புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!
பாடியவர்:பெருந்தேவனார்.
பாடப்பட்டோன்: இறைவன்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை; ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப; கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை |
5 |
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; |
10 |
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய, நீரறவு அறியாக் கரகத்துத், தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. |
தலையில் கொன்றைப் பூ சூடியவன்.மார்பில் கொன்றை-மாலை அணிந்தவன்.ஊர்தி வெண்ணிறக் காளைமாடு.கொடியும் காளைமாடு என்று கூறுகின்றனர்.தொண்டையில் நஞ்சுக் கறை. அந்தக் கறை அந்தணர் மறையில் போற்றப்படுகிறது.ஒருபாதி (இடப்புறம்) பெண்-உருவம்.அதனைத் தனக்குள் மறைத்துக்கொள்வதும் உண்டு.நெற்றியில் பிறை. அந்தப் பிறையை 18 வகையான தேவ கணங்களாலும் போற்றி வணங்கப்படும்.அவன் எல்லா உயிரிங்களுக்கும் பாதுகாவலாக விளங்குபவன். நீர் வற்றாத கரகத்தைக் கையில் வைத்திருப்பவன்.தாழ்ந்த சடைமுடியிலும் நீர் வற்றுவதில்லை.இந்தக் கோலத்தில் அவன் தவம் செய்துகொண்டிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!, இலக்கியங்கள், கொன்றை, இறைவனின், புறநானூறு, திருவுள்ளம், பிறை, எல்லா, ஆகின்று, நீர், அவன், காளைமாடு, கொடியும், எட்டுத்தொகை, சங்க, ஊர்தி, அந்தணர், படுமே