நற்றிணை - 329. பாலை

வரையா நயவினர் நிரையம் பேணார், கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன் இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது, புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி |
5 |
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர் ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும், அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து அல்கலர் வாழி- தோழி!- உதுக் காண்: இரு விசும்பு அதிர மின்னி, |
10 |
கருவி மா மழை கடல் முகந்தனவே! |
தோழீ! வாழ்வாயாக!; அளவு படாத நயமுடையராய் நிரையம் போன்ற தீய நெறியைக் கைக் கொள்ளா தொழுகும் நங்காதலர்; சுரத்திலே கொன்று போகடப்பட்ட மக்களினுடைய கொலையுண்ட பிணங்களில் உள்ள நிறைந்த தீ நாற்றத்தையுடைய அவற்றின் அருகிலே சென்று பறித்துத் தின்ன இயலாது; ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போயிருந்த புள்ளிகளையுடைய முதிய பருந்து தன் சிறகை அடித்துக் கொள்ளுதலால் உதிர்ந்த பறத்தலையுடைய புல்லிய இறகை; சிவந்த அம்பிலே கட்டிய வீரத்தன்மையுடைய மறவர்; தாம் வெற்றி கொள்ளும் கருத்துடனே நெறியைப் பார்த்து உறைகின்ற மலைவழியிலே சென்றனராயினும்; நம்மைக் கைவிட்டு அங்கே தங்குபவரல்லர்; அவர் கார்காலத்து வருவே மென்றார் ஆதலின் உவ்விடத்தே பாராய்! கரிய ஆகாயம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கடனீரை முகந்து வந்தன; அவர் இன்னே வருகுவர் போலும்;
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது. - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 329. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, மின்னி, அவர், கரிய, தோழி, நிரையம், எட்டுத்தொகை, சங்க, கொன்று, பார்த்து