நற்றிணை - 335. நெய்தல்

திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே; ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற் பல் பூங் கானல் முள் இலைத் தாழை சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, |
5 |
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு மை இரும் பனைமிசைப் பைதல உயவும் அன்றிலும் என்புற நரலும்; அன்றி, விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் யாமம் உய்யாமை நின்றன்று; |
10 |
காமம் பெரிதே; களைஞரோ இலரே! |
திங்களும் விளங்கிய விசும்பின்கண்ணே எழுந்து தோன்றாநிற்கும்; மெல்லிய நீர்மையிற் பொங்கி எழுகின்ற அலையையுடைய கடலும் ஒலி அடங்கியதில்லை; ஒலிமிகுந்து அக் கடனீரும் கரையை மோதிப் பெயர்ந்து செல்லாநிற்கும்; நிறைந்த கழிநீர் சூழ்ந்த பலவாய அழகிய கடற்கரைச் சோலையின்கணுள்ள முள்ளையுடைய இலை மிக்க தாழை; சோற்றைச் சொரிகின்ற குடம்போலப் பருத்த உள்ளீட்டினையுடைய கூம்பிய அரும்பு மலராநிற்ப; காற்றானது அப் பூ மடலினுள்ளே புகுந்து பரவி வந்து வீசுகின்ற கெடாத நறுமணத்தடனே; கரிய பெரிய பனைமேலிருந்து துன்பத்தைத் தருவனவாய் வருத்துகின்ற அன்றிற் பறவையும் என் பக்கத்தே வந்து ஒலியாநிற்கும்; இவையேயன்றி, விரலாலே தடவி வருந்தி இசை கூட்டிய விருப்பத்தைச் செய்யும் நல்ல யாழும் இரவு நடுயாமத்து யான் உயிர் வைத்து உய்யாவாறு இசையாநின்றது; அவை அனைத்தினுங் காட்டில் யான் கொண்ட காமமோ பெரிதாயிராநின்றது; இதனைப் போக்க வல்ல காதலரோ அருகில் இல்லாது ஒழிந்தகன்று போயினார், இனி யான் எவ்வாறு உய்குவேன்?
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 335. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், யான், நற்றிணை, மிக்க, வந்து, காமம், திங்களும், எட்டுத்தொகை, சங்க, தாழை