நற்றிணை - 349. நெய்தல்
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும், கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும், கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் |
5 |
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை, ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல, பின்னிலை முனியா நம்வயின், என் என நினையும்கொல், பரதவர் மகளே? |
10 |
விரைந்த செலவினையுடைய தேரிலேறிச் சென்றும் பின்பு காலால் நடந்து சென்றும் இவளுக்கு ஏவல் செய்து ஒழுகுபவனாகி; வளைந்த கழியருகினுள்ள அடும்பின் மலரைப் பறித்தும்; தாழம் பூவைப் பறிக்குமாறு இவளைத் தூக்கிநின்றும்; தழையுடை புனையவேண்டி நெய்தலந்தளிரையும், சூட அதன் மலரையுங் கொய்து கொடுத்தும்; நாம் காதலியை முயங்கினாம் போலக் கருதிய உள்ளத்துடனே நாள்தோறும் இத்தன்மையேமாய் இராநிற்கவும்; புனைந்த மாலையணிந்த பசிய பூணையுடைய அரசர்கள் போரிலே மடிந்த பாசறையின் கண்ணே; விளங்குகின்ற படைக்கடலிலே களிற்று யானை படுமாறு போர் செய்தலானாகிய பெரிய புண்ணுற்றுக் கிடந்தாரை; வேறு காப்போர் இன்மையால் அவருடைய உயிர் போமளவும் ஓரியும் பாறும் நரியும் கடித்து அவர் தசையைக் கொள்ளுமேயென்று இரக்கமுற்றுப் பேய் தானே காத்து நின்றாற்போல; இத்தோழியின் பின்னின்று இவள் ஆராயுமளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து; நம்காதலியாகிய பரதவர் மகள் எவ்வண்ணம் மாறுபாடாகக் கருதி யிருக்கின்றனளோ?;
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. - மிளை கிழான் நல்வேட்டனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 349. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, சென்றும், பரதவர், சங்க, எட்டுத்தொகை