து நிற்கும்.
முதல் ரவுண்டு குடிக்கும் போது, `ஒருவனை உதைக்க வேண்டும்’ என்று நீ நினைத்தால் மூன்றாவது ரவுண்டு முடிந்ததும், அவனைத் தேடி உன்னைப் போகச் சொல்லுமே தவிர, அந்தக் கோபத்தை அது குறைக்காது.
அதனால்தான், மேலை நாட்டார் தனியாகக் குடிப்பது இல்லை.
`சொசைட்டி டிரிங்கிங்’ என்று கூட்டம் கூட்டமாகக் குடிக்கத் தொடங்கினார்கள்.
குடித்துவிட்டு நாட்டியமாடத் தொடங்கினார்கள்.
விளைவு
`எவ்வளவு குடிக்கிறோம்’ என்ற அளவு தெரியாமல் அற்ப ஆயுளிலேயே மாண்டு போனார்கள்.
தனியாகக் குடித்தால், கவலையின் அளவு அதிகமாகிறது. கூட்டமாகக் குடித்தால், குடிக்கும் அளவு அதிகமாகிறது.
நமது புராணங்களில், `குடிப்பவனது வயிறு பெரிதாக இருக்கும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
அரக்கர்களின் வயிற்றை அப்படியே வர்ணிக்கிறார்கள்.
இது ஒரு மருத்துவ உண்மை.
குடிக்க குடிக்க, வயிற்றுக்குள்ளே Fluid உற்பத்தியாகிறது.
`வயிறு மகோதரம்’ போல் ஆகிவிடுகிறது.
ஈரலில் Liver Sirosis என்ற நோய் உற்பத்தியாகிறது.
ஆரம்ப காலத்தில், குடிகாரர்கள் நிறையச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.
நாள் ஆகஆக, குடி அதிகமாகி சாப்பாடு குறைந்துவிடும்.
`மரணம் வாசல் வரைக்கும் வந்துவிட்டது’ என்பது இதன் பொருள்.
தண்ணீரையும் நாம் குடிக்கிறோம்; பாலையும் குடிக்கிறோம்.
ஆனால், எதையும் `குடி’ என்று அழைப்பதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - மதுவும் மதமும், புத்தகங்கள், மதம், குடிக்க, காரணம், காலத்தில், சட்டம், குடித்தால், ஆகவே, மாட்டார்கள், அர்த்தமுள்ள, குடிகாரன், குடிக்கும், மதமும், மதுவும், செய்ய, குடித்து, உள்ளே, இந்துமதம், முடியும், நான், அளவு, முடியாது&, முடியாது, இந்து, மதுவினால், அந்நாளில், ஏராளம், அந்தக், கொடுக்க, குடிக்கத், அதிகமாகிறது, சாப்பாடு, குடிக்கிறோம், தொடங்கினார்கள், கூட்டமாகக், குடிகாரர்கள், ரவுண்டு, தனியாகக், குறைக்காது, வேண்டிய, ஒழிக்க, மறைக்க, ஒழுக்கக், என்பது, சிறந்த, பழக்கம், முழுக்க, விலைமாதர், இருந்து, தவிர, அவனுக்கு, யாரும், அவன், கொண்டு, வெளியே