அர்த்தமுள்ள இந்துமதம் - வள்ளுவர் ஓர் இந்து-கவியரசு கண்ணதாசன்
அஃதன்றியும், ஒரு குறளில் இந்துக்களுக்கு மட்டுமே உரிய இந்திரனைச் சாட்சிக்கழைக்கிறார் வள்ளுவர். வேறு எந்த மதத்தவருக்கும் `இந்திரன்’ என்று ஒருவன் இல்லை. அதிலும் இந்திரன் சம்பந்தப்பட்ட இந்து மதம் ஒன்றையே வள்ளுவர் உவமிக்கிறார்.
ஐந்தவித்தான் ஆற்றல்அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி.
ஐந்து பொறிகளையும் அடக்காது சாபம் எய்திய இந்திரன், அடக்குவோனுடைய ஆற்றலுக்குச் சான்றாகிறான் என்கிறார்.
கெட்டுப் போனவனைக் காட்டி நல்லவனைப் புகழ்வது போல், பொறி அடக்காத இந்திரனைக் காட்டி அடக்குவோரின் ஆற்றலை வியக்கிறார் வள்ளுவர்.
இந்துக்களின் புராணப்படி, `அகல் விசும்புளார் கோமான்’ என்றே இந்திரனை அழைக்கிறார்.
அவர் கூறும் உவமான கதை அகலிகையின் கதையாகும்.
இன்னுமோர் இடத்தில்,
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை -என்கிறார்
இந்துக்களின் இறைவனுக்கு மட்டுமே எட்டு குணங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. (அதாவது, பரமசிவனுக்கு.)
பரிமேலழகர் சொற்படி அந்த எட்டு குணங்கள் கீழ்க்கண்டவை.
தன் வயத்தனாதல்
தூயவுடம்பினனாதல்
இயற்கையுணர்வினனாதல்
முற்றுமுணர்தல்
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
பேரருளுடைமை
முடிவிலாற்றலுடைமை
வரம்பில் இன்பமுடைமை
- சைவ ஆகமத்திலும் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
அப்பர் சுவாமிகளும், `எட்டு வான் குணத்து ஈசன்’ எனப் பாடினார்.
கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
என்றொரு குறள்.
இதில் `வாலறிவன்’ என்பது, மற்ற மதக் கடவுள்களையும் குறிக்கக்கூடிய மயக்கத்தைத் தரும். ஆயினும், எங்கும், எப்பொழுதும், தானாகவே அனைத்தையும் அறியும் ஞானத்தைக் குறிப்பதால், `அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தமூர்த்தியாகி’ நிற்கும் ஈசனைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
அதுபோலவே, `தனக்குவமை இல்லாதான்’ என்ற சொல்லும் மயக்கத்தைத் தரும். ஆயினும், அதுவும் ஈசனைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள முடியும்.
அப்பர் சுவாமிகள் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் ஜி. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் இதனை விளக்கியிருக்கிறார்கள்.
ஒரு குறளில் வரும் `மலர்மிசை ஏகினான்’ என்ற வார்த்தை பல பொருள் தருமாயினும், பரிமேலழகர் உரைப்படியும், பிற்கால நாயன்மார்கள் பாடல்களின் படியும், அதுவும் சிவபெருமானையே குறிக்கின்றது.
பிறவியைப் `பெருங்கடல்’ என்று இந்துக்கள் மட்டுமே குறிப்பதால், நான் முன்பு சொன்ன அந்தக் குறளும் வள்ளுவன் ஓர் இந்துவே எனக் காட்டுகிறது. மற்றும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
- என்றும்,
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
- என்றும்,
இந்துக்களின் துறவுத் தத்துவத்தையும், தலைவன் பெயரையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
வள்ளுவர் கூறும், `தானமும் தவமும்’ இந்துக்களின் மரபுகளே.
துறவறத்தின் பெருமையைப் புத்தமதமும் கூறுமாயினும், இந்திரனைப் பற்றிய குறிப்பு வள்ளுவரின் `நீத்தார் பெருமை’ என்ற அதிகாரத்திலேயே வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வள்ளுவப் பெருந்தகை, தொட்ட இடமெல்லாம், இந்துக் கடவுள்களையும், இந்துக்களின் மரபையுமே கூறுவதால், அவரும் ஓர் இந்துவே என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை.
அவரைத் தூக்கத்தில் தட்டி எழுப்பியிருந்தாலும், `இறைவா’ என்றுதான் சொல்லி இருப்பார்.
அறத்துப்பாலில் காணும் அறமும், பொருட்பாலில் காணும் பொருள்களும், தமிழர்களுக்கு மட்டுமே உரியவையாக அன்று இருந்தன.
ஆகவே, தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே ஒரு தமிழனே என்பது எனது துணிபு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - வள்ளுவர் ஓர் இந்து-கவியரசு கண்ணதாசன், வள்ளுவர், புத்தகங்கள், இந்துக்களின், இந்து, மட்டுமே, கண்ணதாசன், கவியரசு, அர்த்தமுள்ள, இந்துமதம், என்பது, ஆயினும், தரும், கடவுள்களையும், எங்கும், மயக்கத்தைத், ஈசனைக், என்றும், காணும், பற்றுக, இந்துவே, அப்பர், அதுவும், குறிப்பதால், எட்டு, முடியும், குறளில், நான், குறிப்பதாக, சிறந்த, வரும், இந்திரன், விசும்புளார், குணங்கள், பரிமேலழகர், கூறும், காட்டி, என்கிறார், இவ்வாறு