அர்த்தமுள்ள இந்துமதம் - நல்ல மனைவி
`அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’
என்பதே இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி.
இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.
அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.
ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.
அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை
வளரும்.அவளைக் காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.
கனவு காணும்.
கற்பனை செய்யும்.
மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.
அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!
உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.
அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.
பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்து விட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறியமுடியாமல் போகிறது.
ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.
அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளியாகிறது.
அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.
எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.
கார்யேஷஷ தாசி
கரணேஷஷ மந்திரி
ரூபேஷஷ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷஷ மாதா
சயனேஸு வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம பத்தினி
சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்
நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.
`கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.
(வட மொழியில் `தாசி’ என்றால் அடிமை.)
அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.
`பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார் களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.
அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.
காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.
அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
என்றான் வள்ளுவன்.
`ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.
எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்று அதிர்ச்சியைத் தருமென்றால், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.
இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டு விடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.
ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.
பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.
கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.
அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
நல்ல குலப்பெண்களால் அது முடியும்.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்கவேண்டும்.
`தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.
பள்ளியறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.
கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்கவேண்டும்.
மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - நல்ல மனைவி , வேண்டும், அவள், போலவும், நல்ல, இருக்க, உடல், புத்தகங்கள், உண்டு, அந்தக், காதல், இந்துமதம், ஆத்மாவின், தோன்றும், அந்த, சுலோகம், மனைவி, அர்த்தமுள்ள, கணவனுக்கு, அன்போடு, ஊட்டுவதில், மந்திரியைப், பூமாதேவியைப், கணிகையைப், என்னென்ன, அழகு, மகாலட்சுமி, நடந்து, போல், இருக்கவேண்டும், மீண்டும், போட்டு, கட்டி, இயங்க, என்றால், மாதிரி, யோசனை, நேரங்களில், ஒருத்தியே, பார்க்க, மட்டுமே, பெண்ணின், உந்தித், இச்சை, புனிதமான, சிறந்த, தேர்ந்தெடுப்பதில், பருவத்தில், ராகம், இச்சையால், லட்சுமி, குலதர்ம, பத்தினி, விடுகிறார்கள், பார்த்து, எந்த, பெண்ணைத், தவறான, செய்வதில்