நற்றிணை - 272. நெய்தல்

கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை, கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு, இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் |
5 |
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன் நல்காமையின், நசை பழுதாக, பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய் அம்பல் மூதூர் அலர்ந்து, நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே. |
10 |
கடலிலியங்கும் நீர்க்காக்கையிலே சிவந்த வாயையுடைய ஆண் காக்கையானது; நோன்பினையுடைய மாதர்கள் வைகுதல்வேண்டி ஆண்டுப் படர்ந்துள்ள கொடிகளைக் கொய்தலால் அழிபட்ட நெருங்கிய அவ்வடும்பின் கொடியையுடைய வெளிய மணற்பரப்பின் ஒருபால்; நிரம்பிய சூலுடனே தங்கிய தன்னால் விரும்பப்படுகிற பேடைக்கு; கரிய சேற்றின்கண்ணவாகிய அயிரை மீனைத் தேர்ந்தெடுக்க வேண்டி; தௌ¤ந்த கழியிடத்துப் பூவுதிரப்பெற்ற ஆழமான இடத்தினைத் தன் மூக்காலும் காலாலும் துழாவா நிற்கும் துறையையுடைய கொண்கன், நல்காமையின் நசை பழுதுஆக குறித்தபொழுது வந்து கூடித் தலையளி செய்யாமையால் யான் கொண்ட விருப்பம் வீணாகிவிட அதனாலே; செயலழிந்த என் பெரிய நோயானது; பழிமொழி கூறுகின்ற அம்பலையுடைய பழைய நமது ஊராரால் அறியப்பட்டு; முன்பு நான் கொண்டிருந்த நோயினுங் காட்டில் மிக்க நோயுடையதாகாநின்றது;
வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம். - முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 272. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், நல்காமையின், அயிரை, சங்க, எட்டுத்தொகை, பேடைக்கு