நற்றிணை - 282. குறிஞ்சி
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ, கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட, நல் நுதல் சாய, படர் மலி அரு நோய் காதலன் தந்தமை அறியாது, உணர்த்த, அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் |
5 |
கிளவியின் தணியின், நன்றுமன்- சாரல் அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை, ஆடு மழை மங்குலின், மறைக்கும் நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே? |
தொகுதியாக அமைத்துச் செறித்தலையுடைய இலங்குகின்ற வளைகள் நெகிழ்ச்சியுறப் பக்கம் உயர்ந்த அல்குலினுடைய அழகிய வரிகள் வாட்டமடைய நல்ல நுதலின்கண்ணே பசலைபாயக் கவலைமிக்க நீங்குதல் அரிய நோயானது; நங் காதலனாலே தரப்பட்டதென்பதை அறியாது நம் அன்னை படிமத்தானுக்கு இவள் படும் நோயின் காரணம் தெரியவேண்டும் என்றறிவிப்ப; அந்த அறிவு வாய்ந்த வேலன் வெறிக்களத்து முருகவேளின் முன்பு இடப்பட்ட சுழற்சிக் கொட்டையைக் கொண்டு ஆராய்ந்து; முருகணங்கென்று அம் முருகவேளைத் துதித்தலாலே தணியப்படுமாயின் அது மிக நல்லதேயாம்; அங்ஙனம் வெறியுமெடுக்காது இல்வயிற் செறிக்கப்பட்டமையால்; இனிச் சாரலின்கண்ணே அகிலைத் தீயிட்டுக் கொளுத்துங் கானவன் ஆங்குள்ள சருகில் முதலிலே தீயிடுதலானே நறுமணம் வீசுகின்ற புகையானது இயங்குகின்ற மழைமேகம்போல் மறைக்கப்பட்ட நாடுவிளங்கிய சிலம்பனுடன்; விரும்பிப் பொருந்திய நமது தொடர்ச்சி கழிந்துவிட்டதுபோலும்;
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - நல்லூர்ச் சிறு மேதாவியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 282. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, சுடு, கானவன், வேலன், அறியாது, எட்டுத்தொகை, சங்க