புறநானூறு - 367. வாழச் செய்த நல்வினை!
பாடியவர்: அவ்வையார்.
திணை: பாடாண்.
துறை: வாழ்த்தியல்.
சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்
ஒருங்கிருந்தாரைப் பாடியது.
நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினும் தம்மொடு செல்லா; வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, |
5 |
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; வாழச் செய்த நல்வினை அல்லது, |
10 |
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்; யான் அறி அளவையோ இவ்வே; வானத்து |
15 |
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்து இயங்கும் மாமழை உறையினும், உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே! |
வானத்து மீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருக வேண்டும். ‘இம்’ என்று பொழியும் மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருகவேண்டும். நில உலகினைச் சூழ்ந்துள்ள மண்டிலம் தேவருலகம் போல இனிமையானது. அது ஞாயிறு, திங்கள் இரண்டுக்கும் உரிமையானது. என்றாலும் இந்த இரண்டு சுடர்களும் இணைந்து செல்வதில்லை. நீங்களோ மூவரும் இணைந்து காட்சி தருகிறீர்கள். இந்த உலகம் ஆளும் உங்களுடையதுதான். என்றாலும் அது நோன்பு இயற்றியவர்களுக்கே உரியது. நீங்கள் பார்ப்பார்க்கு வழங்க வேண்டும். ஏந்தி நிற்கும் அவர்களின் கையில் பூவும் பொன்னும் வழங்க வேண்டும். நீர் ஊற்றித் தாரை வார்த்து வழங்க வேண்டும். மகளிர் பொன்-கிண்ணத்தில் தரும் தேறலைப் பருகவேண்டும்.இரவலர்களுக்கும் அரிய அணிகலன்களை வழங்கவேண்டும். தனக்கென வைத்துக்கொள்ளாமல் வழங்கவேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் எல்லாம் வழங்கவேண்டும்.இவ்வாறு வாழ்ந்து உங்கள் வாழ்நாள் பெருகவேண்டும். பிறரை வாழச்செய்வதுதான் நல்வினை. இந்த நல்வினை உங்களை ஏற்றிச் செல்லும் மிதவையாக உதவும். வாழ்க்கைத் துன்பத்தில் மூழ்கும்போது உதவும். இந்த நல்வினை போல வாழ்க்கைக்கு இன்பம் தந்து உதவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 367. வாழச் செய்த நல்வினை!, நல்வினை, வேண்டும், வாழச், செய்த, இலக்கியங்கள், வழங்க, வழங்கவேண்டும், புறநானூறு, பெருகவேண்டும், காட்டிலும், உதவும், என்றாலும், வாழ்நாள், இணைந்து, எண்ணிக்கையைக், மகளிர், மண்டிலம், சங்க, எட்டுத்தொகை, பார்ப்பார்க்கு, பூவும், இல்லை, பொன்னும், வானத்து