நற்றிணை - 5. குறிஞ்சி

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப, பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி |
5 |
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும், அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல் இளையர்த் தரூஉம் வாடையொடு மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே. |
தோழீ! இன்று பிரிந்து செல்லுகின்ற தோழியரை மீட்டும் நின்னை ஆற்றுவிக்குமாறு கூட்டுகின்ற வாடைக் காற்றினால் வருந்திய இமைகளையுடைய மழைபோல நீர்வடிக்கின்ற நின்கண்கள்தாம்; அவர் செல்லாதவாறு ஒரு குறிப்பாகிய தூதைத் தோற்றுவித்து விடுத்தன, அங்ஙனம் விடுத்த தூதின் காரணமாக; இனி மிக்க மழை பெய்தலாலே நிலம் நீரால் நிரம்பப் பெற்று நிறையவும், மலைமேலுள்ள மர முதலாயின தழைப்பவும், அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையில் நீர் நிறைதலால் அங்கு முளைத்தெழுந்த குளநெல் முதலிய பயிர்கள் நெருங்கி வளரவும்; கொல்லையின் கண்ணே குறவர் வெட்டியழித்தலானே குறைபட்ட மிக்க நறைக்கொடி மீண்டுந் தளிர்த்துக் கொடியாகி நறுமணங் கமழ்கின்ற வயிரமுற்றிய சந்தன மரத்தின் மீது படர்ந்து சுற்றியேறவும்; பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகமானது; தென்றிசையின் கண்ணே யெழுந்து செல்லுதலாலே பிரிந்தோர் இரங்குகின்ற முன்பனிக்காலத்தும்; நீ நின் காதலரைப் பிரிந்து உறைதல் அரியதாகும்;
தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது. - பெருங்குன்றூர்கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 5. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, இன்று, பிரிந்து, மிக்க, கண்ணே, பொழிந்த, நீர், எட்டுத்தொகை, சங்க, நிலம், குறவர்