அர்த்தமுள்ள இந்துமதம் - விரும்பாதவனும் முடியாதவனும்
ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டு அடுத்தவனுக்கு அரை ஏக்கர் கூடக் கொடுக்க விரும்பாதவன் இறுதியில் அனுபவிக்கப் போவது எத்தனை ஏக்கர்?
வெறும் ஆறடிதான்!
இந்து சம்பிரதாயத்தில் அதுகூடக் கிடையாது.
ஆறடி நிலத்தில் மாறி மாறி மாறி ஆயிரக்கணக்கானவர்கள் கொளுத்தப்படுகிறார்கள்.
இறைவன் தன்னுடைய விருப்பத்தைப் பூமியில் எப்படிப் பரவலாக வைத்தான்?
நீ சிந்தும் துளித் தண்ணீர், எறும்பு குளிக்கும் படித்துறையாகி விடுகிறது.
கழுதைக்கும் உணவாகட்டும் என்றுதானே காகிதத்தைக் கண்டு பிடிக்கும் அறிவை மனிதனுக்குக் கொடுத்தான்.
விளைவுகளில் நல்லவை எல்லாம் இறைவனது விருப்பத்தின் விளைவுகளே!
`நெல்’ என்று ஒன்றை அவன் படைக்க விரும்பாமல் இருந்திருந்தால், `சோறு’ என்ற ஒன்றை நாம் கண்டிருக்க மாட்டோம்.
`இறைக்கின்ற கேணி ஊறும்’ என்று ஏன் கூறுகிறார்கள்?
`கொடுக்கின்ற இடத்திலேதான் இறைவன் அருள் சுரக்கும்’ என்பதால்.
தேங்கிய நீர் தேங்கியே கிடந்து விட்டால், நோய்களுக்கு அது காரணமாகிறது.
தேங்கிய செல்வமும் தேங்கியே கிடந்து விட்டால் பாவங்களுக்கு அது காரணமாகி விடுகிறது.
இல்லாமை கொடுமையல்ல; இயலாமை குற்றமல்ல; விரும்பாமையே பாபமாகும்.
மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்து விட்டால் `சமதர்மம்’ என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபடப் போகிறது?
ஒவ்வொரு மனிதனும் ஏதோ அகத்தியர் காலத்திலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பது போலவும், இன்னும் ஆயிரம் ஆண்டுக் காலத்துக்கு வாழப்போவது போலவும் திட்டமிட்டே பொருள்களைப் பதுக்கி வைக்கிறான்.
குருட்டுப் பிச்சைக்காரனின் சட்டியில் பத்துப் பைசாவைப் போட்டுவிட்டு இருபது பைசாச் சில்லரை எடுப்பவனும் இருக்கிறான்.
செய்ய விரும்பாமையும், திருட்டுத்தனமுமே சமூகத்தைப் பாழ்படுத்துகின்றன.
பிள்ளையே இல்லாத ஒரு கோடீஸ்வரர், எல்லையே இல்லாத ஒரு வீடு கட்டி இருக்கிறார்.
கணவனும் மனைவியும் மட்டுமே மாடி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் விரும்பினால் எத்தனையோ சுற்றங்களை வாழ வைக்கலாமே!
மனக் கதவு அடைத்துக் கொண்டது; அதனால் வாசற் கதவும் அடைப்பட்டு விட்டது!
கடைசியில் அவரது சமாதியாவது அந்த வீட்டிற்குள் அமையப் போகிறதா என்றால் இல்லை.
அவரது வேலைக்காரனை எரித்த இடத்திலே தான் அவரையும் எரிக்கப் போகிறார்கள்.
வெறும் பிரமை, மயக்கம், சகலமுமே நிலையாகி விட்டது போல் தனக்குள்ளே ஒரு தோற்றம்!
இத்தகைய மூடர்களுக்காகவே இந்து மதம் நிலையாமையைப் போதித்தது.
திரும்பத் திரும்ப, `நீ சாகப் போகிறாய், சாகப் போகிறாய்’ என்று சொல்வதன் மர்மம் இதுதான்.
நிலையாமையை எண்ணி விரும்பாமையைக் கைவிடு.
உன்னைப் பற்றிய புள்ளி விவரம் கணக்கெடுக்கப்படும் போது எத்தனை வீடு கட்டினாய் என்று கணக்கு எடுக்கப்படுவதில்லை. எவ்வளவு செய்தாய் என்பதே ஏட்டுக்கு வருகிறது.
எந்த நிலத்திலும் ஏதாவது ஒன்று விளையும். குறைந்த பட்சம் பறங்கியும் பூசணியுமாவது விளையும்.
நீ குறைந்தபட்சம் விரும்பி அதைச் செய்தால், அதுவே உன்னைப் பெரிய தோட்டக்காரனாக்கி விடும்.
மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது என்றும், திருஷ்டி படும் என்றும் இந்துக்கள் ஏன் சொல்கிறார்கள்?
`பிறருக்குப் பகிர்ந்து உண்ணாமை பாபம்’ என்று அப்படிச் சொல்கிறார்கள்.
சரியோ தவறோ, செய்ய முடியாதவனுக்கு நல்ல இருதயத்தையும், செய்ய விரும்பாதவனுக்குச் செல்வத்தையும் வழங்கியிருக்கிறான் இறைவன்.
கடலிலே நீரை வைத்து அதைக் குடிக்க முடியாமல் ஆக்கியவனல்லவா அவன்!
இதற்குக் காரணம் உண்டு.
ஒவ்வொருவருடைய புத்தியையும் அளவெடுப்பதற்கு இறைவன் நடத்தும் லீலை அது.
அனுபவத்தின் மூலம் ஒன்று நன்றாகத் தெரிகிறது.
செய்ய முடிந்தும் விரும்பாதவனுடைய செல்வம் மோசமான முறையில் அழிந்து போகிறது. அவனுடைய மரணமும் அப்படியே!
செய்ய விரும்பி முடியாதவனுடைய நிலை முடிவில் நிம்மதியடைகிறது.
காரணம், அவனிடம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும், ஆண்டவனுக்கும் தெரியும்.
இதுவரையில் தர்மம் செய்யாத பணக்காரன் நிம்மதியாகச் செத்ததும் இல்லை; அவன் சந்ததி அந்தச் செல்வத்தை அனுபவித்ததும் இல்லை.
ஏன், பலருக்குச் சந்ததியே இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - விரும்பாதவனும் முடியாதவனும், செய்ய, புத்தகங்கள், இல்லை, இறைவன், விட்டால், விரும்பாதவனும், மாறி, இந்துமதம், அவன், அர்த்தமுள்ள, முடியாதவனும், ஏக்கர், போது, சாகப், அவரது, உன்னைப், விரும்பி, காரணம், தெரியும், சொல்கிறார்கள், என்றும், விளையும், விட்டது, ஒன்று, தேங்கியே, வெறும், இந்து, எத்தனை, ஆயிரம், சிறந்த, விடுகிறது, ஒன்றை, போலவும், இல்லாத, போகிறது, கிடந்து, தேங்கிய, வீடு