புறநானூறு - 365. நிலமகள் அழுத காஞ்சி!
பாடியவர்: மார்க்கண்டேயனார்
திணை: பொதுவியல்
துறை: பெருங்காஞ்சி
மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக, இயங்கிய இருசுடர் கண் எனப், பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம், வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப், |
5 |
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின் முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும் விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற, உள்ளேன் வாழியர், யான் எனப் பன்மாண் நிலமகள் அழுத காஞ்சியும் |
10 |
உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே. |
கருநிறத் தொகுதியாக மயங்கிக் கிடக்கும் விசும்பு நிலமகளின் முகம்.ஞாயிறும் திங்களும் நிலமகளின் கண்கள். கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் காற்று நிலமகளின் இடை.கண்ணுக்குத் தெரியும் கடல்வெள்ளம் நிலமகளின் இயக்கம் [வழக்கு]. வயிரக் குறடு போலத் தகதகக்கும் மலையருவி நிலமகளின் மணியாரம்.இப்படித் திகழும் நிலமகளைப் பொன்னாலான ஆட்சிச் சக்கரத்தைப் பூட்டி உருட்டினான் அரசன். தன்னை எதிர்த்துப் போரிடுவோர் காணாது அவன் தானே உருட்டினான். இப்படிப்பட்ட வலிமை [முன்பு < முன்பின்] மிக்க பல முன்னோர் உருட்டினர்.அவர்கள் எல்லாருமே சென்றுவிட்டனர். நிலமகளாகிய நான் மட்டும், விலைமகளின்மீது ஏறியவர்களெல்லாம் அவளைப் புகழ்வது போல, என்னமீது ஏறியவர்களெல்லாம் என்னைப் புகழ வாழ்ந்துகொண்டிருக்கிறேனே என்று நிலமகள் கண்ணீர் விட்டு அழுகிறாளாம். விலைமகள் அழுவது போல அழுகிறாளாம். பலமுறை [பன்மாண்] அழுகிறாளாம். வாழியர் என்று மற்றவர்களை வாழ்த்திவிட்டு அழுகிறாளாம். இது மக்களைப் பொறுத்தமட்டில் நிலையாமையாகிய காஞ்சி.நிலமகளைப் பொறுத்தமட்டில் நாடு பிடிக்கும் வஞ்சிப் போரை எதிர்க்கும் காஞ்சிப் போர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 365. நிலமகள் அழுத காஞ்சி!, நிலமகளின், நிலமகள், இலக்கியங்கள், அழுகிறாளாம், அழுத, காஞ்சி, புறநானூறு, நிலமகளைப், கண்ணுக்குத், ஏறியவர்களெல்லாம், பொறுத்தமட்டில், உருட்டினான், முன்பின், சங்க, எட்டுத்தொகை, எனப், வயிரக், வாழியர், முன்னோர், பன்மாண்